Tuesday, 11 March 2025

இந்துக்களை மட்டுமே வட்டமடிக்கும் கெரகச் சக்கரம்!

ஜாதகத்தையும், ஜோதிடத்தையும் நம்பும் ஐயன்மீர்! ஐயம் தீர்ப்பீர்!

கிரகங்களின் தாக்கம் இந்த பூமியில் உள்ள அனைத்து மனிதர்கள் மீதும் உள்ளது என்றால், அது ஏன் இந்துக்கள் மீது மட்டும், அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டு இந்துக்கள் மீது மட்டும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன?

அக்கம் பக்கமாக வாழுகின்ற இஸ்லாமிய, கிறிஸ்தவர்கள் மீது ஏன் அந்தக் கிரகக் கதிர்கள் விழுவதில்லை? கீழ் வீட்டில் இருக்கிற இந்து மீது, அதுவும் சாதிக்குத் தகுந்தவாறு விழுகிற கிரகக் கதிர்கள், மாடி வீட்டில் இருக்கிற இஸ்லாமிய - கிறிஸ்தவன் மீது விழுவதில்லையே. கிரகங்களுக்கே 'செலெக்ட்டிவ் அம்னீசியாவா'? இல்லை, இஸ்லாமிய - கிறிஸ்தவர்களைக் கண்டு கிரகங்களுக்ககே அச்சமா? 

கிரகங்களப் பாத்து இந்துக்கள் அச்சப்படுகிறார்கள். ஆனால், கிறிஸ்தவர்களையும், இஸ்லாமியர்களையும் பார்த்து கிரகங்களே அஞ்சுகின்றன. என்ன கொடுமை 'சார்' இது?


ஓ! புரியுது! புரியுது! உங்க அச்சம் ஏன்னு? இஸ்லாமியர்கள் தீவிரவாதிகள். அவிங்க குண்டு போட்டா கிரகங்களின் குண்டியே கிழிஞ்சிடுமோ? பெறவு, கிருஸ்தவன்? ஏசுவ பகைச்சிக்கிட்டா தேசம் போன இந்துக்கள் எல்லாம் திரும்ப வர வேண்டி இருக்குமே? அவங்களுக்கும் சேர்த்து பலன் பாக்கணும்னா கிரகங்களுக்கு 'ஒர்க்லோடு' அதிகமாயிடுமே? படா கில்லாடிங்கப்பா நீங்க?

அவன் இந்து, இவன் இஸ்லாமியன், இவன் கிருஸ்தவன் என்ற 'டேட்டாவை' கிரகங்களுக்கு யாரப்பா கொடுத்தது? மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தவே அரசுகள் ஓடி ஒளியும் பொழுது நீங்க எப்படிப்பா கணக்கெடுப்பு நடத்துனீங்க? அந்த ரகசியத்தை டாக்டர் ஐயாகிட்ட சொல்லலாம் இல்ல? பாவம் புலம்பிக்கிட்டே இருக்காரு.

ஜாதகம், ஜோதிடம், நல்ல நேரம், கெட்ட நேரம், ராகு காலம், எமகண்டம், குளிகை, பொறந்த நேரம், புண்ணாக்கு நேரம் இதெல்லாம், ஏன்டா இந்துக்களுக்கு மட்டுமே வைக்கிறீங்க? 

எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவீர் இந்த நாட்டிலே?

ஊரான்

Thursday, 6 March 2025

தமிழன்தான் தமிழ்நாட்டை ஆள வேண்டுமா?

தமிழன் என்பதற்கு அடையாளம் என்ன? ஒருவன் தமிழன்தான் என்பதை எதை வைத்து முடிவு செய்வது? தமிழைத் தாய் மொழியாகக் கொண்டவன் எல்லாம் தமிழன் ஆகிவிட முடியுமா? தமிழன் என்பதை மரபணு ரீதியாக நிரூபிக்க வேண்டாமா? 

கருப்புதானே ஆதி தமிழனின் நிறம். அப்படியானால்
மரபணு ரீதியாக மாநிறம் மற்றும் சிவப்பாய் இருகிறவன் எவனும் தமிழனாக இருக்க முடியாதே? 


யார் தமிழன் என்பதற்கே இத்தனை சோதனைகளைச் செய்ய வேண்டி இருக்கிறது. அதற்காக கருப்பா இருக்கிற பாலியல் குற்றவாளி சீமான் போன்றவர்கள் எல்லாம் ஆள வந்தால் என்னவாகும்? 

