தோழர் ராஜூ தலைமையிலான மக்கள் அதிகாரம், வெற்றிவேல் செழியன் தலைமையிலான 'மக்கள் அதிகாரம்', முத்துக்குமார் தலைமையிலான 'மக்கள் அதிகாரம்' என ஒரே பெயரில் மூன்று குழுக்கள் தமிழகத்தில் செயல்படுகின்றன.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, தோழர் ராஜூ தலைமையிலான மக்கள் அதிகாரம் அமைப்பிலிருந்து சுமார் 20% பேரோடு வெற்றிவேல் செழியன் வெளியேறினார். உளவுத்துறை இதை 80:20 என்றுதான் குறிப்பிடுகிறது. மக்கள் அதிகாரம் கொடியில் இடது பக்கமாக கருப்பு வண்ணத்தில் இருந்த கையை வெள்ளையாக்கி வலது பக்கம் திருப்பிக் கொண்டனர்.
அதன் பிறகு சுமார் ஓர் ஆண்டுக்கு முன்பு வெற்றிவேல் செழியனுக்கு எதிராகக் கலகம் செய்து செழியனிடமிருந்த சுமார் 50% பேரோடு வெளியேறியவர்கள் முத்துக்குமார் தலைமையில் மக்கள் அதிகாரம் என்ற பெயரில் 'ரைட்ல திருப்ன' கொடியைப் பயன்படுத்திக் கொண்டு செயல்பட்டு வருகின்றனர்.
'ரைட்ல' திருப்பிட்டா மட்டும் வண்டி ஓடுமா என்பது அந்த இருவருக்கும் மட்டும்தான் வெளிச்சம்.
எந்த ஒரு இயக்கமாக இருந்தாலும், அரசியல் மற்றும் அமைப்பு காரணங்களுக்காக, அந்த இயக்கத்தில் கருத்து வேறுபாடுகள் எழுவது இயல்பான ஒன்றுதான். அவ்வாறு கருத்து வேறுபாடுகள் எழும்போது பெரும்பான்மைக் கருத்தை ஏற்றுக் கொண்டு, மாற்றுக் கருத்து உள்ள சிறுபான்மையினர் செயல்படுவதுதான் ஜனநாயக நடைமுறை. ஜனநாயக மத்தியத்துவக் கோட்பாட்டின் அடிப்படை விதிகளில் இதுவும் ஒன்று. கம்யூனிச இயக்கங்களில் செயல்படுவோர் இதை நன்கறிவர்.
பெரும்பான்மைக் கருத்தை ஏற்றுக் கொண்டு, அதே அமைப்பில் செயல்பட விரும்பாதோர், அந்த அமைப்பிலிருந்து வெளியேறி புதிதாக ஒரு அமைப்பை உருவாக்கிக் கொண்டு, தனி ஒரு அமைப்பாக செயல்படுவதற்கு எந்தத் தடையும் இல்லை.
ஆனால், மேற்கண்ட ஜனநாயகக் கோட்பாடுகளை சிறிதும் மதிக்காமல், வெற்றிவேல் செழியனும், முத்துக்குமாரும், மக்கள் அதிகாரம் பெயரில் செயல்படுவது மிகவும் கேடான, மக்களைக் குழப்பத்தில் ஆழ்த்தும் இழிவான சீர்குலைவு நடவடிக்கையாகும்.
அதே போல் மக்கள் கலை இலக்கியக் கழகத்தில் (மகஇக) பாடகர் தோழர் கோவன் தலைமையில் பெரும்பான்யினர் செயல்படும் அதே வேளையில், மதுரையைத் சேர்ந்த இராமலிங்கம் என்பவர் தலைமையில் ஒரு மகஇக செயல்படுவது போலவும், தோழர் லோகநாதன் தலைமையை பெரும்பான்மையினர் ஏற்றுக் கொண்டு புதிய ஜனநாயகக் தொழிலாளர் முன்னணி செயல்படும் போது, தோழர் அன்பு தலைமையை பெரும்பான்மையினர் ஏற்றுக் கொண்டு புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி செயல்படும் போது, அதே பெயர்களில் வெற்றிவேல் செழியன் மற்றும் முத்துக்குமார் தரப்பினர் செயல்பட்டுக் கொண்டு குழப்பத்தை ஏற்படுத்தி வருகின்றனர்.
மேலும் 'வினவு' தளத்தையும், 'புதிய ஜனநாயகம்' அரசியல் ஏட்டையும் பெரும்பான்மையினரிடம், அதாவது தோழர் ராஜூ தரப்பிடம் ஒப்படைக்காமல் சிறுபான்மை கோஷ்டியான வெற்றிவேல் செழியன் தரப்பினர் பயன்படுத்துவதும் ஜனநாயகக் கோட்பாட்டிற்கு எதிரானதாகும்.
பல்வேறு ஜனநாயக சக்திகளும், மேற்கண்ட உண்மைகளைப் புரிந்து கொண்டு, தோழர் காளியப்பன் குறிப்பிட்டதைப் போல வெற்றிவேல் செழியன் மற்றும் முத்துக்குமார் தரப்பினரிடம் கேள்விகள் எழுப்ப வேண்டும்.
பிரிந்து சென்றவர்கள் தனிப் பெயரில் செயல்படும்போது காலப்போக்கில் குறிப்பிட்ட பிரச்சனைகளில் அவர்களோடு கூட்டு சேர்ந்து செயல்படுவதும் தவிர்க்க முடியாத ஒன்றாக மாறும்.
சம்பந்தப்பட்டவர்கள் புரிந்து கொண்டால் ஜனநாயகம் மேலும் வலுப்பெறும். இல்லையேல் குழப்பமும், சீர்குலைவும் மட்டும்தான் எஞ்சி நிற்கும்.
தமிழ்மணி
தொடர்புடைய பதிவுகள்
No comments:
Post a Comment