Tuesday 27 June 2023

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி: வெள்ளிவிழா மாநாட்டுச் செய்திகள்!...1

1990 களின் தொடக்கத்தில் திருச்சி பெல் நிறுவனம், நெய்வேலி நிலக்கரிச் சுரங்கம் மற்றும் கோவையில் சில ஆலைகளில் "தொழிலாளர் பிரச்சாரக் குழு" என்ற பெயரில் செயல்பட்ட போது உள்ள அனுபவங்களும், அதன் பிறகு திருச்சி பெல் நிறுவனத்தில், பாய்லர் பிளாண்ட் ஒர்க்கர்ஸ் யூனியன் (BPWU-இந்தச் சங்கத்தில் உள்ள சில தோழர்களின் அறியாமையினால் இச்சங்கம் தற்போது செங்கனல் கும்பலோடு கூடி குலாவிக் கொண்டிருக்கிறது) என்ற பெயரில்  தொழிற்சங்கமாகச் செயல்பட்ட அனுபவங்களும், அதிலும் குறிப்பாக பெல் நிறுவன கேண்டின் ஊழலை வெளிக்கொண்டு வந்தது, பெல் நிறுவன போனஸ் போராட்டம் அதைத் தொடர்ந்து தோழர்கள் பணி நீக்கம் செய்யப்பட்ட அனுபவங்களும்தான் 1998 இல் "புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி" தோன்றுவதற்கான முன் களப்பணிகள்.

திருச்சி பெல் நிறுவன தொழிற்சங்கப் போராட்டம் நீண்ட நெடிய அனுபவத்தை கொண்டது மட்டுமல்ல பல்வேறு இன்னல்களையும் வேலை நீக்கம் உள்ளிட்ட பல்வேறு இழப்புகளையும் நெருக்கடிகளையும் எதிர்கொண்டவை. 

இத்தகைய பின்புலத்தோடு தொடங்கப்பட்ட புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி சென்னை, வேலூர், ஓசூர், கோவை, திருச்சி புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கிளைகள் அமைத்து ஒரு போர்க்குணமிக்க தொழிற்சங்கமாகப் பரிணமித்தது. மார்க்சிய-லெனினிய பின்புலத்தைக் கொண்ட புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் வளர்ச்சி கண்டு ஆலை முதலாளிகளும் அதிகார வர்க்கமும் அரண்டு போயினர்.

2021 ஆண்டு வாக்கில் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியில் இருந்து வெளியேறிய ஒரு சிறு கும்பல், வினவு கும்பலோடு சேர்ந்து கொண்டு ஒரு வெள்ளி விழா மாநாட்டை நடத்தி தாங்கள்தான் உண்மையான புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி என்பதை நிரூபிக்க முயன்று தோற்றுப்போன வேளையில் தொடர்ந்து புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி என்ற பெயரிலேயே செயல்பட்டுக் கொண்டு குழப்பத்தை ஏற்படுத்தி வருகின்றனர். அதன் பிறகு 2022 ஆம் வாக்கில் அவர்களுக்குள் ஏற்பட்ட குழு சண்டையால் வினவு கும்பலிடமிருந்து பிரிந்து சென்ற மற்றும் ஒரு சிறு கும்பல் செங்கனல் கூட்டத்தோடு சேர்ந்து கொண்டு புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி என்ற பெயரிலேயே செயல்பட்டுக் கொண்டு குழப்பத்தை ஏற்படுத்தி வருகின்றனர்.

இத்தனைக் குழப்பங்களுக்கும் இடையில், தோழர்கள் மகஇக கோவன், மக்கள் அதிகாரம் காளியப்பன், ராஜூ, PRPC வாஞ்சிநாதன் அவர்களோடு தொடர்புடைய தோழர் பழனி மற்றும் தோழர் லோகநாதன் தலைமையில் செயல்பட்டு வந்த உண்மையான புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி தொடர்ந்து பல்வேறு போராட்டங்களின் மூலம் தன்னை புதுப்பித்துக் கொண்டும் வளர்ச்சி அடைந்து கொண்டும் செயல்பட்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து பிரம்மாண்டமான 25 ஆவது வெள்ளி விழா மாநாட்டை புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி 25.06.2023 அன்று சென்னை, சைதாப்பேட்டையில் நடத்திக் காட்டி தனது பலத்தை நிறுவியுள்ளது. எனவே தொழிலாளி வர்க்கம் சிறுபான்மை போலிகளை ஒதுக்கித் தள்ளிவிட்டு புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியில் அய்க்கியமாவதன் மூலமாகத்தான் தனக்கான கோரிக்கைகளை வென்றெடுக்க முடியும்.

வெள்ளிவிழா மாநாட்டுச் செய்திகள் மற்றும் புகைப்படங்கள் அடுத்த தொடரில்...

தமிழ்மணி

தொடர்புடைய பதிவுகள்

இழி குணம்: போனஸ் போராட்டமும் களப்பலியும்!.....8

இழி குணம்: நாலரை கோடி 'பெல்' உணவக ஊழல்!.....7

No comments:

Post a Comment