ஆள வருகிறவன் நல்லவனா கெட்டவனா என்பதுதானே முதன்மைத் தேவை. இதையெல்லாம் பார்க்காமல் தமிழன்தான் ஆள வேண்டும் என்றால் சாக்கடைகள்கூட உங்களை ஆள நேரிடும். பிறகு நீங்கள் புழுக்களாய்தான் நெளிந்து கொண்டிருப்பீர்கள்.

கடைசியாக ஒரு கேள்வி. பள்ளிக்கல்வி முதல் கிட்டத்தட்ட எல்லாவற்றிலும் டெல்லிதானே தமிழ்நாட்டை ஆளுகிறது.  டெல்லியை ஆளுகிறவன் குஜராத்தியாக இருக்கிறானே? என்ன செய்ய?

தமிழ்மணி

Monday, 3 March 2025

சிந்து சமவெளி நாகரிகத்தை 'ஐஜேக்' பண்ண ஆளுநர் ஆர்.என்.ரவி முயற்சி!

உலகில் வெள்ளை, மஞ்சள், கருப்பு ஆகிய மூன்று இனங்களில் வெள்ளை இனம்தான் உயர்ந்தது என, நிற அடிப்படையில் பாகுபாடு இருந்ததாகவும், வின்சன்ட் சர்ச்சில் மற்ற இனத்தை நாய் போலக் கருதினார் என்றும் அங்கலாய்க்கிறார் ஆர்.என்.ரவி. 

"ஆரியர்-திராவிடர் வெவ்வேறு இனம். இந்தியா மீது ஆரியர் படை எடுத்தனர்" என்பதெல்லாம் கடந்த 60-70 ஆண்டுகளில் திராவிட சித்தாந்தம் கொண்டவர்களால் உருவாக்கப்பட்டதாம். அதை பெரியார் தமிழகத்தில் திணிக்க முயற்சித்தாராம். ஆர்.என்.ரவி சொல்கிறார்.

இந்து தமிழ் மார்ச் 4, 2025

சர்ச்சில் ஒருபக்கம் இருக்கட்டும் சார், எங்களைப் போன்று கருப்பாய் இருப்பவர்களைப் பற்றி, பார்ப்பனர்களாகிய நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? எங்களையெல்லாம் 'சூத்திரவாள்' 'வேசி மக்கள்' என்று, நாயைவிட மிகக் கேவலமானவர்களாக சொன்னது நீங்கள்தானே சார்? உங்கள் கூட்டம்தானே சார்? இன்றும்கூட எங்களை 'சூத்திரவாள்' என்றுதானே சார் விளிக்கிறீர்கள்!

பார்ப்பனர்கள் அனைவரும் இந்தியா முழுக்க ஏன்
வெள்ளையாக இருக்கிறார்கள்? 'வெள்ளையா இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டான்' என்று பார்ப்பனர்கள் பெருமை பேசுவததற்கும் சர்ச்சிலுக்கும் என்ன வேறுபாடு ஐயா ஆர்.என். ரவி அவர்களே? இப்போ என்ன தீடீர் ஞானோதயம்? 

வரலாற்றைத் திருத்துவதுதானே உங்களது வேலை. அறநெறி தந்த வள்ளுவனை இந்து மத ஆன்மீக சன்யாசியாக்க முயற்சிப்பவர்கள்தானே நீங்கள். அதனால்தானே இன்று "சிந்து சமவெளி" நாகரிகத்தை 'சிந்து சரஸ்வதி' நாகரிகம் என்று கூற வேண்டும் என தொல்லியல் தரவுகள் எதுவும் இன்றி மடைமாற்ற முனைகிறீர்கள்.

ஆரியன் என்ற சொல்லை பெரியாரா உருவாக்கினார்? நீங்கள்தானே அந்தச் சொல்லை சமஸ்கிருதத்தில் வேதங்களில் வைத்திருக்கிறீர்கள்? ஆரியர்கள் என்றால் உயர்ந்தவர்கள் என்று நேற்று வரை நீங்கள்தானே பெருமை பேசிக் கொண்டிருந்தீர்கள்? 

