Tuesday, 25 August 2026

'இயம்' என்றால் என்ன? பெரியார், அம்பேத்கர் கருத்துகள் கோட்பாடா? சிந்தனையா?

அரசியல் தத்துவத்திலும் சமூக இயக்கவியலிலும் 'இயம்' (Ism) மற்றும் 'சிந்தனை' (Thought) ஆகிய சொற்கள் பயன்படுத்தப்படும் முறை குறித்து தத்துவார்த்த ரீதியான தெளிவு பெறுவது மிக அத்தியாவசியமான ஒன்றாகும்.

குறிப்பாக, மார்க்சிய-லெனினியக் கோட்பாடுகளையும், பெரியார்-அம்பேத்கரின் பங்களிப்புகளையும் ஒப்பீட்டு நோக்கில் அணுகும்போது, கோட்பாட்டிற்கும் சிந்தனைக்கும் இடையிலான எல்லைக்கோட்டைத் துல்லியமாகப் புரிந்துகொள்வது தத்துவக் குழப்பங்களைத் தவிர்க்க உதவும்.


1. 'இயல் / இயம்' (Ism) மற்றும் 'சிந்தனை' (Thought) - தத்துவார்த்த வேறுபாடு

அரசியல் தத்துவத்தில் 'இயம்' மற்றும் 'சிந்தனை' என்பவை வெவ்வேறு தளங்களைக் குறிப்பவை:

• கோட்பாடு / இயம் (Ism): ஒரு குறிப்பிட்ட கொள்கை அகில உலக அளவிலும் (Universal), அனைத்து சமூகங்களுக்கும் பொருந்தக்கூடிய பொதுவான அறிவியல் விதிகளைக் (General Scientific Laws) கொண்டு, ஒரு முழுமையான தத்துவக் கட்டமைப்பாக உருவாக்கப்படும்போது அது 'இயல்' அல்லது 'இயம்' (Ism) எனப்படுகிறது.

o எடுத்துக்காட்டு: மார்க்சியம் (Marxism) – மனித சமூக வரலாற்றின் இயக்கம், முதலாளித்துவ உற்பத்தி முறை, உபரி மதிப்பு (Surplus Value), வர்க்கப் போராட்டம் ஆகியவற்றை எந்தவொரு குறிப்பிட்ட நாட்டிற்கும் கட்டுப்படாமல் உலகளாவிய விதியாக வரையறுத்தது.

• சிந்தனை (Thought): அந்தப் பொதுவான கோட்பாட்டை (Theory), ஒரு குறிப்பிட்ட நாட்டின் அல்லது சமூகத்தின் தனித்துவமான பொருளாதார, பண்பாட்டுச் சூழலுக்கு ஏற்பப் பயன்படுத்தி நடைமுறைப்படுத்தும் முறை (Specific Application) 'சிந்தனை' எனப்படுகிறது.

o எடுத்துக்காட்டு: மாவோ சிந்தனை (Mao Zedong Thought) – மார்க்சிய-லெனினிய அகில உலகக் கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டு, சீனா என்ற அரை-நிலப்பிரபுத்துவ நாட்டின் சூழலுக்கு ஏற்பப் பயன்படுத்தி "நீண்ட கால மக்கள் போர்" மற்றும் "புதிய ஜனநாயகப் புரட்சி" என்ற நடைமுறைகளை வகுத்ததால் அது 'மாவோ சிந்தனை' எனப்பட்டது.

2. பெரியார், அம்பேத்கர்: 'இயமா'? அல்லது 'சிந்தனையா'?

தமிழ்ச் சூழலிலும் இந்தியச் சூழலிலும் 'பெரியாரியம்', 'அம்பேத்கரியம்' என்று அழைக்கும் வழக்கம் பரவலாக உள்ளது. ஆனால், தத்துவார்த்த ரீதியாகப் பார்த்தால் இவர்களைக் 'கோட்பாட்டாளர்கள்' (Theoreticians) என்று சொல்வதை விட 'சமூகப் புரட்சியாளர்கள்' (Social Revolutionaries) என்றும், இவர்களது பங்களிப்பை 'பெரியார் சிந்தனைகள்', 'அம்பேத்கர் சிந்தனைகள்' என்று அழைப்பதே மிகச் சரியானது.

இதற்கான முக்கியக் காரணங்கள்:

1. களப் போராளிகள்: இவர்கள் இருவரும் மார்க்ஸ் அல்லது லெனின் போல உலகளாவிய புதிய பொருளாதார இயங்கியல் விதிகளையோ அல்லது ஒரு முழுமையான தத்துவ அமைப்பையோ (Comprehensive Worldview) உருவாக்க முனையவில்லை. மாறாக, இந்திய/தமிழ் சமூகத்தின் தனித்துவமான நஞ்சான சாதி அமைப்பு, தீண்டாமை, பிராமனிய ஆதிக்கம் மற்றும் பெண் அடிமைத்தனம் ஆகியவற்றிற்கு எதிராகப் போராடிய களப் போராளிகள்.

2. நடைமுறைத் தீர்வுகள்: பெரியாரின் பகுத்தறிவு, சாதி எதிர்ப்பு, சுயமரியாதை மற்றும் பெண் விடுதலைப் பிரச்சாரங்களும்; அம்பேத்கரின் சாதி ஒழிப்பு (Annihilation of Caste), சமூக நீதி, அரசியலமைப்பு வழியிலான உரிமைகளும் இந்தியச் சமூக நோய்களுக்கான நடைமுறைச் சிந்தனைகளும் தீர்வுகளுமே ஆகும்.

3. வளரும்  சிந்தனைகள்: பெரியாரே பல இடங்களில் "நான் இன்றைக்குச் சொல்வதை நாளைக்கு வேறு ஒரு தரவு கிடைத்தால் மாற்றிக் கொள்வேன்; என் வார்த்தைகளை வேதமாகப் பார்க்காதீர்கள், உங்கள் பகுத்தறிவுக்குச் சரியெனப் படுவதை எடுத்துக்கொள்ளுங்கள்" என்றுதான் கூறியிருக்கிறார். இது ஒரு 'இயம்' அல்லது 'மூடிய கோட்பாட்டிற்கு' (Closed Dogma) உரிய பண்பல்ல; மாறாக, இது விடுதலைக்கான வளரும் சிந்தனைக்கே (Dynamic Thought) உரிய அடையாளம்.

தொகுப்பாக...

பேச்சுவழக்கில் 'பெரியாரியம்', 'அம்பேத்கரியம்' என்ற சொற்கள் பயன்படுத்தப்பட்டாலும், தத்துவார்த்த ரீதியாக அவர்களை மார்க்ஸ்-லெனின் வரிசையில் கோட்பாட்டாளர்களாக ஒரே தட்டில் வைத்து பார்க்க முடியாது.

• மார்க்சியம் - லெனினியம் என்பது உலகத்தையும் சமூகத்தையும் மாற்றப் பயன்படும் அடிப்படை அறிவியல் திசைகாட்டி (Universal Scientific Ism)!

• பெரியார் சிந்தனைகளும் அம்பேத்கர் சிந்தனைகளும் இந்தியச் சமூகத்தில் சாதியையும் பார்ப்பனியத்தையும் தகர்க்கப் பயன்படும் கூரிய செயல்பாட்டு ஆயுதங்கள் (Practical Social Thoughts)!

