Wednesday 14 September 2022

மனுதர்ம சாஸ்திரத்தை ஏன் எரிக்க வேண்டும்? தொடர்-2

சனாதன தர்மம், மனு என்பவனால் தொகுக்கப்பட்டதனால் அது மனுதர்ம சாஸ்திரம் என்று அழைக்கப்படுகிறது. உலகம் எப்படி உருவானது என்பதில் தொடங்கி, அதில் உயிரினங்கள்,  மரங்கள், செடிகள், பறவைகள், விலங்குகள், எப்படிப் தோன்றின, மனிதர்களின் தோற்றம்-வளர்ச்சி-தொழில்-திருமணம்-சமூக வாழ்க்கை-இறப்பு-கருமாதி உள்ளிட்ட சகலத்தையும் குறித்து ஏராளமான விதிகளை 12 அத்தியாயங்களாகத் தொகுத்துள்ளான் மனு. 

மனுதர்ம சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ள ஒவ்வொரு வாக்கியமும் ஏட்டளவில் மட்டும் இருப்பதாக யாரும் கருதி விடாதீர்கள். அதில் சொல்லப்பட்டுள்ள விதிகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு இந்துவின் அன்றாட வாழ்வில் நடைமுறையில் இரண்டறக் கலந்துள்ளன. இந்திய கிறிஸ்தவர்களைக் கூட மனு ஆட்கொண்டுள்ளான் என்றால் அது மிகையல்ல. மனுதர்மத்தில் சொல்லப்பட்டுள்ள ஒவ்வொரு சுலோகத்தையும் அன்றாட வாழ்வின் நடைமுறையோடு பொருத்திப் பார்க்கும் பொழுது அதை நம்மால் உணர முடியும்.

பிறப்பில் ஏற்றத் தாழ்வு!

பிரம்மாவின் முகத்திலிருந்து பார்ப்பனனும், தோளிலிருந்து சத்திரியனும், தொடையிலிருந்து வைசியனும், காலிலிருந்து சூத்திரனும் தோன்றியதாக மனு கூறுகிறான். (மனு: 1-31) பிரம்மாவின் முகத்திலிருந்து தாங்கள் தோன்றியதாகப் பார்ப்பனர்கள் தங்களைக் கருதிக் கொள்வதால்தான் மற்ற எல்லோரையும் விட தாங்கள் உயர்ந்தவர்கள் என்று கர்வம் அடைகின்றனர். பிறப்பின் அடிப்படையில் தன்னை ஒருவன் உயர்ந்தவனாகக் கருதிக் கொள்கிறான் என்றால் மற்றவர்கள் எல்லாம் அவனுக்குக் கீழே உள்ள தாழ்ந்தவர்கள் என்று பொருள் இயல்பாகவே வந்துவிடுகிறதுல்லவா?

பிரம்மனின் தேகம் பரிசுத்தமானதாம்; அதிலும் தொப்புளுக்கு மேலே அதிகம் பரிசுத்தமானதாம்; மேலும் பிரம்மாவின் முகம் மிகவும் பரிசுத்தமானதாம் (1-92). இந்த அதிகம் பரிசுத்தமான இடத்தில் பார்ப்பனன் பிறந்ததினால்தான் அவன் தன்னை உயர்த்தவனாகக் கருதிக் கொள்கிறான்.

இந்த ஒரு காரணத்திற்காகவே மனுதர்ம சாஸ்திரத்தை நாம் ஏன் எரிக்கக் கூடாது?

எந்தத் தொழிலை நீ செய்யலாம்?