அப்புறம், ஆரியர்கள் என்றால் 'ஆசிரியர்கள், சிறந்தவர்கள்' என்பதைக் குறிப்பிடவே 'ஆரியர்' என்ற சொல் பயன்படுத்தப்பட்டது என்று புது 'டிக்ஷனரி' எழுதுகிறீர்கள். அது எப்படி சார், பார்ப்பனர்கள் மட்டுமே ஆசிரியர்களாகவும், சிறந்தவர்களாகவும் இருந்தார்கள்? இதற்கு யார் சார் காரணம்? வெள்ளைத் தோல் பார்ப்பனர்களைத் தவிர மற்றவர்கள் எல்லாம் ஆசிரியர்களாக ஆவது இருக்கட்டும், நாலு எழுத்துக் கூட்டிப் படிப்பதற்குக்கூட முடியாமல் போனதற்கு யார் சார் காரணம்? 

கடைசியா "அனைவரும் சமம், அனைவரும் ஒரே குடும்பம்" என்று ரிக் வேதத்தில் கூறப்பட்டுள்ளதாகச் சொல்கிறீர்கள். இருக்கட்டும். இருக்கட்டும். அப்படியானால் இந்துக் கோவில்களில் அனைத்து சாதி அர்ச்சகர் விசயத்தில் பார்ப்பனர்கள் மட்டுமே பூசை செய்ய வேண்டும் என்று ஏன் சார் அடம்பிடிக்கிறீர்கள்? 

நீங்கள் மட்டுமே ஆசிரியர்களாக, சிறந்தவர்களாக இருந்த காலமெல்லாம் மலையேறிவிட்டது சார். இப்பொழுது நாங்களும் ஆசிரியர்களாக, சிறந்தவர்களாக வளர்ந்துவிட்டோம் என்பதை மட்டும் மறந்து விடாதீர்கள் ரவி சார். 

தமிழ்மணி

Monday, 27 January 2025

அகந்தையில் சிக்கித் தவிக்கும் மார்க்சிய லெனினிய அமைப்புகள்!

அதிகரித்து வரும் சமூகப் பதட்டங்கள், வேலையின்மை, பொருளாதார நிலைகள் குறித்து சில இளைஞர்கள் ஆர்வம் காட்டுவதோடு, ஏற்கனவே செயல்பட்டு வரும் ஒருசில பொதுவுடமை அமைப்புகளில் அவர்கள் தங்களை இணைத்துக் கொண்டு களமாட விரும்புகின்றனர். 

சமூக எதார்த்தம் குறித்தப் போதிய அனுபவப் புரிதலின்மையால், அவர்கள் விரைவில் சோர்வுற்று, தாங்கள் சேர்ந்த அமைப்பில் ஏதோ கோட்பாட்டுப் பிரச்சனை இருப்பதாகக் குழம்பி, புதிய வழிகள் கிடைக்குமா என புத்தகங்களில் தேடுகின்றனர். நாலு புத்தகங்களைப் படித்து விட்டு அவர்களும் வேறு வேறு திசைகளில் சிந்திக்கத் தொடங்கி அவர்களுக்குள்ளும் வேறுபட்டு விரத்தியின் விளிம்புக்குச்  சென்று எதுவுமே சரி இல்லை என்று புலம்பத் தொடங்குகின்றனர். 


புரட்சிக்கு புதிய வழியைக் கண்டுபிடித்து விட்டதாக அதில் சில இளைஞர்கள் துள்ளிக் குதிக்கின்றனர். சில பக்கங்களை எழுதி, சில கூட்டங்களை நடத்தி புரட்சி பூபாலம் பிறந்து விட்டதாக புலகாங்கிதம் அடைகின்றனர். சில மாதங்களிலேயே 'கடை விரித்தும் கேட்பாரில்லை' என்ற கதையாக மீண்டும் விரக்திக்குத் தள்ளப்பட்டு சொந்த வாழ்க்கைக்குத் திரும்பி ஏற்கனவே செயல்படும் இயக்கங்களைச் சீண்டிக் கொண்டே காலத்தை ஓட்டுகின்றனர்.

தமிழ்நாட்டில் மார்க்சியம் பேசுவோரின் பொதுத் தன்மை இது. தமிழ்நாட்டின் மாற்று புரட்சிகர அரசியல் சக்தியாக வளர்ந்து கொண்டிருந்த மகஇக - வின் இன்றைய நிலையும் இதுதான்.