கோட்பாட்டையும் சிந்தனையையும் குழப்பிக் கொள்ளாமல், தத்துவார்த்தத் தெளிவோடு அணுகுவதே சரியான வர்க்கப் பார்வையாகும்.

தமிழ்மணி

Friday, 14 August 2026

இந்திய அரசியலமைப்புச் சட்டப் பாதுகாப்பு இயக்கக் கலந்துரையாடல் கூட்டம் – இராணிப்பேட்டை

மனோ தங்கராஜ் மற்றும் மகஇக தோழர்கள்

ஆப்பிரிக்காவில் தோன்றிய ஆதி மனித இனம்தான் உலகம் முழுவதும் பரவி, பல்வேறு இனங்களாக, வேறுபட்ட மொழிகளைப் பேசுபவர்களாக, வெவ்வேறு உணவுப் பழக்கவழக்கங்கள் மற்றும் தோற்றப் பொலிவு கொண்டவர்களாக வாழ்ந்து வருகிறது. மனிதர்கள் வாழும் சூழலும், அவர்கள் யாருடன் உறவாடுகிறார்கள் என்பதுமே அவர்களின் சிந்தனையைத் தீர்மானிக்கிறது. அதனால்தான் நமது சிந்தனைகள் அனைத்தும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை.

இதன் விளைவாகவே மக்களிடையே இனப்பற்று, மொழிப்பற்று, மதப்பற்று—குறிப்பாக இந்தியாவில் சாதிப்பற்று (சாதிவெறி)—கொண்டவர்களாக மனிதர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

தங்களுக்கு எதன் மீது பற்று இருக்கிறதோ, அதேபோன்ற பற்று கொண்டவர்களைத் தங்களவர்களாக ஒவ்வொருவரும் கருதுகின்றனர். இதன் காரணமாகத் 'தங்கள் ஆட்களுக்கு'ச் சாதகமாகவும், மற்றவர்களுக்குப் பாதகமாகவும் நடந்து கொள்ளும் போக்கு உருவாகிறது.

இவ்வாறு தங்களைச் சார்ந்தவர்களுக்குச் சாதகம் செய்ய வேண்டுமானால், அதற்கு அதிகாரமே முதன்மை அடிப்படையாக அமைகிறது. அதிகாரத்தில் அமர்பவர்கள் தங்களுக்கு நெருக்கமானவர்களுக்குச் சாதகமாகச் செயல்படுவதால்தான், சமூகத்தில் ஒருசிலர் மட்டுமே பாதுகாப்பாக வாழ முடிவதும், பெரும்பான்மை மக்கள் தொடர்ந்து பாதிப்புக்குள்ளாவதும் நடக்கிறது.

இந்தியாவைப் பொறுத்தவரை, மொத்த மக்கள் தொகையில் ஒற்றை இலக்கத்தில் மட்டுமே உள்ள பார்ப்பனர்களே நாட்டின் ஒட்டுமொத்த அதிகாரத்தையும் தங்கள் கையில் வைத்துக்கொண்டு, தங்களுக்கானவர்களுக்கு மட்டுமே சாதகமாக நடந்து கொள்கின்றனர்; சலுகைகளை வாரி வழங்குகின்றனர். மற்றவர்களுக்குச் சலுகைகளைச் செய்யாவிட்டாலும் பரவாயில்லை, பாதகமாவது செய்யாமல் இருக்க வேண்டும். ஆனால், அவர்கள் தொடர்ந்து மற்ற சமூகங்களுக்குப் பாதகங்களையே செய்து வருகின்றனர்.

அதற்கு எடுப்பான உதாரணங்கள்: வடக்கே பாபர் மசூதி இடிப்பு முதல் தமிழ்நாட்டில் திருப்பரங்குன்றம் விவகாரம் வரை! இவை மட்டுமன்றி, கல்வி மற்றும் வேலைவாய்ப்பு உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் இஸ்லாமியர்கள், கிறித்தவர்கள், பட்டியல் சமூகத்தினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்கு எதிரான அணுகுமுறையை அவர்கள் மிகத் தீவிரமாகச் செயல்படுத்தி வருகின்றனர்.

இத்தகைய சனாதன நடவடிக்கைகள் சிலவற்றிற்கு இந்திய அரசியலமைப்புச் சட்டம் தடையாக இருப்பதால், அந்தச் சட்டத்தையே மாற்றியமைக்கும் முயற்சிகளிலும் அவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அதற்குத் தோதாக நீதித்துறையிலும் தங்களுடைய ஆதிக்கத்தை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றனர்.

இதைத் தடுத்து நிறுத்த வேண்டுமென்றால், பார்ப்பன சனாதன சக்திகளை அரசியல் அதிகாரத்திலிருந்து முற்றிலுமாக அப்புறப்படுத்த வேண்டும். இந்தப் போராட்டத்தின் ஊடாகவே, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தைப் பாதுகாக்கின்ற விழிப்புணர்வையும் நாம் மக்கள் மத்தியில் ஏற்படுத்த வேண்டும்.

இந்த நோக்கத்தைக் கொண்டு, முன்னாள் அமைச்சர் திரு. மனோ தங்கராஜ் உள்ளிட்ட சிலரின் முன்னெடுப்பில் தொடங்கப்பட்டுள்ள ‘அரசமைப்புச் சட்ட பாதுகாப்பு இயக்கம்’ சார்பாகக் கலந்துரையாடல் கூட்டம் 14.08.2026 அன்று இராணிப்பேட்டை, நாவல்பூரில் நடைபெற்றது.

அக்கூட்டத்தில், இவ்வமைப்பின் அமைப்பாளர்களில் ஒருவரும் மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளருமான வழக்கறிஞர் வாஞ்சிநாதன் அவர்களும், முன்னாள் அமைச்சர் திரு. மனோ தங்கராஜ் அவர்களும் பங்கேற்று,  சென்னையில் இவ்வமைப்பு சார்பாக நடைபெறவிருக்கும் மாநாட்டின் அவசியம் குறித்து விளக்கமளித்தனர்.

அசேன்

வாஞ்சிநாதன்

மனோ தங்கராஜ்

பாதிரியார் ஞானசேகரன் மற்றும் மகஇக தோழர்கள்

அரசியல் சட்டத்தைப் பாதுகாக்கப் போராடும் அதே வேளையில், அதிகாரத்தைக் கையில் வைத்துக்கொண்டிருக்கும் சனாதன சக்திகள், கீழடி போன்ற தொல்லியல் ஆய்வு முடிவுகளை மூடிமறைத்துத் தமிழர்களின் வரலாற்றை இருட்டடிப்பு செய்ய முயற்சிப்பதையும், இந்த நாட்டின் நாகரிகமே வேத நாகரிகம்தான் என்று நிறுவ முயல்வதையும் நாம் தடுத்து நிறுத்த வேண்டும்.

