Thursday, 25 July 2024

வினவோடு வீணாய் போக வேண்டாம்!

இந்தியாவில் பொதுவுடமைக் கட்சி தொடங்கி நூறாவது ஆண்டை நெருங்க உள்ளதாம்.  மா-லெ இயக்கம் தொடங்கி ஐம்பது ஆண்டுகளைக் கடந்தும் புரட்சி முன்னேறவில்லையாம். இனி மக்கள் திரள் பேரெழுச்சிப் பாதையில் இந்தியப் புரட்சியை முன்னெடுக்கப் போகிறார்களாம். இப்படி அன்மையில் ஒரு அறிக்கையை வெளியிட்டிருக்கிறது வினவு கும்பல்.

மகஇக முன்னாள் மாநிலச் செயலாளர் தோழர் மருதையன் விலகளையொட்டி  கட்சி அணிகள் தொடுத்த கேள்விக் கணைகளைக் கண்டும்,  'பெல் சிட்டி' ஊழலுக்கு பழைய தலைமை துணை போனதால் எழுந்த பிரச்சனையை எதிர்கொள்ளத் திராணியற்று, பெரும்பான்மைக் கருத்தை ஏற்க மறுத்து, கட்சியை விட்டு ஓடிய பழைய தலைமையோடு ஓடியவர்கள்தான் இந்த வினவு கும்பல். அதன் பிறகு கட்சிப் பணத்தைப் பங்கு போடுவதில் ஏற்பட்ட தகராறில் அவர்களும் பிளவுண்டு. போனார்கள். 

இவற்றையெல்லாம் மூடி மறைத்து விட்டு, ஏதோ கட்சியில் வலது சந்தர்ப்பவாதப் போக்கு வந்ததனால்தான் கட்சிப் பிளவுபட்டதாகக் கதை அளக்கிறார்கள்.

தோழர் மருதையன் விலகளை தவறாகக் கையாண்ட பழைய தலைமை, அதே நேரத்தில் அப்பொழுது எழுந்த புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் மாநில பொதுச் செயலாளரின் 'பெல் சிட்டி' ஊழலுக்கு துணை போன பழைய தலைமை ஆகிய இரு காரணங்களுக்காகத்தான் பழைய தலைமை அமைப்பை விட்டு ஓடி தனியாகச் செயல்பட்டது. இதுதான் பிளவுக்கு அடிப்படையான காரணம். இவையெல்லாம் ஆவணங்களாக தொகுக்கப்பட்டுள்ளன.

தங்களை மிகப்பெரிய சித்தாந்தவாதிகளாக காட்டிக் கொள்வதற்காக அமைப்பில் வலது திசைவிலகல் தோன்றியதுதான் பிளவுக்குக் காரணம் என பழைய வெங்காயத்தையே தொடர்ந்து உரித்துக் கொண்டிருக்கிறது இந்த வினவு கும்பல். வினவு தளத்தை பெரும்பான்மையாக உள்ளவர்களிடம் ஒப்படைப்பதற்குப் பதிலாக நயவஞ்சகமாக வினவு இணைய தளத்தை கைப்பற்றிக் கொண்டது இந்த சதிகார கும்பல்.

இவர்கள் உரிக்கின்ற இதே வெங்காயத்தைத்தான் இவர்களிடமிருந்து பிரிந்து போன 'புரட்சிகர மக்கள் அதிகாரம்' என்ற பெயரில் செயல்படும் இன்னொரு குழுவும் உரித்துக் கொண்டு நாலு கால் பாய்ச்சலில் இந்தியப் புரட்சியை முன்னெடுப்பதாகக் கூறித் திரிகிறது.

ஒரு கட்சி அல்லது குழு என்று சொன்னால், அரசியல் பிரச்சனையாக இருந்தாலும் அல்லது அமைப்பு பிரச்சனையாக இருந்தாலும் அதில் பல நூறு கருத்துக்கள் வரத்தான் செய்யும். அதில் பெரும்பான்மைக் கருத்து எதுவோ அதை ஏற்றுக்கொண்டு, அந்த அமைப்பிலேயே தொடர்ந்து  செயல்படுவதுதான் ஜனநாயக மத்தியத்துவத்தை மதிக்கின்ற போக்காகும்.  