2019-20 ஆம் ஆண்டுகளில் அன்றைய மகஇக பொதுச் செயலாளர் தோழர் மருதையன் மீது காழ்ப்பு கொண்ட கட்சியின் மூத்தத் தோழர் ஒருவரால் மருதையன் அமைப்பை விட்டே வெளியேற நேர்ந்தது. இந்தப் பிரச்சினையில் அமைப்பின் பெரும்பான்மையினர் மருதையனுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்த போதும், அமைப்பின் தலைமைப் பொறுப்பில் இருந்த ஒரு தோழரும் வேறு சிலரும் அமைப்பை விட்டு வெளியேறினர். அதன் பிறகு அவர்களும் இரண்டாக உடைந்தனர். 

அமைப்பு பிளவுக்குக் காரணமாக இருந்த அந்த இரு மூத்த தோழர்களுமே தற்போது உயிரோடு இல்லை. இந்த நிலையிலாவது பிரிந்து சென்றவர்கள் ஒன்று படுவார்கள் என்று பார்த்தால், அதற்கும் வாய்ப்பிருப்பதாகத் தெரியவில்லை. இதில் மகஇக-விலிருந்து பிரிந்து சென்றதாக, "இளம் கம்யூனிஸ்ட் கழகம்" என்ற பெயரில் சில இளைஞர்கள் புறப்பட்டிருக்கிறார்கள். எதற்கு இந்த வீண் முயற்சி என்று தெரியவில்லை. பிளவு பட்டவர்களை ஒன்றிணைத்து கூட்டாகச் சேர்ந்து அமைப்பில் இருப்பதாக கருதும் 'கோட்பாட்டுப் பிரச்சனையைத்' தீர்ப்பதால் மட்டும்தான் அது தோழர்களுக்கும் நல்லது பொதுவுடமையை நேசிப்பவர்களுக்கும் நல்லது. அதை விடுத்து தனியாக ஆவர்த்தனம் பாடிக் கொண்டிருப்பதால் சில காலம் கழித்து விரக்தி மட்டும்தான் மிச்சமிருக்கும். வரலாறு உணர்த்தும் பாடம் இது.

எல்லோரும் இங்கு கன்றுக்குட்டிகள்தான். உழவுக்கு பழக்கப்படாத வரை கன்றுக் குட்டிகள் துள்ளிக் கொண்டுதான் இருக்கும். பயன்பாட்டுக்குரிய எருதுகளாய் மாறுவதற்கு கூட்டு முயற்சி ஒன்றுதான் இன்றைய தேவை. ஒற்றைக் காளையால் ஒரு போதும் உழ முடியாது.

கூட்டு முயற்சியில் ஜனநாயக மத்தியத்துவம் என்கிற அடிப்படையான அமைப்புக் கோட்பாட்டு நடைமுறை மிக மிக அவசியம். பெரும்பான்மைக்குச் சிறுபான்மை கட்டுப்பட்டு ஒன்றாகச் செயல்பட்டால் மட்டும்தான் தமிழ்நாட்டில் புரட்சிகர அரசியல் மீண்டும் உயிர் பெற்று எழ முடியும். 

பல்லாயிரக்கணக்கான தோழர்களின் அர்ப்பணிப்பு தியாகங்கள் தொகுக்கப்படாத நிலையில் அவர்களின் வலி காற்றில் கரைந்து கொண்டிருக்கிறது. துயரர்களின் வலியை தனது வலியாக உணர்ந்தால் மட்டுமே நோயைத் தீர்க்க முடியும்.
 
தமிழ்மணி
முன்னாள் மகஇக மாநில செயற்குழு உறுப்பினர் 

Thursday, 23 January 2025

டங்ஸ்டன் சுரங்க எதிர்ப்புப் போராட்டம் உணர்த்தும் பாடம் என்ன?

ஆரிய சங்கிகளும் தமிழ்த்தேச சங்கிகளும் ஆட்டம் போடும் இந்தக் காலகட்டத்தில் மார்க்சியம் பேசுவோரும், பெரியாரையும் அம்பேத்கரையும் உயர்த்திப் பிடிப்போரும், துண்டு துக்கடா அமைப்புகளாக சிதறுண்டு கிடப்பது காலக்கொடுமை! ஒவ்வொருவரும் தங்களுடைய அகந்தையை விட்டொழித்து எதிரிகளை வீழ்த்த ஒரே அமைப்பாய் ஒன்றிணையுங்கள். இல்லையேல் வரலாறு உங்களை மன்னிக்காது. 

