Saturday, 27 May 2023

கோவனின் கால் தூசுக்குப் பெறாதவர்கள் கோவனை விமர்சிப்பதா?

அரசியல் கட்சிகளுக்கிடையே, இயக்கங்களுக்கிடையே ஆயிரம் கருத்து வேறுபாடுகள் எழுவது இயல்பு. அத்தகையக் கருத்து வேறுபாடுகளை கடுமையான முறையில்கூட விமர்சனம் செய்யலாம். அதுதான் ஒரு சரியான அணுகுமுறையாக இருக்கக் கூடும்.

சமீபத்திய கள்ளச்சாராயச் சாவுகள் குறித்து, மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாநில பொதுச் செயலாளர் தோழர் கோவன் அவர்களை தனிப்பட்ட முறையில் ஒரு சிலர் இழிவு படுத்தி வருகின்றனர். குறிப்பாக வினவு தளத்தைச் சார்ந்த மருது (எ) ராமு என்கிற ஒரு நபர், தோழர் கோவன் அவர்களை "கோபாலபுரத்து நாய்!" என்று மிகவும் கீழ்த்தரமாகப் பேசியது மிகவும் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது மட்டுமல்ல வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் மருது என்கிற நபர் மீது நடவடிக்கை எடுப்பதற்கும் உரியதாகும். 

அதுமட்டுமன்றி கோவன் என்கிற பெயரை அமைப்பு வைத்ததாகவும் அந்தப் பெயரை அவர் பயன்படுத்தக் கூடாது என்றும் அந்த நபர் கட்டளையிடுகிறார். தோழர் கோவனின் அனுபவம் அளவிற்கு கூட மருதின் வயது கிடையாது. தோழர்கள் அமைப்புக்குள் வரும்பொழுது ஒவ்வொருவரும் தங்களுடைய புனைப் பெயர்களை அவர்களேதான் தேர்வு செய்து கொண்டார்கள். உடன் இருந்த என்னைப் போன்றவர்களுக்குத்தான் அது தெரியும்.

தோழர் கோவன் அவர்களை மருது என்கிற நபர் இவ்வாறு இழிவாகப் பேசுவதற்கு அடிப்படையான காரணம் அரசியல் மட்டும் அல்ல, அதில் சாதிய வன்மமும் உள்ளடங்கி இருக்கிறது.

எனவே, தோழர் கோவன் அவர்களை இழிவுபடுத்திப் பேசிய வினவு கும்பலைச் சேர்ந்த மருது மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும். இத்தகைய நாகரிகமற்ற விமர்சனங்களை நாம் அனுமதிப்போமேயானால் எதிர்காலத்தில் அரசியல் இயக்கங்களுக்கிடையே மிகவும் மோசமான ஒரு பண்பாட்டை இது உருவாக்கிவிடும்.

ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தின் ஒடுக்கப்பட்ட மிகவும் ஏழ்மையான கூலி விவசாயக் குடும்பப் பின்னணியைக் கொண்டவராக இருந்தாலும், ஆயிரக்கணக்கில் ஊதியம் பெறக்கூடிய மத்திய அரசுக்குச் சொந்தமான புகழ் பெற்ற பெல் (BHEL) நிறுவன வேலையை உதறிவிட்டு புரட்சிப் பணிக்கு வந்தவரை இழிவு படுத்திப் பேசுவோர் ஈவிரக்கமற்ற ஈனர்கள். 

நல்ல ஊதியம் பெறக்கூடிய ஒரு வேலை பறிபோனால் அல்லது வேலையை விட்டு விட்டால் அந்தக் குடும்பம் பொருளாதாரத்திற்காக, எத்தகையத் துன்பங்களைச் சந்திக்க நேரிடும் என்பதை அனுபவித்தவன் என்கிற உரிமையில் சொல்கிறேன், இத்தகையப் போராளிகளை இழிவுபடுத்துவது மன்னிக்க முடியாத குற்றம்.

எனவே, மருது என்கிற நபருக்கு எதிரான கண்டனங்களை உரத்து எழுப்புவோம்! மருது மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கக் குரல் கொடுப்போம்!

தமிழ்மணி 

தொடர்புடைய பதிவுகள்

கோவன் திமுக-வுக்கு விலை போகிறாரா?



No comments:

Post a Comment