சிறுபான்மை கருத்து உடையவர்கள் தங்களுடைய கருத்தின் நியாயத்தை, அந்த அமைப்பிலேயே இருந்து கொண்டு தொடர்ந்து வலியுறுத்தி அவர்களுடைய கருத்தைப் பெரும்பான்மையாக்குவதற்கு முயற்சிப்பதுதான் ஜனநாயகத்தை மதிக்கின்ற போக்காகும். அதை விடுத்து எடுத்தேன் கவித்தேன் என்று சிறுபான்மை கருத்து உடையவர்கள் வெளியே சென்று தனியாக செயல்படுவது புரட்சிக்கும் மக்களுக்கும் செய்கின்ற துரோகமாகும்.

ஒருவேளை சிறுபான்மையாய் இருந்தாலும், தாங்கள்தான் மிகப் பெரிய அதிபுத்திசாலிகள் என்று கருதி வெளியேறும் பட்சத்தில், வெளியேறிய பிறகு வேறு ஒரு புதிய பெயரில் செயல்படுவதுதான் ஜனநாயகத்தை மதிக்கின்ற போக்காகும். ஆனால் இந்தச் சிறுபான்மை வினவு கும்பலோ, கட்சி மற்றும் மக்கள் திரள் அமைப்புகளான மகஇக, மக்கள் அதிகாரம், புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி என்கிற பெயரிலேயே செயல்பட்டு, பிற இடதுசாரி, ஜனநாயக சக்திகள் மற்றும் பொதுமக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது. 

ஆண்டுக்கு ஒரு முறை அரசியல் நிலைப்பாடுகளை மாற்றிக் கொள்கிற அளவுக்குத்தான் இவர்களுடைய அரசியல் புரிதலும் இருக்கிறது. அந்த அளவுக்கு இவர்கள் அரசியலில் கன்றுக்குட்டிகளாக இருந்து கொண்டு, புதியவர்களிடம் பழைய வரலாறுகளை மூடி மறைத்துவிட்டு மற்றவர்களைக் குறை கூறித் திரிகிறார்கள். ஆண்டுக்கு ஒரு முறை அரசியலை மாற்றிக் கொள்பவர்களுக்கு பழைய அமைப்பு பெயர்களைப் பயன்படுத்துவதற்கு எந்த அருகதையும் இல்லை.

வினவு கும்பலில் எஞ்சி இருக்கின்ற புரட்சியை நேசிக்கின்ற, ஜனநாயகத்தை மதிக்கின்ற தோழர்கள், அந்தக் கும்பலை விட்டு வெளியேறி தோழர் கோவன், ராஜூ தலைமையிலான தாய் அமைப்பில் இணைந்து செயல்படுவதுதான் இன்றைய காலத்தின் தேவை. இல்லையேல், வேலையை உதறித் தள்ளிவிட்டு, குடும்பத்தைப் பகைத்துக் கொண்டு, போராட்டம் வழக்கு, கைது, சிறை உள்ளிட்ட பல்வேறு இழப்புகளை எதிர்கொண்டு செய்கின்ற அத்தனை அர்ப்பணிப்புகளும், தியாகங்களும் விழலுக்கு இறைத்த நீராய்ப் போகும். இதை இப்போது அவர்கள் உணர முடியாது. 20, 30 ஆண்டுகளுக்குப் பிறகுதான் உணர முடியும். இதுதான் பழைய தோழர்களின் அனுபவம்.

வினவோடு இருந்து வீணாய்ப் போக வேண்டாம் என்று வேண்டுவதற்காகத்தான் இந்தப் பதிவு. வினவு கும்பலிடம் இருந்து பிரிந்து போன மற்றொரு சிறுபான்மை கும்பலான 'புரட்சிகர மக்கள் அதிகாரம்' தோழர்களுக்கும் இந்த வேண்டுகோளை சேர்த்தே முன்வைக்கிறேன்.

பல்வேறு சிறு சிறு குழுக்களாக பிளவுண்டு கிடக்கும் எல்லா மார்க்சிய - லெனினிய குழுக்களுக்கும் இந்தக் கட்டுரை சமர்ப்பணம்.

ஒரு சிலரின் அரசியல் அரிப்புக்காக பல நூறு தோழர்களின் உழைப்பு வீணாகக் கூடாது என்கிற ஆதங்கத்தின் வெளிப்பாடுதான் இந்தக் கட்டுரை. யாரையும் புண்படுத்துவதற்கோ மட்டம் தட்டுவதற்கோ அல்ல.