சரியானவர்கள் பலம் பெறுவார்கள், வளருவார்கள் என்ற சால்ஜாப் எல்லாம் இங்கு தேவையில்லை. அதற்குள் சங்கிகள் உங்களது சல்லி வேரையே அறுத்து விடுவார்கள். இதில் கூத்து என்னவென்றால் ஒரே பெயரில் மூன்று, நான்கு கோஷ்டிகள். மூன்று பேர் நின்று முஷ்டியை உயர்த்தினாலே புரட்சி வந்துவிட்டதாக பம்மாத்து வேறு! 


சமூகத்தை மாற்ற நினைக்கும் சிறு சிறு அமைப்புகள் பெரும்பாலும் மார்க்சையும் பெரியாரையும் அம்பேத்கரையும் ஏற்றுக் கொண்டவர்கள்தான். பிறகு எதற்குத் தனித்தனி அமைப்புகள்? 

எழுத்துக்களில் புரட்சியைத் தேடியது போதும். உங்களது பங்காளிச் சண்டைகளில் போராட வருவோரின் வாழ்க்கையை நாசமாக்காதீர்கள். 

டங்ஸ்டன் எதிர்ப்புப் போராட்டத்தில் எளிய மக்கள் தங்களது ஒற்றுமையை பறைசாற்றி இருக்கிறார்கள். அவர்கள் மார்க்சையும் பெரியாரையும் அம்பேத்கரையும் படிக்கவில்லை. ஏன் டங்ஸ்டன் எதற்குப் பயன்படும் என்பதுகூட அவர்களுக்குத் தெரியாது. தங்கள் வாழ்வு பரிபோகும் என்பதைத் தவிர அவர்களுக்கு வேறு எதுவும் தெரியாது. 

சங்கிகளால் நாடே நாசமாகிக் கொண்டிருக்கிறது. எல்லாம் தெரிந்த நீங்களோ உங்களது சித்தாந்தம்தான் உயர்ந்தது என்று இன்னமும் சிலாகித்துக் கொண்டிருக்கிறீர்கள். 

இதையெல்லாம் நினைத்துப் பார்க்கும் பொழுது சங்கிகளுக்கு எதிரான கோபத்தைவிட உங்களுக்கு எதிராகத்தான் கோபம் அதிகரிக்கிறது. 

சீமானின் சில்லறைகளைப் போல நீங்களும் உங்களது அமைப்புகளில் தற்குறிகளாய் இருக்கப் போகிறீர்களா இல்லை இன்றைய அவல நிலையை எண்ணி தலைமையைத் தட்டி கேட்கப் போகிறீர்களா?

கடந்த 40 ஆண்டு காலத்தில் எண்ணற்ற தியாகங்களையும் அர்ப்பணிப்புகளையும் இழுப்புகளையும் சந்தித்து இன்றைய நிலை கண்டு நொந்து போனவனின் குரல் இது.

தமிழ்மணி

Monday, 6 January 2025

இரு பறவைகள் : ஒரு உரையாடல்!

கவிதை எப்படி எழுத வேண்டும் என்பதற்கு மாவோவைப் படியுங்கள்!
***
மா சேதுங்

இரு பறவைகள் : 
ஒரு உரையாடல்
(இலை உதிர் காலம் 1965)

அந்தப் பெரும் பறவை (1) 
தன் இறகுகளை விசிறியாய் விரித்து,
தொண்ணூராயிரம் லி தொலைவு உயர்ந்து
சீறும் புயலைக் கிளப்புகிறது.
அதன் முதுகுக்கு மேலே நீலவான் இருக்க,
ஊர்களும் நகரங்களும் உள்ளடங்கிய 
மனிதனின் உலகை அளவிட 
அது 
கீழே பார்க்கிறது;
துப்பாக்கி வெடிப்புகள் விண்ணைச் சிராய்க்கின்றன
பீரங்கிக் குண்டுகள் நிலத்தினைத் துளைக்கின்றன,
ஒர் சிட்டுக் குருவி (2) தன் புதருக்குள்ளே 
அஞ்சி விறைந்து நிற்கிறது
"சே, என்ன இது ஓர் குழப்பப் பாழ் நரகம்!
ஓ, நான் இதிலிருந்து நழுவிப் பறந்து விட விரும்புகிறேன்".