இதை வலியுறுத்தி, ஆகஸ்ட் 22-ஆம் தேதி தஞ்சையில் நடைபெறவுள்ள மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் (மகஇக) "தமிழ் மக்கள் இசை விழா" குறித்த பிரசுரம், வேலூர் மகஇக சார்பாக முன்னாள் அமைச்சர் மனோ தங்கராஜ் அவர்களுக்கும் மற்ற தலைவர்களுக்கும் வழங்கப்பட்டது. நிகழ்வில் மகஇக தோழர்கள் இராவணன், அகிலன், வாணி மற்றும் தமிழ்மணி ஆகியோர் கலந்துகொண்டனர்.

சனாதன சக்திகளை அதிகாரத்திலிருந்து அப்புறப்படுத்த வேண்டுமானால், நாம் கருத்தால் மட்டுமல்ல; களத்திலும் கைகோர்த்துப் போராட வேண்டும்!

- ஊரான்

Tuesday, 11 August 2026

மிடுக்கு நடிகரின் ‘ஆன்லைன்’ சரக்கு!


தமிழ் நாடு அரசால் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ‘டாஸ்மாக் ஆன்லைன்’ முன்பதிவு முறை, மது வணிகத்தை நவீனப்படுத்துவதாகக் கூறப்பட்டாலும், அது நுகர்வோர் மத்தியிலும் பொதுமக்கள் மத்தியிலும் பல்வேறு கேள்விகளையும் கடுமையான சமூக அச்சங்களையும் எழுப்பியுள்ளது. ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ மற்றும் ‘மின்னம்பலம்’ ஆகிய ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகளும், இது குறித்து எழும் சமூக எதிர்வினைகளும் இந்த நடவடிக்கையின் பின்னுள்ள முரண்பாடுகளை வெளிச்சம்போட்டுக் காட்டுகின்றன.

1. ஆன்லைன் முன்பதிவு

டாஸ்மாக் இணையதளத்தில்  சரக்கு இருப்பைப் (Live Stock) பார்த்து, டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தி, ‘கியூ ஆர்’ (QR Code) குறியீட்டைப் பெற்று கடைகளில் சென்று சரக்கை வாங்கி வரலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், நடைமுறையில் குடிகாரர்கள் (இவர்கள் மதுப் மதுப்பிரியர்களாம்) எதிர்கொள்ளும் சிக்கல்கள் முற்றிலும் வேறாக உள்ளன:
  • கடை ஊழியர் – விநியோகஸ்தர் கூட்டணி: இணையதளத்தில் இருப்பு இருப்பதாகக் காட்டிப் பணம் செலுத்தினாலும், நேரில் செல்லும்போது “சரக்கு இல்லை” என்று கூறி ஆர்டர்களை நிராகரிக்கும் போக்கு நிலவுவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
  • MRP கூடுதல் விலை கட்டாயமா?: ஆன்லைனில் டிஜிட்டல் பரிவர்த்தனை செய்த பிறகும், நேரில் சென்று பெறும்போது வழக்கமான ரூ.10 கூடுதல் தொகையைக் கடை ஊழியர்கள் கேட்க மாட்டார்கள் என்பதற்கு அரசுத் தரப்பில் எந்த உறுதியான நடைமுறைப் பாதுகாப்புமில்லை.
  • பெயரளவில் நவீனமயம்: வீடுகளுக்கே தேடி வராமல், ஆன்லைனில் பதிவு செய்துவிட்டு மீண்டும் கடைக்குச் சென்று வரிசையில் நின்று வாங்கி வர வேண்டும் எனில், இது வெறும் ‘டோக்கன் சிஸ்டம்’ அல்லது முன்பதிவுதானே தவிர, குடிகாரர்களுக்கு எந்தப் பெரிய மாற்றத்தையும் தரப்போவதில்லை.

2. இன்று கடை... நாளை வீடு தேடியா? 

அரசுத் தரப்பில் “வீட்டு விநியோகம் (Home Delivery) கிடையாது, நேரில் வந்துதான் பெற வேண்டும்” என்று மறுக்கப்பட்டாலும், இந்த ஆன்லைன் முறைமை அடுத்தகட்டமாக “வீட்டுக்கே சரக்கு” என்ற கலாச்சாரத்திற்குப் பாதை அமைத்துக் கொடுத்துவிடுமோ என்ற அச்சம் பொதுமக்கள் மனதில் வலுவாக எழுந்துள்ளது.
  • குடும்ப அமைப்பின் சீரழிவு: பிறர் முன்னிலையில் புகைபிடிப்பதையோ அல்லது மது அருந்துவதையோ அவமானமாகக் கருதும் பண்பாட்டு மரபு கொண்ட தமிழ்நாட்டில், ‘ஆன்லைன் டாஸ்மாக்’ சாராயத்தை எளிதில் அணுகக்கூடிய ஒரு பொருளாக மாற்றுகிறது.
  • குடும்பச் சூழல் மற்றும் குழந்தைகளின் நிலை: ஒருவேளை எதிர்காலத்தில் ஆன்லைன் மூலம் வீட்டிற்கே சாராயம் விநியோகம் செய்யப்படும் சூழல் உருவானால், வீட்டின் கதவைத் திறக்கும் சிறு குழந்தைகளும், குடும்பத்தினரும் அந்தப் பார்சலை நேரடியாகப் பெறவேண்டிய அவலம் உருவாகும். வீட்டிற்குள் சாராயம் நேரடியாக நுழைவது என்பது, குழந்தைகளின் பிஞ்சு மனங்களில் சாராயம் குறித்த கூச்சத்தைக் குறைத்து, அதை ஒரு சாதாரண அத்தியாவசியப் பொருளாகப் பார்க்கும் தவறான மனநிலையைச் சிறுவயதிலேயே உருவாக்கிவிடும்.
  • பயத்தின் தடுப்புச்சுவர் உடைதல்: "கடையில் வரிசையில் நின்று வாங்கினால் நாலு பேர் தவறாக நினைப்பார்கள்" என்ற அச்சமே பல இளைஞர்களையும், புதியவர்களையும் மதுப்பழக்கத்திற்கு அடிமையாகாமல் தடுத்து நிறுத்தும் காரணியாக இதுவரை இருந்து வருகிறது. ஆன்லைன் முன்பதிவு மூலம் கடையில் சில வினாடிகளில் வாங்கிக் செல்லும் வசதி, இந்த சமூகத் தடுப்புச்சுவரை முற்றிலும் தகர்த்துவிடும்.

3. அத்தியாவசியத் தேவைகள் புறக்கணிப்பும், சாராய வணிக நவீனமயமும்

ஒருபுறம் சாமானிய மக்களுக்குப் தரமான உணவு, வேலைவாய்ப்பு, கல்வி மற்றும் மருத்துவ வசதிகள் தடங்கலின்றிச் சென்றடைவதில் ஏராளமான சிக்கல்கள் நிலவுகின்றன. காய்கறி மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி உயர்வால் மக்கள் தவிக்கும் சூழலில், உயர்தர மதுபானங்கள் ஆன்லைனில் தடங்கலின்றி கிடைப்பதை உறுதி செய்ய அரசு இவ்வளவு முனைப்பு காட்டுவது எந்த மாதிரியான சமூக நலனை முன்நிறுத்துகிறது?