தமிழ்மணி

தொடர்புடைய பதிவுகள் 




Sunday, 7 July 2024

நக்சல்பாரி என்பவர் யார்? அவர் கொள்கை என்ன?

 

 



"கொலைக்களமாக மாறிவரும் சமூகச் சூழல்! இதற்கு முடிவே கிடையாதா?"

என்ற தலைப்பில் இன்று ஒரு கட்டரை வெளியிட்டிருந்தேன்

அந்தக் கட்டுரையை கீழ்கண்டவாறு முடித்திருந்தேன்.

"உள்ளாட்சி அமைப்புகளை நக்சல்பாரிகள் கைப்பற்றி,  நேர்மையோடும் போர்க்குணத்தோடும் செயல்பட முன்வராதவரை, உள்ளூர் அளவில் பிழைப்புவாதிகளும் இரவுடிகளும் தலையெடுப்பதும், அதைத் தொடர்ந்து உள்ளூர் அதிகாரிகள் துணையுடன் ஊழல் மற்றும் சமூக விரோதச் செயல்களில் ஈடுபடுவதும், இதில் ஏற்படும் போட்டி மற்றும் மோதல்களில் படுகொலைகள் நடப்பதும் தொடரவே செய்யும்.

மக்களின் அன்றாடத் தேவைகளில் கவனம் செலுத்தி, மக்களோடு மக்களாக பயணிப்பதற்கு உள்ளாட்சி அமைப்புகளில் செயல்படுகின்ற அணுகுமுறை வெகுவாக உதவும் என்றே நான் கருதுகிறேன். இதன் போக்கில்தான் பிழைப்புவாதிகளின் பிடியிலிருந்து மக்களை மீட்டெடுத்து அரசியல் படுத்தவும் முடியும்.
மாறிவரும் இன்றைய அரசியல் சூழலில், இது குறித்த விவாதங்கள் அவசியமானவை என்றே கருதுகிறேன்"

whatsapp குழுவில் பகிர்ந்த போது ஒரு நண்பர் கீழ்க்கண்ட கேள்வி எழுப்பி இருந்தார். 

"நக்சல்பாரி என்பவர் யார்? அவர் கொள்கை(கள்) என்ன (என்னென்ன)?"

அதற்கான எனக்கு பதில் கீழே, 

காரல் மார்க்ஸின் பொதுவுடமைக் கோட்பாடுகளை ஒட்டி, 1917 இல் ரஷ்யாவில் லெனின் தலைமையில் சோசலிசப் புரட்சி நடைபெற்றது. அதைத்தொடர்ந்து கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் கம்யூனிசப் புரட்சிகள் நடைபெற்றன.  1949 இல் சீனாவில் மாசேதுங்கின் (மாவோ) தலைமையில் சோசலிசத்துக்கு முந்தைய கட்டமான பொதுவுடைமை கோட்பாடுகளின் அடிப்படையிலான புதிய ஜனநாயகப் புரட்சி நடைபெற்றது.

இந்தியாவைப் பொருத்தவரை 1924 இல் இந்தியப் பொதுவுடமைக் கட்சி (CPI) தோன்றியது. இந்தக் கட்சி இந்தியாவில் அமைதி வழியில் சோசலிசப் புரட்சியை வலியுறுத்தியது. சீனாவில் நடைபெற்ற மக்கள் ஜனநாயக புரட்சியை ஒட்டி இந்த கட்சியில் இருந்த ஒரு சிலர், இந்தியாவிலும் அது போன்றதொரு மக்கள் ஜனநாயகப் புரட்சி நடத்த வேண்டும் என்று 1964 இல் இந்தியப் பொதுவுடமைக் கட்சியை (மார்க்சிஸ்ட்) -CPI(M) தோற்றுவித்தனர். அதே நேரத்தில் இவர்கள் மேற்குவங்க சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று மந்திரிசபையில் பங்கேற்றனர். 