"எங்கே என நான் கேட்கலாமோ?" எனப் பெரும் பறவை வினவ, சிட்டுக் குருவி விடை சொன்னது:
"தேவதை நாட்டு மலைகளின் மீதே இரத்தினங்கள் பதித்த மாளிகைக்கு.
இரண்டாண்டு முன்பு,
இலையுதிர் கால ஒளிமிகு நிலவில் மும்முனை ஒப்பந்தம் (3) கையெழுத்தானது 
உனக்குத் தெரியாதா?

அங்கே வயிறு புடைக்கத் தின்னலாம்,
ஆவி பறக்கும் உருளைக் கிழங்குடன்,
மாட்டிறைச்சி நிறைந்த உணவு வகை உண்டு (4)".
பெரும் வரவை சொன்னது:
"நிறுத்து உன் வெற்று உளறலை. உற்று நோக்கு - உலகம் தலை கீழாய்ப் புரட்டப்படுவதை".

- மாவோ
****
(1)- பெரும் பறவை: இது சீனப் பழங்கதைகளில் கூறப்படும் கற்பனைப் பறவை. ஆயிரம் லி நீளமுள்ள குன் எனும் வட கடல் மீன் ஆயிரம் லி நீளமுடைய பறவையாக மாறியது என்று இக்கதைகள் கூறுகின்றன. இப்பறவை தொண்ணூறாயிரம் லி உயரம் பறக்கக் கூடியதாம். மேகம் போல விரியும் இதன் இறகுகள் சூறாவளியைக் கிளப்பக் கூடுமாம். இங்கு இது மார்க்சிய-லெனினியப் புரட்சியாளர்களுக்கான குறியீடாக நிற்கிறது.

(2)-சிட்டுக் குருவி: புரட்டலாளருக்கான குறியீடு; புரட்சி முதன்மையானதல்ல, உற்பத்தியே முதன்மையானது என்பவர்கள் இவர்கள்-உலக அளவில் குருச்சேவைத் தலைவனாகக் கொண்டவர்கள். உலகிலும் சீனத்திலும் ஏற்பட்ட புரட்சி எழுச்சியையும் கொந்தளிப்பையும் 'குழப்பப்பாழ் நரகம்" எனக் கருதுபவர்கள்.

(3)-மும்முனை ஒப்பந்தம்: 1963 ஆம் ஆண்டு குருச்சேவ் காலத்தில் சோவியத் யூனியன், அமெரிக்கா, இங்கிலாந்து ஆகியவை செய்து கொண்ட போலித்தனமான அணு ஆயுதச் சோதனைத் தடை ஒப்பந்தம்.

(4)-புரட்டலாளர்கள் குருச்சேவின் சுரண்டல் கொள்கையில் நம்பிக்கை வைக்கிறார்கள். மும்முனை ஒப்பந்தத்தை மதிக்கிறார்கள். குருச்சேவின் 'மாட்டிறைச்சி-உருளைக் கிழங்கு' சோசலிசத்தைப் பாராட்டி நாடுகிறார்கள்.  'பாட்டாளி வர்க்கம் தனது உலகக் கண்ணோட்டத்திற்கேற்ப உலகை மறுவார்ப்புச் செய்தல்' என்பதை மறுக்கிறார்கள்-இவைதான் சிட்டுக் குருவி உவமையில் சொல்லப்படுகின்றன. புரட்சியாளர்களோ (பெரும்பறவை) உலகம் புரட்சிகரமாக மாற்றப்படுவதைச் சுட்டிக் காட்டுகிறார்கள்.

1965-ஆம் ஆண்டு முதலில் எழுதப்பட்ட கவிதை மீண்டும் 1976-ஆம் ஆண்டு சீனப் புத்தாண்டு நாளில் வெளியிடப்பட்டது. புரட்டலாளர்களுக்கு எதிராக மாவோ நடத்திய இறுதிப் போராட்டத்தில் இக் கவிதைக்கும் குறிப்பிடத்தக்க இடம் உண்டு.

***
கவிதை என்றால் உவமைகள் இப்படி அல்லவோ இருக்க வேண்டும்?

நூல்: மா சே துங் கவிதைகள்: பொதுமை வெளியீடு, 1981.

