ஆரிய சங்கிகளும் தமிழ்த்தேச சங்கிகளும் ஆட்டம் போடும் இந்தக் காலகட்டத்தில் மார்க்சியம் பேசுவோரும், பெரியாரையும் அம்பேத்கரையும் உயர்த்திப் பிடிப்போரும், துண்டு துக்கடா அமைப்புகளாக சிதறுண்டு கிடப்பது காலக்கொடுமை! ஒவ்வொருவரும் தங்களுடைய அகந்தையை விட்டொழித்து எதிரிகளை வீழ்த்த ஒரே அமைப்பாய் ஒன்றிணையுங்கள். இல்லையேல் வரலாறு உங்களை மன்னிக்காது.
சரியானவர்கள் பலம் பெறுவார்கள், வளருவார்கள் என்ற சால்ஜாப் எல்லாம் இங்கு தேவையில்லை. அதற்குள் சங்கிகள் உங்களது சல்லி வேரையே அறுத்து விடுவார்கள். இதில் கூத்து என்னவென்றால் ஒரே பெயரில் மூன்று, நான்கு கோஷ்டிகள். மூன்று பேர் நின்று முஷ்டியை உயர்த்தினாலே புரட்சி வந்துவிட்டதாக பம்மாத்து வேறு!
சமூகத்தை மாற்ற நினைக்கும் சிறு சிறு அமைப்புகள் பெரும்பாலும் மார்க்சையும் பெரியாரையும் அம்பேத்கரையும் ஏற்றுக் கொண்டவர்கள்தான். பிறகு எதற்குத் தனித்தனி அமைப்புகள்?
எழுத்துக்களில் புரட்சியைத் தேடியது போதும். உங்களது பங்காளிச் சண்டைகளில் போராட வருவோரின் வாழ்க்கையை நாசமாக்காதீர்கள்.
டங்ஸ்டன் எதிர்ப்புப் போராட்டத்தில் எளிய மக்கள் தங்களது ஒற்றுமையை பறைசாற்றி இருக்கிறார்கள். அவர்கள் மார்க்சையும் பெரியாரையும் அம்பேத்கரையும் படிக்கவில்லை. ஏன் டங்ஸ்டன் எதற்குப் பயன்படும் என்பதுகூட அவர்களுக்குத் தெரியாது. தங்கள் வாழ்வு பரிபோகும் என்பதைத் தவிர அவர்களுக்கு வேறு எதுவும் தெரியாது.
சங்கிகளால் நாடே நாசமாகிக் கொண்டிருக்கிறது. எல்லாம் தெரிந்த நீங்களோ உங்களது சித்தாந்தம்தான் உயர்ந்தது என்று இன்னமும் சிலாகித்துக் கொண்டிருக்கிறீர்கள்.
இதையெல்லாம் நினைத்துப் பார்க்கும் பொழுது சங்கிகளுக்கு எதிரான கோபத்தைவிட உங்களுக்கு எதிராகத்தான் கோபம் அதிகரிக்கிறது.
சீமானின் சில்லறைகளைப் போல நீங்களும் உங்களது அமைப்புகளில் தற்குறிகளாய் இருக்கப் போகிறீர்களா இல்லை இன்றைய அவல நிலையை எண்ணி தலைமையைத் தட்டி கேட்கப் போகிறீர்களா?
கடந்த 40 ஆண்டு காலத்தில் எண்ணற்ற தியாகங்களையும் அர்ப்பணிப்புகளையும் இழுப்புகளையும் சந்தித்து இன்றைய நிலை கண்டு நொந்து போனவனின் குரல் இது.
தமிழ்மணி
No comments:
Post a Comment