இதோ மார்கழியும் பொறந்தாச்சு. காதைப் பொளக்கும் ஒலி மாசும் கிளம்பியாச்சு. மார்கழி, அவனுக்கு இது ஆன்மீகப் பீடை. கோவில்களை ஒட்டி வாழும் பலருக்கோ இது காதை செவிடாக்கும் ஆரோக்கியப் பீடை.
"திருவண்ணாமலை மலைவலப் பாதையில் 250 டன் குப்பை அகற்றம்",
"மலையேறும் பக்தர்கள், நெகிழிக் கழிவுகளை மலையில் வீசிச் செல்வதால், அவற்றை அகற்றி மலையின் இயற்கைத் தன்மையைப் பாதுகாக்கக் கடலாடி பருவதமலை மீது ஏறுவதற்குக் கட்டணம் வசூல்",
என இன்றைய இந்து தமிழ் திசை நாளேட்டில் ஒரே மாதிரியான இரு வேறு செய்திகள்.
பக்தியின் பேரால் கேளிக்கை சுற்றுலா வரும் நகர்ப்புற காசு கொழுத்தக் கூட்டம் ஒன்று, நெகிழிகளில் புடைத்து துருத்தும் தீனிகளை வயிற்றுக்குள் திணித்து, காலி நெகிழிகளை மலைகளில் வீசி, கேளிக்கை முடிந்து திரும்பும் போது, தின்று செரித்தத் தீனிக்கழிவுகளை மலக்குவியலாய் எம்மண்ணில் கொட்டிச் செல்கிறது.
இவர்கள் நெகிழிகளையும், மலக் கழிவுகளையும் மட்டும் கொட்டிவிட்டுச் செல்லவில்லை; தாங்கள் இதுவரை பிறருக்குச் செய்த கேடுகளால் விளைந்த பாவச் சுமைகளையும் அல்லவா இங்கே இறக்கி விட்டுச் செல்கிறார்கள்.
உங்களின் கழிவுகளையும் பாவச் சுமைகளையும் சுமக்க எங்கள் ஊர்கள்தான் கிடைத்ததா? நாங்கள் என்ன பாவமடா செய்தோம்?
ஆண்டவன் 'தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான்' என்கிறீர்களே? உங்கள் வீட்டுத் தூணிலும் துரும்பிலும் எல்லாம் வல்ல இறைவன் இருப்பான்தானே? பிறகு ஏண்டா இங்கே வர்றீச்க? அவனை அங்கேயே கண்டு, இங்கே திங்கறதை அங்கேயே தின்று, கொட்ட வேண்டிய எல்லாக் கழிவுகளையும் பாவங்களையும் அங்கேயே கொட்டுங்களேன். உங்களுக்குக் கோடி புண்ணியமாய்ப் போகும்.
மனம் புண்பட்டதாகச் சொல்லி யாரும் சீற வேண்டாம். நீங்கள் கொட்டும் குப்பைகளால், புண்பட்ட இந்த மண்ணைக் கண்டு நெஞ்சம் குமுறும் ஒரு சாமான்யனின் குரல் இது. இந்தச் சாமான்யனை ஒரு சாதுவாகக் கருதி என் வாக்கைக் கேளுங்கடா. உங்களுக்கான அருள் வீடு தேடி தானாய் வரும்.
தமிழ்மணி
No comments:
Post a Comment