Sunday, 22 December 2024

அம்பேத்கரை அவமதித்த அமித்ஷா!

காங்கிரஸ் அம்பேத்கருக்கு எதிரியா? 

நாடாளுமன்றத்தில் அம்பேத்கரை அவமானப்படுத்திப் பேசிய அமித்ஷாவை,

மந்திரி சபையில் இருந்து நீக்கி, அவர் மீது வழக்குத் தொடுத்து, கைது செய்து சிறையில் அடைக்கக் கோரி காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நாடெங்கிலும் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றன.

வேலூர் மகஇக போராட்டம் 

பெருகி வரும் போராட்டங்களைக் கண்டு குலை நடுங்கிப் போன சங்கிக் கூட்டம்,

"மாநிலங்களுக்கு அதிக அதிகாரம் இருக்கக் கூடாது-ஒன்றியத்திற்குத்தான் அதிகாரம் இருக்க வேண்டும், காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசமைப்புச் சட்டம் 370 கூடாது, அரசமைப்புச் சட்டத்தில் சோசலிசம்-மதச்சார்பின்மை ஆகியவற்றைச் சேர்க்கக்கூடாது என்று அம்பேத்கர் சொன்னதாகவும், 

அரசமைப்புச் சட்டம் உருவாக்குவதற்கான அவையில் அம்பேத்கரை சேர்ப்பதற்கு காங்கிரஸ் இடையூறாக இருந்ததாகவும், நேரு கொடுத்த நெருக்கடியால்தான் அமைச்சர் அவையில் இருந்து அம்பேத்கர் பதவி விலகியதாகவும், அம்பேத்கருக்கு பாரத ரத்னா விருது கொடுப்பதற்கு காங்கிரஸ் எதிராக இருந்ததாகவும்,

அந்தக்காலத்திலேயே 
காங்கிரஸ்தான் அம்பேத்கரை அவமானப்படுத்தியது,
மோடி ஆட்சிக்கு வந்த பிறகுதான் அம்பேத்கருக்கு உரிய மரியாதை கொடுக்கப்படுகிறது"

என்று நைச்சியமாகப் பிரச்சாரம் செய்து, அம்பேத்கரைத் தங்களுக்கானவராகக் காட்ட முயற்சிக்கிறது பார்ப்பன சனாதனக் கூட்டம். ஒருவேளை இவர்கள் கூற்று உண்மை என்றே ஒரு வாதத்திற்கு எடுத்துக் கொண்டாலும்கூட, அதற்கும்  அன்று காங்கிரசை இயக்கிய பார்ப்பனக் கூட்டமே பொறுப்பேற்க வேண்டும்.

ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரி யார்?

பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு வழங்குவதற்கு அரசமைப்புச் சட்டத்திலேயே அம்பேத்கர் அவர்கள் வழி வகுத்திருந்த போதும், இது தொடர்பாக அமைக்கப்பட்ட காகா கலேல்கர் குழு அறிக்கையை செயல்படுத்த விடாமல் முடக்கியும், அதன் பிறகு 30 ஆண்டுகள் கழித்து அமைக்கப்பட்ட மண்டல் குழுவிற்கு எதிராகவும் மிகப்பெரிய கலவரத்தைச் செய்தவர்கள் பார்ப்பனர்கள். 


பார்ப்பனர்களால் சூழப்பட்டிருந்த அன்றைய நேரு, இந்திரா காந்தி கால காங்கிரஸ் வேறு. சமூக நீதி எனும் தெளிந்த நீரோடையில் நீந்திக் கொண்டிருக்கும் ராகுல், பிரியங்காவின் இன்றைய கால காங்கிரஸ் வேறு. 

இன்று, பார்ப்பனர்கள் தங்களுக்கு என பாரதிய ஜனதா கட்சியை உருவாக்கிக் கொண்டதால் ஒட்டுமொத்த பார்ப்பனக் கூட்டமும் அங்கே அடைக்கலமாகி, ஆட்சி அதிகாரத்தையும் கைப்பற்றி, EWS உள்ளிட்ட சட்டத் திருத்தங்கள் என இந்திய அரசமைப்புச் சட்டத்தையே தங்களுக்குச் சாதகமாக மாற்றிக் கொண்டு வருகிறது. 