நிலவுடமை பண்ணை ஆதிக்கச் சுரண்டல் கோலோச்சியச் காலம் அது. உழுபவனுக்கே நிலம் சொந்தபாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து இந்த கட்சியில் இருந்தவர்கள் மேற்குவங்க மாநிலம் டார்ஜிலிங் மாவட்டம், சிலிகுரி வட்டத்தில் உள்ள நக்சல்பரி என்ற கிராமத்தில் இருந்த நிலங்களைக் கைப்பற்றி ஏழை விவசாயிகளுக்கு உரிமையாக்கி அந்நிலங்களில் செங்கொடியை ஏற்றினர். அப்பொழுது மேற்கு வங்க உள்துறை அமைச்சராக இருந்த ஜோதிபாசு காவல்துறையை ஏவி அந்தப் போராட்டத்தைக் கடுமையாக ஒடுக்கினார்.


ஆனால், இந்த போராட்டம் நாடெங்கிலும் காட்டுத் தீயாய் பரவியது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து வெளியேறிவர்கள் சாரு மஜூம்தார் தலைமையில் 1967 இல் இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்- லெனினிஸ்ட்) - CPI(M-L) என்ற கட்சியைத் தோற்றுவித்தனர். 

சீனாவின் பாதையே நமது பாதை, இந்தியாவில் நீண்ட கால மக்கள் யுத்தம் என்ற போராட்ட முறையில் ஒரு புதிய ஜனநாயக அரசை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையோடு இந்தக் கட்சி செயல்பட்டது. ஆனால், அதே நேரத்தில் பண்ணையார்களையும் கந்துவட்டிக்காரர்களையும் படுகொலை செய்தனர். இரத்தத்தில் கை நனைக்காதவன் கம்யூனிஸ்டே அல்ல என்று முழுங்கும் அளவிற்கு இடது தீவிரவாதப் பாதையில் சென்றது. இத்தகைய படுகொலைகளைச் செய்வதன் மூலம் புரட்சியை சாதிக்க முடியாது, மாறாக ஒரு படையைக் கட்டி அரசுக்கு எதிராக போர் நடத்திதான் புரட்சி செய்ய வேண்டும் என்றும், படுகொலைகளுக்கு எதிரான கருத்துடையோர் கட்சியில் இருந்து வெளியேறி பல்வேறு பிரிவுகளாக பிளவுபட்டனர். 

இன்று அவர்கள் பல்வேறு குழுக்களாக செயல்படுகின்றனர். ஒரு சிலர் தேர்தல் அரசியலிலும் பங்கெடுத்து சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினராகவும் வருகின்றனர். 

ஆந்திராவில் செயல்படும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்) மட்டுமே கெரில்லாப் போராட்டம் நடத்தி வருகின்றனர். இது இந்தியாவில் தடை செய்யப்பட்ட கம்யூனிச அமைப்பாகும்.

நக்சல்பரி கிராமத்தில் நடைபெற்ற எழுச்சிக்குப் பிறகு 1967 இல்  உருவான கட்சியின் பின்னணியில் செயல்படுபவர்களை அந்த கிராமத்தைக் குறிக்கும் வகையில் நக்சல்பாரிகள் என்று அழைக்கப்பட்டனர். அரசும், போலீசும் மற்ற கட்சியினரும் அந்தச் சொல்லை இழிவு படுத்த வேண்டும் என்பதற்காக 'நக்சலைட்' என்று அழைத்தனர்.

இத்தகைய வரலாற்றுப் பின்னணியைக் கொண்ட தமிழகத்தில் செயல்படும் ஒரு குழுவின் வெளிப்படையான மக்கள் கலை இலக்கியக் கழகத்தில்தான் நான் தீவிரமாக செயல்பட்டு வந்தேன்.

நக்சல்பாரி பின்னணியைக் கொண்டவர்கள் மக்களுக்குத் துரோகம் செய்ய மாட்டார்கள், நேர்மையாக செயல்படுவார்கள், அடக்கு முறைகளுக்கு அஞ்ச மாட்டார்கள் என்பது இன்றளவும் கடைபிடிக்கப்படுகின்ற நடைமுறை. ஒருவேளை சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக ஒரு சிலர் தவறு செய்தால் அவர்களை அந்த அமைப்பில் இருந்து வெளியேற்றி விடுவார்கள். பாரிய தவறு என்றால் தண்டனையும் வழங்குவார்கள். 

நக்சல்பாரி பின்னணி என்பது நாட்டுப்பற்று, நாட்டு மக்கள் நலனை மட்டுமே மையமாகக் கொண்டதொரு பாரம்பரியம்.