மதுவிலக்கை படிப்படியாக அமல்படுத்துவதுதான் ஒரு மக்கள் நல அரசின் கடமையாக இருக்க முடியும். அதை விடுத்து, சாராய விற்பனையை மேன்மேலும் நவீனப்படுத்தி, எளிமைப்படுத்தி வருவாயைப் பெருக்குவதிலேயே கவனம் செலுத்துவது தமிழகத்தின் எதிர்காலத் தலைமுறையைச் சீரழிவிற்கே கொண்டு செல்லும். இது மக்கள் நல அரசா இல்லை சாராய நல அரசா என்று மக்கள் கேட்கத் தொடங்கி விட்டார்கள்.

அரசு தன் வருவாய்க்காக சாராய வணிகத்தை கணினிமயமாக்குவதை விட்டுவிட்டு, சமூகப் பாதுகாப்பையும், குடும்ப அமைப்பின் அமைதியையும் உறுதிசெய்யும் கொள்கைகளை நோக்கி நகர வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.
இதெல்லாம் நமக்குப் புரிகிறது. ஆனால் சரக்கு மிடுக்கில் இருப்பவர்களுக்குப் புரியுமா?

தமிழ்மணி

செய்தி ஆதாரம்:


Sunday, 2 August 2026

வறண்டு கிடக்கும் டெல்டா; உளறிக் கொட்டும் அமைச்சர்!


வறண்டு கிடக்கும் காவிரி

டெல்டாவைச் சூழும் வெறுமை

மேகங்கள் வானத்தில் தவழ்ந்தபடி வைகாசி, ஆனி மாதங்கள் கடந்துவிட்டன; ஆடி மாதமும் முடிவடைகிறது. காவிரி டெல்டா மாவட்டங்களில் வழக்கம் போலப் பச்சைப் பசேலெனக் குலுங்க வேண்டிய குறுவைச் சாகுபடி, இந்த ஆண்டும் வறட்சியிலும் வெறுமையிலும் போய் முடிந்துள்ளது.

காவிரிப் பாசனத்தை மட்டுமே நம்பியிருக்கும் பல்லாயிரக்கணக்கான விவசாயிகளின் உழைப்பும் வாழ்வாதாரமும் இன்றைக்குக் கேள்விக்குறியாக நிற்கின்றன.

"எல் நினோ, போதுமான மழை பெய்யவில்லை, இயற்கை ஒத்துழைக்கவில்லை" என்று வழக்கம் போல இயற்கை மீது பழியைப் போட்டுத் தப்பித்துக் கொள்ள நடிகர் ஆட்சி முயலுகிறது. ஆனால், இது இயற்கையின் சதியல்ல; நடிகர் ஆட்சியின் கையாலாகாத்தனம்!

கர்நாடக அணைகளில் நீர் இருப்பு இருந்தும், உரிய காலத்தில் முன்கூட்டியே தமிழகத்திற்கு வர வேண்டிய தண்ணீரைப் போராடிப் பெறத் தவறிய நடிகர் ஆட்சியில், உளறல்கள் மட்டுமே ஆறாய்ப் பெருக்கெடுத்து ஓடுகின்றன.

அறியாமையும் சங்கித்தனத்தின் வெளிப்பாடும்

தமிழகத்தின் வாழ்வாதாரப் பிரச்சனையான காவிரி நீருக்காக தமிழ்நாடே கொதித்துக் கொண்டிருக்கும் வேளையில், புதிதாகக் கட்சி தொடங்கி ஆட்சியைப் பிடித்து உல்லாசமாய் உலாவரும் நடிகரின் அமைச்சரவை சகா CTR நிர்மல் குமார் பேசிய பேச்சு, அவர்களின் அரசியல் அறியாமையை உலகிற்கு அம்பலப்படுத்தியுள்ளது.
கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் தமிழகத்திற்குத் தண்ணீர் தர மறுப்பது குறித்துப் பேசிய அந்தப் பெருமதிப்பிற்குரிய அரசியல் ‘மேதை’:

"கர்நாடகாவில் உள்ள காங்கிரஸ் அரசு தமிழகத்திற்குத் தண்ணீர் தரத் தயார் என்றுதான் சொல்கிறது. ஆனால், திமுக தான் — அதாவது மு.க.ஸ்டாலின்தான் ‘கர்நாடகா தண்ணீர் திறந்துவிடக் கூடாது’ என்கிறார். அதனால்தான் கர்நாடகா தண்ணீர் தர மறுக்கிறது!"

— என்று பொறுப்பற்றுப் பேசியிருக்கிறார்.

இதை வெறும் உளறல் என்று பார்ப்பதை விட, பொய்யையே மூலதனமாகக் கொண்டுள்ள சங்கித்தனத்தின் வெளிப்பாடு என்றுதான் பார்க்க வேண்டும்.

கூத்துக் களமாய் தமிழ்நாடு

நிர்மல் குமாரின் இந்தப் பேச்சைக் கேட்டு டெல்டா விவசாயிகள் சிரிப்பதா அல்லது கதறி அழுவதா என்றே தெரியவில்லை!
  1. முரண்பாட்டின் உச்சம்: ஸ்டாலின் சொன்னால் கர்நாடக காங்கிரஸ் அரசு கேட்கும் என்றால், கடந்த காலங்களில் ஜூன் மாதத்திலேயே குறுவைச் சாகுபடிக்கு நீர் திறக்கப்பட்ட போது, "ஸ்டாலின் கேட்டுக்கொண்டதால்தான் கர்நாடகா காங்கிரஸ் நீர் திறந்தது" என்று இவர்கள் ஏற்றுக்கொள்வார்களா?
  2. முட்டாள்தனமான குற்றச்சாட்டு: தன் சொந்த மாநில விவசாயிகள் நீரின்றிக் கருகி அழியும் போது, தண்ணீர் பெற்றுத்தர வக்கற்றவர்கள் இப்படி பொறுப்பற்ற  ஒரு மலிவான அரசியல் கூத்து அரங்கேற்றுகின்றனர்.
  3. கர்நாடக அரசியலின் உண்மை: மேகதாட்டு அணை கட்டுவதையே நோக்கமாகக் கொண்டு, தமிழகத்திற்கான உரிமைகளை மறுக்கும் கர்நாடக காங்கிரசின் கன்னட இனவெறி அரசியலை மறைத்துவிட்டு, அதற்குத் தூபமிடும் வகையில் பேசுவது யாருக்கான அரசியல்?
அவதூறுகளை ஸ்டாலின் மீது அள்ளி வீசும் இந்த நடிகர் ஆட்சி, தண்ணீர் தர மறுக்கும் கர்நாடக காங்கிரசுக்கு எதிராகத் தனது மந்திரிசபையில் பங்கேற்கும் தமிழ்நாட்டு காங்கிரசை வெளியேற்றுவதுதானே? மானஸ்தனாய் இருந்தால் இதெல்லாம் உரைக்கும்.

"அறுக்க மாட்டாதவனுக்கு இடுப்பில் 1008 அருவாள்" என்ற பழமொழிக்கு ஏற்ப, எதைப் பேசுவது, எதை எங்குப் பொருத்துவது என்று தெரியாமல் பேசுவதுதான் இவர்களின் "மாற்று அரசியல்" லட்சணமா?

நாலு வார்த்தை பேசத் தெரியாதவர்களின் கையாலாகாத்தனம்!