அதன் தொடர்ச்சியாக, 'ஒரே நாடு ஒரே தேர்தல்' என்ற சட்ட திருத்தத்தைக் கொண்டு வருவதற்கான அரசமைப்புச் சட்டத்தின் மீதான விவாதத்தின் போது,

ஒரு பக்கம் அம்பேத்கரின் பெருமைகளை அடுக்கிக் கொண்டே, 

"அம்பேத்கர் பெயரைச் சொல்லுவது ஒரு பேஷனாகிவிட்டது. அம்பேத்கர்.. அம்பேத்கர்.. அம்பேத்கர்.... என்று சொல்வதற்குப் பதிலாக கடவுளின் பெயரைச் சொன்னாலாவது ஏழு பிறப்பிலும் புண்ணியம் கிடைக்கும்" என்று கடைசியில் அம்பேத்கர் முகத்தின் மீது நரகளை வீசி இருக்கிறார் அமித்ஷா.

இதை மட்டும் கவனமாக மறைத்துவிட்டு, அம்பேத்கரின் தொகுப்புகளைப் படிக்காமல், அதிமுக பார்ப்பனர் ஹண்டேவின் குறிப்புகளை மட்டும் சுமந்து கொண்டு வருகிறது பார்ப்பனக் கூட்டம்.

ஒரு தலைவர், அவர் கொண்டிருந்த சித்தாந்தமும், தான் வாழ்ந்த காலத்தில் அவர் முன்னெடுத்தப் போராட்டங்களுமே அவர் யாருக்கானவர் என்பதைப் புரிய வைக்கும். 

தாழ்த்தப்பட்டோர் மீது திணிக்கப்பட்ட சாதி தீண்டாமைக்குக் காரணமான பார்ப்பன சனாதன இந்து மதத்தை ஒழித்துக் கட்டி, சுதந்திரம் சமத்துவம் சகோதரத்துவத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு சமூகத்தைப் படைப்பதைத் தனது வாழ்நாள் லட்சியமாகக் கொண்டு வாழ்ந்த ஒரு தலைவரை, 

இதற்கு நேர் எதிரான,

சாதித் தீண்டாமையை நியாயப்படுத்தும், சனாதானக் கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்ட இந்துராஷ்டிரத்தை அமைப்பதற்காகச் செயல்பட்டு வரும் ஒரு கூட்டம், அம்பேத்கரை சொந்தம் கொண்டாடுவதற்கு எந்த அருகதையும் கிடையாது. 

***
வேலூரில் ஆர்ப்பாட்டம் 

தமிழ்நாட்டில் பல்வேறு அமைப்புகள் அமித்ஷாவுக்கு எதிராக நடத்தி வரும் போராட்டங்களின் தொடர்ச்சியாக 21.12.2024, சனிக்கிழமை காலை 11 மணி அளவில் வேலூர் அண்ணா கலையரங்கம் அருகில், 


"அண்ணல் அம்பேத்கரை இழிவு படுத்திப் பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவைக் கைது செய்! பதவி விலகு!" என்ற முழக்கத்தை முன்வைத்து, மக்கள் கலை இலக்கியக் கழகம் மற்றும் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

ம.க.இ.க மாவட்டச் செயலாளர்  தோழர் அகிலன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், 

 பு.ஜ.தொ.மு மாவட்டப் பொருளாளர்
தோழர் பாபு, மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடமைக் கட்சி தலைமைக் குழு உறுப்பினர் தோழர் சா.குப்பன், ஏ.ஐ.சி.சி.டி.யு மாவட்டத் தலைவர் தோழர் ஏழுமலை, தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாவட்டத் தலைவர், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட மாநகரச் செயலாளர் தோழர் பிலிப், தோழர் பகத்சிங் கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தரைக்கடை கிளைச் சங்கச் செயலாளர் தோழர் சேட்டு,

சி.பி.ஐ.எம்.எல் (விடுதலை) மாவட்டச் செயலாளர் தோழர் சரோஜா, மக்கள் கலை இலக்கியக் கழக மாநில செயற்குழு உறுப்பினர் தோழர் வாணி உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர்.


இறுதியாக, பு.ஜ.தொ.மு மாவட்டச் செயலாளர் தோழர் சரவணன்
நன்றியுரையுடன் ஆர்ப்பாட்டம் நிறைவுற்றது.

இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் பலர் திரளாகக் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

தமிழ்மணி