ஒவ்வொரு மனிதனிடமும் எத்தகையத் திறமை இருக்கிறதோ, அதற்கு ஏற்ப அவன் தனது தொழிலைச் செய்வதற்கு மனு இடம் தரவில்லை. மாறாக பிறப்பின் அடிப்படையிலேயே மனிதர்களுக்கானத் தொழிலை தீர்மானிக்கிறான் மனு. பார்ப்பானுக்கு படிப்பையும், சத்ரியனுக்கு குடிகளைக் காக்கும் அரச பொறுப்பையும், வைசியனுக்கு வேளாண்மையையும் - வியாபாரத்தையும், மேற்கண்ட மூன்று பிரிவினருக்கும் அடிமைப் சேவகம் செய்வதை சூத்திரனுக்கும் தொழிலாக வகுக்கிறான் மனு. அதுவும் மற்ற மூன்று வருணத்தாருக்கும் பொறாமை இன்றி பணி செய்வதை சூத்திரனுக்கு முக்கியக் கடமையாக ஏற்படுத்தினானாம் பிரம்மன். (மனு: 1-88, 89, 90, 91). சூத்திரர்கள் எக்காரணத்தைக் கொண்டும் படித்து விடக்கூடாது என்பதில் குறியாக இருக்கிறான் மனு.  அதையேதான் 'நீட்' என்ற பெயரில் இன்றைய மனுவாதிகள் நடைமுறைப்படுத்தி வருகின்றனர். இந்த ஒரு காரணம் போதாதா மனுதர்ம சாஸ்திரத்தை ஏறிப்பதற்கு?

குருவுக்குத் தெரியாமல் எவன் ஒருவன் கல்வியை அல்லது வித்தையை கற்றுக் கொள்கிறானோ அவன் வேதத்தை திருடிய குற்றத்திற்கு ஆளாகிறான். (மனு: 2-116)  ஏகலைவனின் கட்டை விரல் அதற்காகத்தான் வெட்டப்பட்டது. இதை குரு பக்தி என கதையாக்கினார்கள் மகாபாரதத்தில். 


அனைத்து சாதி அர்ச்சகர் பிரச்சனை!

ஓதுவித்தல் தொழிலைப் பார்ப்பனர்கள் மட்டுமே செய்ய வேண்டும் என்று அன்றைக்கே முழு இட ஒதுக்கீடு செய்தவன் மனு. (1-88). அனைத்து சாதி அர்ச்சகர் பிரச்சனையில் தங்களுக்கு வருமானம் போகிறதே என்கிற கவலையைவிட, தங்களுடைய அந்தஸ்தும் அதிகாரமும் பறிபோகிறதே என்பதனால்தான் இதைப் பார்ப்பனர்கள் கடுமையாக எதிர்க்கின்றனர்.

பெயர் சூட்டுவதில் தீண்டாமை!

விரும்பியப் பெயரை வைப்பதற்குக்கூட மனு நமக்கு இடம் தரவில்லை. பார்ப்பானுக்கு மங்களத்தையும், சத்திரியனுக்கு பலத்தையும், வைசியனுக்கு பொருளையும், சூத்திரனுக்கு தாழ்வையும் குறிக்கும்படி பெயர் சூட்ட வேண்டும் என்கிறான் மனு. (2-31). 

அவ்வாறு பெயர் சூட்டும் போது பார்ப்பானுக்கு சர்மா என்றும், சத்திரியனுக்கு வர்மா என்றும், வைசியனுக்கு பூதி என்றும், சூத்திரனுக்கு தாசன் என்றும் முடியும் வகையில் பெயர் சூட்ட வேண்டும் என்கிறான் மனு. (2-32). ஒருவனின் பெயரை வைத்தே அவன் உயர்ந்தவனா, தாழ்ந்தவனா என்பதை பறை சாற்றுகிறான் மனு. பெயர் வைப்பதில் கூட ஏற்றத் தாழ்வை புகுத்தி இருக்கும் மனுதர்ம சாஸ்திரத்தை எரிக்காமல் கொண்டாடவா முடியும்?

மன்னனுக்கே மரியாதை இல்லை! 

பத்து வயது பார்ப்பானை தந்தையாகவும், நூறு வயது சத்ரியனை மகனாகவும் கருத வேண்டுமாம். (மனு: 2-135). சத்ரியனுக்கே இந்தக் கதி என்றால் சூத்திர மண்ணாங்கட்டிகளின் நிலையை எண்ணி பாருங்கள்.  'டேய் முனியா' என்று ஒரு நூறு வயது முதியவரைப் பார்த்து, பூணூல் அணிந்த ஒரு பத்து வயது பார்ப்பனச் சிறுவன் அழைத்ததில்லையா? சாதியப் படிநிலையில் கீழே இருப்பவனுக்கு மேலே உள்ளவன் கொடுக்கும் மரியாதை இதுதான். இப்படி ஒரு கேடுகெட்ட விதியை வகுத்த மனுவை என்ன செய்யலாம்?

தமிழ்மணி

---தொடரும்

தொடர்புடைய பதிவுகள்





No comments:

Post a Comment