தமிழகத்தின் வரலாற்றையோ, காவிரி நீர்ப்பங்கீட்டுச் சிக்கலின் பின்னணியையோ, அரசியலமைப்பு உரிமைகளையோ எதையுமே படித்தறியாமல், வெறும் திரைப்படக் கவர்ச்சியை மட்டுமே வைத்துக்கொண்டு நாற்காலியைப் பிடித்த கூட்டத்தின் கையாலாகாத்தனமே இத்தகைய பிதற்றல்கள் ஆகும்.

நாட்டின் மிக முக்கியப் பாசனச் சிக்கல் பற்றி நாலு வார்த்தை உருப்படியாகப் பேசத் தெரியாதவர்களையும், எந்தவித அரசியல் கோட்பாடும் இல்லாதவர்களையும் ஆட்சியில் உட்கார வைத்தால் நாடு என்ன கதியாகும் என்பதற்கு இவர்களின் இந்தப் பேச்சு ஒரு எச்சரிக்கை மணி!

நாம் சிந்திக்க வேண்டியது என்ன?

காவிரிப் பிரச்சனை என்பது ஏதோ இரு மாநில ஆளும் கட்சிகளின் அரசியல் விளையாட்டு அல்ல; அது லட்சக்கணக்கான உழைக்கும் விவசாயிகளின் வாழ்வுரிமைப் பிரச்சனை!

ஒருபுறம் மாநில உரிமைகளை அடகு வைத்தல்; மறுபுறம் அடிப்படைப் புரிதலே இல்லாமல் வெறும் பிம்பங்களை மட்டும் வைத்து மக்களை ஏமாற்றத் துடிக்கும் ‘நடிகரின்’ கையாலாகா அரசியல்.

இத்தகைய போலித்தனங்களையும், வரலாற்று அறியாமைகளையும் உழைக்கும் மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். காவிரி உரிமையை வென்றெடுக்கத் தேவை திரையுலகக் கவர்ச்சியோ, மேடை உளறல்களோ அல்ல; மக்களின் சமரசமற்ற போர்க்குணமிக்கப் போராட்டமே!

— தமிழ்மணி

Saturday, 1 August 2026

அறிவியல்–தொழில்நுட்பத்தில் இந்தியா ஏன் பின்தங்கியது? கீழடி உணர்த்தும் பாடம்!

முகவுரை

"உழைப்பே மனிதனை உருவாக்கியது" என்ற கருத்து சமூக அறிவியல் ஆய்வுகளில் முக்கியமான இடம் பெறுகிறது. களத்தில் இறங்கி உழைப்பவர்களுக்குத்தான் உற்பத்தியின் நுட்பங்களும், அதில் உள்ள சிக்கல்களும் நேரடியாகப் புரிகின்றன. வேலை முறையை மேம்படுத்தவும், உற்பத்தியைப் பெருக்கவும் வேண்டிய தேவை உருவாகும்போது, உழைப்பில் ஈடுபடும் மக்களின் அனுபவ அறிவிலிருந்தே புதிய கண்டுபிடிப்புகள் பிறக்கின்றன. இத்தகைய கண்டுபிடிப்புகளின் அடிப்படை ஊற்றாக உழைக்கும் மக்களின் அனுபவ அறிவே அமைகிறது.


இன்றைய நவீன தொழிற்சாலைகளில் புதிய உற்பத்தி முறைகளும் தொழில்நுட்ப மாற்றங்களும் உருவாகுவதற்கான அடிப்படை ஆற்றல் மிகு தொழிலாளர்களின் அனுபவம்தான். ஆனால், அந்த அனுபவம் அறிவியல் கல்வியுடனும் தொழில்நுட்பப் புரிதலுடனும் இணையும்போதுதான் அது புதிய கண்டுபிடிப்பாகவும் தொழில்நுட்ப முன்னேற்றமாகவும் மாறுகிறது. நான் பணியாற்றிய பி.ஹெச்.இ.எல். (BHEL) போன்ற பொதுத்துறை நிறுவனங்களில் இதை நேரடியாகக் கண்டும் உணர்ந்தும் இருக்கிறேன்.

1. உழைப்பும் கல்வியும் கரங்கோர்க்கும் இடமே அறிவியலின் பிறப்பிடம்

புதிய கண்டுபிடிப்புகள் வெறும் உடல் உழைப்பால் மட்டுமே உருவாகாது; அதுபோல புத்தக அறிவால் மட்டுமே உருவாகவும் முடியாது. உடல் உழைப்பின் அனுபவமும் அறிவியல் கல்வியும் ஒன்றிணையும் இடத்தில்தான் புதிய தொழில்நுட்பங்கள் உருவாகின்றன.
  • உழைப்பும் கல்வியும் இணையும் இடத்தில் புதிய கண்டுபிடிப்புகள் தோன்றுகின்றன.
  • புதிய கண்டுபிடிப்புகள் நவீன உற்பத்திக் கருவிகளை உருவாக்குகின்றன.
  • உற்பத்தி பெருகும்போது நாட்டின் பொருளாதாரமும் அறிவியல் திறனும் வளர்கின்றன.
  • அதுவே ஒரு நாட்டை முன்னேறிய நாடாக மாற்றுகிறது.
2. உலக நாடுகள் முன்னேறியபோது இந்தியா ஏன் பின்தங்கியது?

உலக மக்கள் அனைவரும் உழைக்கின்றனர். ஆனால் ஏன் சில நாடுகளில் மட்டும் அறிவியல் புரட்சிகள் தொடர்ச்சியாக நிகழ்ந்தன? இந்தியா போன்ற நாடுகளில் ஏன் அவை மந்தமடைந்தன?

இந்தக் கேள்விக்கான விடையை இந்தியச் சமூகக் கட்டமைப்பில் தேட வேண்டியுள்ளது.

வர்ணாசிரமமும் கல்வி மறுப்பும்
நால்வர்ணக் கோட்பாடு சமூக அமைப்பாக வலுப்பெற்ற பிறகு, உற்பத்தியில் ஈடுபட்ட பெரும்பான்மையான மக்களுக்கு கல்வி உரிமை மறுக்கப்பட்டது என்று பல சமூக வரலாற்றாய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

அறிவும் உழைப்பும் பிரிக்கப்பட்ட சமூகம்

உழைப்பவர்களிடம் அனுபவம் இருந்தது; ஆனால் கல்வி இல்லை.
கல்வி பெற்ற மேல்தட்டு வர்க்கம் அறிவைப் பெற்றிருந்தாலும், உற்பத்திக்கான உழைப்பில் நேரடியாக ஈடுபடவில்லை.

இந்தப் பிரிவினையால் அறிவும் உழைப்பும் ஒன்றிணையாத நிலை உருவானது. புதிய தொழில்நுட்பங்களும் உற்பத்திக் கருவிகளும் உருவாக வேண்டிய சமூகச் சூழல் பாதிக்கப்பட்டது.

கல்வியை மட்டும் பெற்றவர்கள், ‘எங்களுக்கு மூளை ஜாஸ்தி’ என்று  பெருமை பேசினாலும், அந்த மூளை கறிக்குகூட உதவாது என்பதுதான் வரலாறு.