நக்சல்பாரி பின்னணியைக் கொண்ட இயக்கங்கள் பல்வேறு குழுக்களாக இருந்தாலும் அவர்களுடைய பொது நோக்கம் இந்தியாவில் ஒரு புதிய ஜனநாயக அரசை நிறுவி அதன் தொடர்ச்சியாக சோசலிச, பொதுவுடமை அமைப்பை நோக்கி முன்னேற வேண்டும் என்பதுதான். இதை அடைவதற்கான நடைமுறையில் கருத்து வேறுபாடுகள் இருப்பதால்தான் அவர்கள் பல்வேறு குழுக்களாக இருக்கிறார்கள். 

மார்க்சிய கோட்பாடுகளை ஏற்றுக் கொண்ட இயக்கங்கள் உலகமெங்கிலும் எல்லா நாடுகளிலும் செயல்படுகின்றன என்பது ஒரு கூடுதல் தகவல். ரஷ்யாவில் சோசலிச வீழ்ச்சிக்குப் பிறகு உலகம் எங்கிலும் பொதுவுடமை இயக்கங்கள் பலவீனமாக உள்ளன என்பதும் மறுக்க முடியாத உண்மை.

ஆனால், மனிதகுல வரலாற்று நோக்கில் புராதான பொதுவுடைமைச் சமுதாயம், ஆண்டான் அடிமைச் சமுதாயம், நிலவுடமைச் சமுதாயம், முதலாளித்து சமுதாயம்,  சோசலிச சமுதாயம் என்பது தவிர்க்க முடியாத ஒரு வரலாற்று காலகட்டம். 

உலகம் எங்கிலும் தற்போது நடப்பது முதலாளித்துவ சமுதாயம். இது தவிர்க்க முடியாமல் சோசலிச சமுதாயத்தை நோக்கி நகர்ந்தே ஆக வேண்டும். இது காலத்தின் கட்டாயமும் கூட.

மார்க்சியத்தின் மூல நூல்களைப் படித்தால் பொதுவுடமை குறித்த ஏராளமான விவரங்களைத் தெரிந்து கொள்ள முடியும்.

விரிவஞ்சி நான் மிக சுருக்கமாக பதிவிட்டிருக்கிறேன். 

நன்றி.

தமிழ்மணி 


கொலைக்களமாக மாறிவரும் சமூகச் சூழல்! இதற்கு முடிவே கிடையாதா?

பொதுத்துறை நிறுவனம் ஒன்றில் தொழிற்சங்கத்தில் ஈடுபட்ட போது, உணவக நிர்வாகக் குழு உறுப்பினராக தொழிலாளர்களால் தேர்வு செய்யப்பட்டு நேர்மையோடும் போர்க்கணத்தோடும் செயல்பட்ட காலகட்டத்தில்தான் ஊழல் முற்றிலுமாக முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது; ஏற்கனவே ஊழல் செய்தவர்கள் கண்டுபிடிக்கப்பட்டு களை எடுக்கப்பட்டார்கள். 

இத்தகைய செயல்பாடுகளின்போது நெருக்கடிகளும் பாதிப்புகளும் வரவே செய்யும். அதைத் தாங்கிக் கொள்ளக் கூடியவர்கள்தான் இதற்கு முன்வருவார்கள். அதுதான் நக்சல்பாரி அரசியலின் பலம்‌.

மேற்கண்ட அனுபவம் எனக்கு உணர்த்தும் பாடம்...

உள்ளாட்சி அமைப்புகளை
நக்சல்பாரிகள் கைப்பற்றி,  நேர்மையோடும் போர்க்குணத்தோடும் செயல்பட முன்வராதவரை, உள்ளூர் அளவில் பிழைப்புவாதிகளும் இரவுடிகளும் தலையெடுப்பதும், அதைத் தொடர்ந்து உள்ளூர் அதிகாரிகள் துணையுடன் ஊழல் மற்றும் சமூக விரோதச் செயல்களில் ஈடுபடுவதும், இதில் ஏற்படும் போட்டி மற்றும் மோதல்களில் படுகொலைகள் நடப்பதும் தொடரவே செய்யும்.


மக்களின் அன்றாடத் தேவைகளில் கவனம் செலுத்தி, மக்களோடு மக்களாக பயணிப்பதற்கு உள்ளாட்சி அமைப்புகளில் செயல்படுகின்ற அணுகுமுறை வெகுவாக உதவும் என்றே நான் கருதுகிறேன். இதன் போக்கில்தான் பிழைப்புவாதிகளின் பிடியிலிருந்து மக்களை மீட்டெடுத்து அரசியல் படுத்தவும் முடியும்.

