Friday 16 September 2022

மனுதர்ம சாஸ்திரத்தை ஏன் எரிக்க வேண்டும்? தொடர்---4

அவாளெல்லாம் "சூத்திரவாள்!" என்று தொலைக்காட்சி ஊடகங்களில் சில பார்ப்பனப் பண்டிதர்கள் பேசுவதை நாம் பார்த்திருப்போம்! சுப்ரமணிசாமி கூட பல நேரங்களில் கலைஞர் உள்ளிட்ட மற்றவர்களைக் குறிப்பிடும் போது அவாளெல்லாம் சூத்திரவாள்  என்று பேசியதைக் கேட்டிருப்போம். பார்ப்பனர்கள் சொல்லுகிற சூத்திரவாள் பட்டியலில் யார் யாரெல்லாம் வருவார்கள்? பார்ப்பனர்களைத் தவிர பிள்ளைமார், முதலியார், ரெட்டியார் உள்ளிட்ட மற்ற அனைவருமே சூத்திரவாள்தான் என்பதில் பார்ப்பனர்கள் மிகத் தெளிவாகவே இருக்கின்றனர். ஆனால் தாங்கள்தான் சூத்திரர்கள் என்று எந்த ஒரு சாதியும் ஏற்றுக்கொள்ள முன் வருவதில்லை.

ஆனால் வன்னியர்களும், முத்தரையர்களும், தேவர்களும், மறவர்களும் தங்களை ஆண்ட பரம்பரை என்றும், தாங்கள் மட்டுமே சத்திரியர்கள் என்றும் பெருமை பேசிக் கொள்கின்றனர் இது உண்மையா? 

அதேபோல சில செட்டியார்கள் தங்களை வைசியர்கள் என்று கருதிக் கொள்கின்றனர்? இதுவும் உண்மையா?

வருணக் கோட்பாடும், சாதியக் கட்டமைப்பும் இரண்டாயிரம் ஆண்டு வரலாறு கொண்டது. அம்பேத்கரும் பெரியாரும் மட்டுமா சனாதனத்திற்கு எதிராகப் போராடினார்கள்? பார்ப்பனியம் தோன்றிய காலத்தில் இருந்தே அதற்கு எதிரானப் போராட்டத்தை மக்கள் மட்டுமல்ல மன்னர்களும்கூட முன்னெடுத்துள்ளனர்.

தென் இந்திய நிலப்பகுதியான திராவிட பூமியை ஆண்ட சத்ரிய மன்னர்கள் அனைவரும் பார்ப்பனிய எதிர்ப்பின் முன்னோடிகள். அந்தப் பாரம்பரியம்தான் இன்றும் தமிழகத்தில் தொடர்கிறது.

பார்ப்பனியத்துக்கு சிம்ம சொப்பனமாய் இருந்த மாவலி, இரணியன் உள்ளிட்ட ஏராளமான சத்ரிய மன்னர்களை நயவஞ்சகமாகக் பார்ப்பனர்கள் கொன்றொழித்தார்கள். பார்ப்பனியத்தை ஏற்க மறுத்த ஏனைய சத்ரிய மன்னர்களை சத்ரிய நிலையிலிருந்து தரவிறக்கம் செய்து சூத்திரர்கள் என அறிவித்தனர். (மனு  10-43, 44)

சதியால் கொல்லப்பட்ட மாவலி மன்னன்

பார்ப்பனியத்திற்கு எதிராக எப்பொழுது மன்னர்கள் போராடினார்களோ அப்பொழுதே பார்ப்பனனுக்குக் கெட்ட காலமும் தொடங்கிவிட்டது. அதனால்தான் "கலி முத்திடுச்சு" என்று சொல்லி காலத்தை நான்காக வகுத்து பார்ப்பன எதிர்ப்புக் காலத்தைக் கலிகாலம் என்றாக்கினர். 