சமூக அமைப்பின் தாக்கம்

இந்தியாவில் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு நீண்டகாலத் தடைகளில் ஒன்றாக, கல்வியைச் சமூகத்தின் பெரும்பகுதியிடமிருந்து விலக்கி வைத்த சாதியக் கட்டமைப்பை பல சமூக வரலாற்றாய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

கி.பி. 6–7 ஆம் நூற்றாண்டுகளுக்குப் பின்னர் உருவான பக்தி இலக்கிய கால பல சமூக–மத அமைப்புகளும் இந்தப் பிரிவினையை மேலும் வலுப்படுத்தின என்று சில ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

புலம்பெயர் தமிழர்களின் அனுபவம்

19 மற்றும் 20 ஆம் நூற்றாண்டுகளில் சமூக நீதி போராட்டங்களால் கல்வி வாய்ப்புகள் விரிவடைந்த பிறகு, முன்னர் கல்வி மறுக்கப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த பலர் இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் அறிவியல், மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட துறைகளில் குறிப்பிடத்தக்க சாதனைகளை நிகழ்த்தினர். திறமை குறைவாக இருந்ததல்ல; கல்வி வாய்ப்பு மறுக்கப்பட்டதே முக்கியத் தடையாக இருந்தது என்பதை இந்த அனுபவங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

3. கீழடி உணர்த்தும் வரலாற்றுப் பாடம்

சுமார் 5,000 ஆண்டுகளுக்கு முன்பே சிந்து சமவெளியில் திட்டமிட்ட நகர வாழ்க்கையும், சுமார் 2,600 ஆண்டுகளுக்கு முன்பு வைகைக் கரையில் கீழடியில் எழுத்தறிவும், வடிகால் அமைப்பும், உற்பத்தித் தொழிலும் வளர்ந்திருந்தன.
இத்தகைய நகர நாகரிகங்கள் இருந்தபோதும் அறிவியல் வளர்ச்சியின் தொடர்ச்சி இங்கு ஏன் தடைபட்டது என்பது இன்னும் ஆய்வுக்குரிய கேள்வியாக உள்ளது. 

கல்வி மறுப்பும் சாதியக் கட்டமைப்பும் அதற்கான முக்கியக் காரணிகளில் ஒன்றாகப் பல சமூக வரலாற்றாய்வாளர்கள் கருதுகின்றனர்.

இதற்கு மாறாக, ஐரோப்பா உள்ளிட்ட பல நாடுகளில் அனைவருக்கும் கல்வி பரவியதும் தொழிற்புரட்சியும் அறிவியல் வளர்ச்சியும் வேகமடைந்தன.
இந்த ஒப்பீடு, அறிவியல் வளர்ச்சிக்கு கல்வியின் சமூகப் பரவல் எவ்வளவு அவசியம் என்பதை எடுத்துக்காட்டுகிறது.

4. கீழடி அகழ்வாய்வும் இன்றைய பண்பாட்டுப் போராட்டமும்

கீழடி அகழ்வாய்வு, தமிழர் சமூகத்தின் பண்டைய நகர வாழ்வியலையும், எழுத்தறிவையும், உற்பத்தி சார்ந்த பண்பாட்டையும் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளது.

இன்றைய அரசியல் சூழலில், "ஒரே நாடு - ஒரே மொழி - ஒரே பண்பாடு" என்கிற கருத்தாக்கத்துடன் சேர்ந்து பாரம்பரிய குலத் தொழில்களை ஊக்குவிக்கும் சில திட்டங்கள், சாதி அடிப்படையிலான தொழில் அமைப்பை மீண்டும் வலுப்படுத்தக்கூடும் என்று விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

எனவே, அறிவியல் சிந்தனையையும் சமத்துவக் கல்வியையும் முன்னிறுத்தும் கீழடியின் வரலாற்றுப் பாடங்களை மக்களிடம் கொண்டு செல்வது மிகவும் அவசியமாகிறது.

அழைப்பு

இந்த வரலாற்றுப் பொறுப்பை மக்கள் கலை இலக்கியக் கழகம் (மகஇக) ஏற்றுள்ளது.
அதன் ஒரு பகுதியாக, 2026 ஆகஸ்ட் 22 (சனிக்கிழமை) அன்று தஞ்சையில் மாபெரும் "தமிழ் மக்கள் இசை விழா" நடைபெறுகிறது.

கீழடி முன்வைக்கும் சமத்துவக் கல்வியையும், சாதியற்ற நகர வாழ்வியலையும் மக்களிடம் கொண்டு செல்லும் இந்தப் பண்பாட்டுப் போரில் தோழர்களும், நண்பர்களும், உழைக்கும் மக்களும் பெருந்திரளாகப் பங்கேற்று ஆதரவு வழங்குமாறு அன்புடன் அழைக்கிறோம்.

கீழடியை உயர்த்திப் பிடிப்போம்!

அறிவியல் ஆதாரங்களைக் கொண்டு வரலாற்றைப் பாதுகாப்போம்!

வேத நாகரிகம் என்ற பெயரில் பரப்பப்படும் வரலாற்றுத் திரிபுகளை எதிர்கொள்ளத் தயாராவோம்!

தோழமையுடன்,

தமிழ்மணி
(பொன். சேகர், Ex-BHEL)

Friday, 31 July 2026

தமிழ் மக்கள் இசை விழா சிறக்க நிதி தாரீர்!

வணக்கம் நண்பர்களே, தோழர்களே!

"தானாக நிகழ்பவை எல்லாம் வரலாறல்ல... மனித சமூகத்திற்குப் பயன்படும் வகையில், இயற்கை அளித்த சூழலைப் பயன்படுத்தி வாழ்க்கையை மேலும் செழுமைப்படுத்தும் மனிதர்களின் உழைப்பும் போராட்டங்களுமே வரலாறாக மாறுகின்றன!"

உலக வரலாற்றின் போக்கு இதுதான். மனித உழைப்பால் உருவான இத்தகைய மகத்தான முயற்சிகள் சில வரலாற்றில் பதிவு செய்யப்பட்டுள்ளன; சில மறைந்துபோயுள்ளன.
இன்றைய நவீன காலத்தில் நிகழ்வுகள் அனைத்தும் எழுத்து வடிவிலும், ஒலி-ஒளி காணொளிகளாகவும் இன்ன பிற வடிவங்களிலும் உடனடியாகப் பதிவு செய்யப்படுகின்றன. ஆனால், தொழில்நுட்ப வசதிகள் இல்லாத முற்காலத்தில், மக்களின் எழுத்துக்கள், பயன்பாட்டுப் பொருட்கள், தொல்லியல் சான்றுகள் மற்றும் இலக்கியங்கள் மட்டுமே கடந்த கால வரலாற்றைப் பதிவு செய்தன.


கற்பனைப் புனைவா? வரலாற்றுச் சான்றா?