மாறிவரும் இன்றைய அரசியல் சூழலில், இது குறித்த விவாதங்கள் அவசியமானவை என்றே கருதுகிறேன்.

தமிழ்மணி

Thursday, 4 July 2024

பாட்டாளி மக்கள் கட்சிக்கு எதிர்காலம் உண்டா?

பாட்டாளி மக்கள் கட்சியினர், பெரியாரையும் மார்க்சையும் உயர்த்திப் பிடித்துப் பேசிய, எழுதிய காலம் ஒன்று உண்டு. 

இவை, பாட்டாளி மக்கள் கட்சியின் அன்றைய நாளேடான "தினப் புரட்சி" யில் பிரசுரிக்கப்பட்டன. பேராசிரியர் தீரன் இருந்த காலம் அது. நெய்வேலியில் ஒரே மேடையில் அவரோடு மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் சார்பாக நானும் பேச்சாளராக மேடை ஏறி இருக்கிறேன். ஆனால் இன்றோ, அண்ணாமலை போன்ற ஆர்எஸ்எஸ் காரர்கள் பாட்டாளி மக்கள் கட்சியின் மேடையில் ஏறுகிறார்கள். 

அன்று தீவிர இடதுசாரிகளோடு உறவாடிய பாட்டாளி மக்கள் கட்சி, இன்று தீவிர வலசாரிகளோடு ஒட்டிக்கொண்டுள்ளது?
ராமதாஸ் கூட எண்ணற்ற சீர்திருத்த திருமணங்களை நடத்தி வைத்திருக்கிறார். ஆனால் அன்புமணியோ அப்படி ஏதும் செய்வதாகத் தெரியவில்லை.

விடுதலை சிறுத்தைகள் கட்சியைப் போல வியாபித்திருக்க வேண்டிய பாட்டாளி மக்கள் கட்சி, இன்று, மாநில கட்சி என்கிற தகுதியையும் இழந்து நிற்கிறது. 

அன்புமணி தலை எடுத்த பிறகு, வேல்முருகனை வெளியேற்றினார்கள். இடதுசாரி எண்ணம் கொண்ட எண்ணற்றோர் பாட்டாளி மக்கள் கட்சியை விட்டு வெளியேறினார்கள். பாட்டாளி மக்கள் கட்சியை ஆதரித்த எண்ணற்ற பேராசிரியர்கள் ஒதுங்கிக் கொண்டார்கள்.

கொள்கை கோட்பாடுகளைக் குழிதோண்டிப்  புதைத்து விட்டு, பணத்திற்கும் பதவிக்கும் பேராசைப்பட்டு, பார்ப்பனியத்துடன் சகவாசம் கொண்டதனால் பாழும் கிணற்றுக்குள் தள்ளப்பட்டார்கள். 

பிழைப்பு வாதத்தை மட்டுமே நம்பி இருக்கும் ஒரு கட்சி, தமிழ் மாநில காங்கிரசைப் போல, தேமுதிக வைப் போல கெட்டு சீரழிந்து காணாமல் போகும் என்பதற்கு பாட்டாளி மக்கள் கட்சியே இன்றைய சான்று. அன்புமணியைப் போன்றவர்கள் அரசியலில் இருக்கும் வரை, வன்னியர் மக்களுக்கான தனி இட ஒதுக்கீடு என்பது கானல் நீரே!

போர்க்குணமிக்க போராளிகளால் மட்டுமே கோரிக்கைகளில் வெற்றி பெற முடியுமே ஒழிய, பிழைப்புவாத பச்சோந்திகளால் அல்ல என்பதை வன்னிய உழைக்கும் மக்கள் உணராத வரை அவர்களுக்கு விடிவேதும் இல்லை. 

ஒரு இயக்கத்திற்கு தொண்டர்கள் இருந்தால் மட்டும் போதாது, நல்ல தலைவர்கள் வேண்டும்.  வன்னியர் சாதி மக்கள் நல்ல தலைவரை எப்பொழுது அடையாளம் காணப் போகிறார்களோ அதுவரை அவர்கள் கூத்துகளையும் நாடகத்தையும்தான் பார்த்துக் கொண்டிருக்க வேண்டி வரும். 

தமிழ்மணி