தற்போதைய காலமும் கலிகாலம்தான். அதனால்தான் கலிகாலத்தில் பார்ப்பனன், சூத்திரன் ஆகிய இரு வர்ணங்களைத் தவிர வேறு  வர்ணங்கள் கிடையாது என்கின்றனர் பார்ப்பனர்கள்.

மனுதர்ம சாஸ்திரம் உருவாக்கிய கேடுகளிலேயே மிகக் கொடிய கேடு இந்தியாவின் ஊர்-சேரி அமைப்புதான். தீண்டாமை என்னும் அவலம் இந்த நூற்றாண்டிலும் தொடர்வதற்கு அடிப்படையே மனுதர்ம சாஸ்திரம்தான்.

பிறப்பின் அடிப்படையில் மக்களை நான்கு வருணங்களாகப் பிரித்து சூத்திரர்களை இழிமக்கள் என்றான். பார்ப்பனப் பெண்ணுக்கும் சூத்திர பையனுக்கும் பிறந்த வாரிசை சண்டாளன் (பறையர்) என்று சொல்லி ஊருக்கு வெளியே விரட்டி அடித்தான். அவையே இந்தியாவின் சேரிகளாக நிலை பெற்று இன்றளவும் தீண்டாமைக்கு நிலவுவதற்கு அடிப்படையாய் அமைந்தன. (மனு: 10-12).

பல்வேறு சாதிகளின் தோற்றம் மற்றும் அவர்கள் வாழ வேண்டிய இடம், செய்ய வேண்டிய தொழில் குறித்து அத்தியாயம் 10-ல் விரிவாக விளக்குகிறான் மனு‌.

மனுதர்ம சாஸ்திரத்தை எரிப்பதற்கு ஓராயிரம் காரணங்கள் உண்டு என்றாலும்,  தீண்டாமைக்கு வழி வகுத்த ஒரு காரணத்திற்காகவாவது அதை எரித்தே ஆக வேண்டும்.

மாதவிடாயைத் தீட்டு என்றான் மனு. அதனால் சபரிமலைக்குச் செல்ல பெண்களுக்குத் தகுதி இல்லை என்பது விதியாகிவிட்டது. மனு சொன்னதைத்தான் உச்ச நீதி மன்றமும் உறுதி செய்கிறது. (மனு: 3-46, 4-57)

வேளாண்மையை இழிதொழில் என்கிறான் மனு. மனு சொன்னதை சிரமேற்கொண்டு, சோத்துக்கே வழி இல்லை என்றாலும் வேளாண் தொழிலை தொட மறுக்கின்றனர் பார்ப்பனர்கள். (மனு: 10-83, 84)

புதிய இல்லம் கட்டும் பொழுது சண்டாளர் அதாவது பறையர் உள்ளிட்டோர் வந்து வேலை செய்திருக்கலாம் என்பதனால் அவ்விடம் தீட்டாகி இருக்கும்; எனவேதான் கிரகப்பிரவேசம் என்ற பெயரில் வீட்டுக்குள் பசு மாட்டை ஓட்டிக் கோமியம் தெளித்து தீட்டுக் கழித்து புனிதமாக்குகிறான். மனு வகுத்த இந்த விதியை எரிக்க வேண்டியவனே அய்யரை வைத்து பிரவேசம் செய்கிறான். (மனு: 5-124)

மனுதர்ம சாஸ்திரத்தை ஏன் எரிக்க வேண்டும் என்பது குறித்து எழுத ஏராளம் இருக்கு. மக்கள் அதிகாரம் அமைப்பு நடத்தும் மனுதர்ம எரிப்புப் போராட்டம் நாளை நடப்பதால் இத்தோடு இந்தத் தொடரை முடித்துக் கொள்கிறேன். ஏற்கனவே நான் "ஊரான்" வலைப்பூவில் எழுதி வரும் "அம்பேத்கர் பார்வையில் இந்து மதம்!" என்ற தொடரில் சந்திக்கலாம். 

நன்றி! வணக்கம்!

தமிழ்மணி.

தொடர்புடைய பதிவுகள்





No comments:

Post a Comment