மறுபுறம், எந்தவிதமான தொல்லியல் சான்றுகளும் இல்லாமல், வெறும் கற்பனைப் புனைவுகளை மட்டுமே கொண்டு வரலாறு எழுதும் அபாயகரமான போக்கும் இங்கே நிலவுகிறது. அத்தகைய ஒரு போலித்தனமான போக்குதான் 'சரஸ்வதி நதி நாகரிகம்’ என்ற பெயரில் ஒரு கற்பனையை அடிப்படையாகக் கொண்ட 'வேத நாகரிகம்'!
இதற்கு இலக்கியச் சான்றுகளோ, தொல்லியல் சான்றுகளோ, கல்வெட்டுகளோ எதுவுமே கிடையாது. ஆற்றுப் படுகைகளில்தான் மனித நாகரிகங்கள் தோன்றி வளர்ந்தன என்கிற பொதுவான புரிதலை மட்டும் வைத்துக்கொண்டு, வரலாற்றில் அறியப்படாத 'சரஸ்வதி' நதியை வைத்து வேத நாகரிகத்தைக் கட்டமைக்க முயல்கிறார்கள்.

இத்தகைய சூழலில்தான், தமிழ்நாட்டின் வைகை நதிக்கரையில் நடைபெற்ற கீழடி அகழ்வாய்வு, ஆரிய-வேதப் புராணக் கதைகளை அடியோடு தகர்த்தெறிந்துள்ளது! 2,600 ஆண்டுகளுக்கு முன்பே சாதி, மதம் மற்றும் ஆன்மீகத் தடயங்கள் அற்ற, எழுத்தறிவு பெற்ற உயரிய நகர நாகரிகமாகத் தமிழர்கள் வாழ்ந்தார்கள் என்பதை கீழடி உலகிற்குப் பறைசாற்றியுள்ளது. "இந்திய வரலாற்றின் மிக முக்கியப் புள்ளி கீழடிதான்!" என்பதை அறிவியல் பூர்வமாக நிறுவியுள்ளது.

கீழடியை முடக்க முயலும் ஒன்றிய அரசு

இந்த வரலாற்று உண்மையை மூடிமறைக்கவே, கீழடி ஆய்வறிக்கையை முடக்கி, தொல்லியல் அறிஞர் அமர்நாத் ராமகிருஷ்ணன் அவர்களை ஒன்றிய மோடி அரசு பழிவாங்கும் நோக்கில் இடமாற்றம் செய்தது.
இங்கே 'ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே பண்பாடு' என்று சனாதனப் பாசிசத்தைத் திணித்து, பிறப்பின் அடிப்படையில் மனிதர்களைப் பிரிக்கும் சாதிய நச்சை விதைக்கிறார்கள். மற்றொருபுறம், கார்ப்பரேட் சுரண்டலாலும் சனாதன அடக்குமுறைகளாலும் உழைக்கும் மக்களைத் தொடர் இன்னல்களில் தள்ளிவிடுகின்றனர்.

இதற்கு மாற்று மருந்து — கீழடி முன்வைக்கும் "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்" என்ற சமத்துவப் பண்பாடே ஆகும்!

தஞ்சை 'தமிழ் மக்கள் இசை விழா' — ஒரு பண்பாட்டுப் போர்!

வேத நாகரிகப் பொய்மைகளை ஒழித்து, கீழடி தரும் சமத்துவப் பண்பாட்டை தமிழர் நெஞ்சங்களில் ஆழப் பதியச் செய்யும் மகத்தான பண்பாட்டுப் போரை மக்கள் கலை இலக்கியக் கழகம் (மகஇக) கையில் எடுத்துள்ளது!
அதன் ஒரு பகுதியாக, வரும் ஆகஸ்ட் 22 ஆம் தேதி தஞ்சை மண்ணில் மாபெரும் "தமிழ் மக்கள் இசை விழா" நடைபெறவுள்ளது. இந்த விழாவில் கீழடி அகழ்வாய்வின் அரசியல் மற்றும் வரலாற்று முக்கியத்துவத்தைக் காட்சிப்படுத்தும் சிறப்பு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. கீழடி உண்மைகளை உலகுக்குச் சொன்ன தொல்லியல் ஆய்வறிஞர் அமர்நாத் ராமகிருஷ்ணன் அவர்களும் தனது அனுபவங்களை நேரில் பதிவு செய்யவிருக்கிறார்.

கடந்த 45 ஆண்டுகளுக்கும் மேலாக மக்கள் கலை இலக்கியக் கழகத்தோடு பயணிக்கும் நானும், இதில் எனது நேரடிப் பங்களிப்பைச் செலுத்தி வருகிறேன். தொலைநோக்கு அரசியல் பார்வையும், எவருக்கும் அஞ்சாத சமரசமற்ற போர்க்குணமும் கொண்ட அமைப்புதான் 'மகஇக' என்பதை தாங்கள் நன்கறிவீர்கள்.

நண்பர்களே, தோழர்களே, உழைப்பையும் நிதியையும் தாராளமாகத் தாருங்கள்!

உடல் உழைப்பையும் பெரும் பொருட்செலவையும் கோரக்கூடிய ஒரு மாபெரும் நிகழ்வுதான் இந்தத் தமிழ் மக்கள் இசை விழா. எனவே, இந்நிகழ்ச்சி மாபெரும் வெற்றி பெற:

1.களத்தில் இறங்கி நேரடியாக உழைப்பைச் செலுத்தக்கூடிய தோழர்களும் நண்பர்களும் ஆர்வமுடன் முன்வர வேண்டும்!

2.கடந்த காலங்களில் தாராளமாக நிதி வழங்கி பேராதரவு தந்த நண்பர்களும் தோழர்களும், சனாதன எதிர்ப்புச் சிந்தனையாளர்களும் இந்த முறையும் பெரிய அளவில் நிதி உதவி செய்ய வேண்டும் என அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

"தாங்கள் வழங்கும் ஒவ்வொரு ரூபாயும் சனாதனப் பாசிசத்தின் மீது விழும் அடி! கீழடியை உயர்த்தும் பண்பாட்டுத் தூண்!"

தோழமையுடன்,

பொன். சேகர் @ தமிழ்மணி
Ex. BHEL

குறிப்பு:
சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக அனைவரையும் நேரில் சந்திக்கும் வாய்ப்பு அரிதாக இருப்பதால், தங்களது நிதிப் பங்களிப்பை Google Pay (GPay) மூலம் கீழ்க்கண்ட எண்ணுக்கு அனுப்பி வைக்குமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

GPay எண்: 94868 80758

QR Code:



Wednesday, 22 July 2026

வடலூருக்குத் தேவை 'தூய்மை'... 'புனிதம்' அல்ல!

வள்ளலார் வாழ்ந்த வடலூரைப் 'புனித நகரமாக' அறிவிக்கக் கோரி, வள்ளலாரின் சீடர்கள் என்ற பெயரில் ஒரு கும்பல் நடைபயணம் மேற்கொண்டு வருகிறது. மேலோட்டமாகப் பார்ப்பதற்கு இது ஏதோ ஆன்மீகக் கோரிக்கை போலத் தோன்றினாலும், இதன் பின்னணியில் இருப்பது உழைக்கும் மக்களின் அடிப்படை வாழ்வுரிமையையும் உணவு உரிமையையும் பறிக்கும் மிகக் கொடூரமான பாசிச எண்ணமே ஆகும்!


'புனிதம்' என்றால் என்ன?

வடலூரைப் 'புனித நகரமாக' அறிவித்தால் அங்கு என்ன நடக்கும்?

வடலூர் நகர எல்லைக்குள் ஆடு, கோழி, மீன் உள்ளிட்ட இறைச்சிக் கடைகள் (கவிச்சிக் கடைகள்) முற்றிலுமாகத் தடை செய்யப்படும். மக்கள் தங்கள் வீடுகளில் கூட அசைவம் சமைக்க முடியாது!

இறைச்சி சாப்பிட விரும்பினால், மக்கள் வடலூர் நகரை விட்டு வெளியே சென்று, அங்கேயே சாப்பிட்டு, அதைச் செரித்து, அங்கேயே கழிவை வெளியேற்றிவிட்டுப் புனிதர்களாகத்தான் வடலூருக்குத் திரும்ப வேண்டும்!

என்னவொரு அராஜகமான கோரிக்கை இது! மனிதர்களின் உணவு உரிமையைப் பறிக்கும் இந்த வன்கொடுமையை என்னவென்று சொல்வது?

'கவிச்சி' (அசைவம்) என்பது அருவருப்பானது, தீட்டானது என்பது அப்பட்டமான பார்ப்பனிய-சனாதனக் கருத்து.

வரலாற்றில் ஒடுக்கப்பட்ட, தீண்டாமைக்கு உள்ளாக்கப்பட்ட மக்களுக்கு உணவு மறுக்கப்பட்ட போது, அவர்கள் உயிர் வாழச் செத்த மாட்டையும் விலங்குகளையுமே உண்ண வேண்டிய சூழல் இருந்தது. தீண்டத்தகாதவர்கள் கவிச்சி உண்ணுவதால் கவிச்சியும் தீட்டாகக் கருதப்பட்டது. காலப்போக்கில், அசைவ உணவே உடலுக்கு வலு சேர்க்கும் மலிவான சத்துணவு என்பதால் அது உழைக்கும் மக்களின் முதன்மை உணவாக மாறியது.

'புனித' நகரமான ஹரித்துவாரில் அசைவ உணவு கிடைக்காமல் மக்கள் எங்ஙனம் அவதிப்படுகிறார்கள் என்பதை நேரில் பார்த்தவன் நான். எனவே, வடலூரைப் 'புனித நகரமாக' அறிவிக்கக் கோரி உழைக்கும் மக்களின் உணவு உரிமையில் கைவைக்கும் இந்த நபர்களின் கோரிக்கையை, அசைவப் பிரியர்களும் உழைக்கும் மக்களும் உறுதியாக முறியடிக்க வேண்டும்!

வடலூருக்கு தேவையானது புனிதமா? தூய்மையா?

வடலூருக்கு உண்மையில் தேவையானது புனிதம் அல்ல; தூய்மை. சாக்கடை நீர் ஓடாத தெருக்கள், குப்பைகள் இல்லாத பொதுவெளிகள், அனைவருக்கும் குடிநீர், சுகாதாரம், மருத்துவ வசதிகள் கொண்ட நகரம்தான் மக்களுக்கு தேவை. ஆனால் மக்களின் உணவுத் தட்டில் என்ன இருக்க வேண்டும் என்று கட்டளையிடும் 'புனித நகரம்' யாருக்குத் தேவை?

வள்ளலாரை சனாதன உலைக்களத்திற்குள் தள்ளும் சதி!

உண்மையிலேயே வள்ளலார் விலங்கு வதைக்கு எதிராகப் பேசியதை விட, சனாதன-பார்ப்பனிய வதைக்கு எதிராகப் பேசியதுதான் அதிகம்! அவர் ஒரு சமரசமற்ற சனாதன எதிர்ப்புப் போராளி. அப்படிப்பட்ட வள்ளலாரை மீண்டும் சனாதனப் பிடிக்குள் தள்ளி, அவரது பெயரால் 'புனிதக் கூச்சல்' போடுவது அவரது தத்துவத்திற்கே செய்யும் துரோகமாகும்.

வள்ளுவரின் புலால் மறுப்பும் காலச் சூழலும்

வள்ளுவர் கூட 'புலால் உண்ணாமை' குறித்துத் திருக்குறளில் (அதிகாரம் 26) பத்து குறட்பாக்களை எழுதியுள்ளார். வேளாண் உற்பத்தி பெரிய அளவில் பெருகாத, வேட்டையாடி உண்பதே வழக்கமாக இருந்த அக்காலகட்டத்தில் உயிர் பலியைத் தடுப்பதற்காக வள்ளுவர் அதை எழுதி இருக்கக்கூடும்.

ஆனால், அன்றைய வரலாற்றுச் சூழலில் எழுதப்பட்ட ஒன்றை இன்றைக்கும் அப்படியே பொருத்த முடியாது. இன்றைக்கு அசைவ உணவே உழைக்கும் மக்களுக்கு மலிவாக வலு சேர்க்கக்கூடிய உணவாக இருக்கும் போது, வள்ளுவரை அப்படியே பின்பற்ற முடியாது.

எந்தவொரு அறநெறியையும் அந்தந்தக் காலச் சூழலுக்கு ஏற்பப் புரிந்துகொள்ள வேண்டுமே தவிர, அதில் ஆன்மீகப் பொருள் தேடி மூர்க்கமாகப் பின்பற்றுவது அறிவீனம்!

அசைவமும் குற்றமும்: அறிவியலுக்குப் புறம்பான கட்டுக்கதை!

"அசைவம் சாப்பிட்டால் முரட்டு குணம் வரும், குற்றம் செய்வான்" என்று சனாதனம் பேசுகிறது. இது முற்றிலும் அறிவியலுக்குப் புறம்பான கட்டுக்கதை! அசைவ உணவு உண்பவர்கள் மட்டும்தான் குற்றம் செய்கிறார்களா? சைவப் போர்வையில் வலம் வரும் உத்தமர்கள் யாரும் குற்றம் செய்வதில்லையா?

தூய்மை-தீட்டு (purity-pollution) என்கிற உயர்மை-தாழ்மை என்கிற இந்து மதக்கோட்பாடுதான் சாதியத் தீட்டையும் வாழ்வியல் தீட்டையும் வரையறுக்கிறது. எங்கெல்லாம் புனிதம் பேசப்படுகிறதோ அங்கெல்லாம் தீட்டும் சேர்ந்தே இயங்குகிறது.

முடிவுரை

வடலூரைப் புனித நகரமாக அறிவிக்கக் கோருவதன் உள்ளே ஒளிந்திருப்பது மறைமுகத் தீண்டாமையே அன்றி வேறில்லை. எனவே, 'புனிதம்' என்ற பெயரில் மக்களின் உணவு உரிமையைப் பறிக்கவும் சாதியத் தீட்டைத் திணிக்கவும் யார் பேசினாலும், அவர்கள் மீது வன் கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் (SC/ST Act) கீழ் வழக்குப் பதிவு செய்ய வேண்டும்!

வள்ளலார் வாழ்ந்த வடலூரை குப்பைகள் இல்லாத, சாக்கடைகள் இல்லாத, நோய்நொடியற்ற "தூய்மை நகரமாக" மாற்ற அரசு நடவடிக்கை எடுக்கட்டும். அதுதான் மக்கள் வாழத் தகுதியான நகரமாக இருக்கும். அதை விடுத்து, 'புனித நகரம்' என்ற பெயரில் மக்களின் வாழ்வுரிமையை உணவோடு சேர்த்துப் பறிக்க நினைப்பது அப்பட்டமான சனாதன பாசிசமே!

— ஊரான்