செப்டம்பர் 17, 2022, பெரியார் பிறந்த நாளில், மனுதர்ம, வேத-ஆகம எரிப்புப் போராட்டத்தை திருச்சி திருவரங்கத்தில் நடத்தப் போவதாக மக்கள் அதிகாரம் அமைப்பு அறிவித்துள்ளது.
சுமார் 95 ஆண்டுகளுக்கு முன்பு பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் அவர்களும் மனுதர்ம சாஸ்திர எரிப்புப் போராட்டத்தை நடத்தியுள்ளார். எப்பொழுதெல்லாம் சனாதன தர்மத்தை நிலை நாட்டுவதற்கு பார்ப்பனியம் மிகுந்த பிரயத்தனம் செய்கிறதோ, அப்பொழுதெல்லாம் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் முதல் இன்று வரை மனுதர்ம சாஸ்திர எரிப்புப் போராட்டம் என்பது நடத்தப்பட்டே வருகிறது.
சனாதன தர்மம் என்றால் என்ன?
இன்று, இந்து மதம் என்று அழைக்கப்படும் ஒன்றுதான் ஆங்கிலேயர் வருகைக்கு முன்பு சனாதன மதம் என்று அழைக்கப்பட்டு வந்தது. சனாதனம் என்றால் மாறாதது, நிலையானது என்று பொருள். தர்மம் என்றால் வாழ்வியல் முறை மற்றும் கடமைகளைக் குறிப்பதாகும். எளிமையாகச் சொன்னால் இந்து மதத்தில் உள்ளவர்கள் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகளையும் கடமைகளையும் குறிப்பதுதான் சனாதன தர்மம் ஆகும்.
இந்திய நாட்டில் வாழுகின்ற ஒரு இந்தியக் குடிமகன் எப்படி நடந்து கொள்ள வேண்டும்?, அவனுடைய கடமைகள் என்ன?, உரிமைகள் என்ன?, என்பது குறித்து எப்படி "இந்திய அரசியலமைப்புச் சட்டம்" வரையறுக்கிறதோ, அது போல ஒரு இந்து எப்படி நடந்து கொள்ள வேண்டும்?, அவனது கடமைகள் என்ன?, உரிமைகள் என்ன?, என்பது குறித்து இந்து மதச் சட்டம் வரையறுக்கிறது. மனுதர்ம சாஸ்திரம்தான் அந்த இந்து மதச் சட்டம். மனுதர்ம சாஸ்திரத்தை அடிப்படையாகக் கொண்டுதான் இந்தியாவின் "புதிய அரசியலமைப்புச் சட்டத்தை" நாக்பூர் ஆர்.எஸ்.எஸ் தலைமையகம் ஏற்கனவே தயாரித்து விட்டதாகச் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.
ஒரு மக்கள் கூட்டம் சேர்ந்து ஒன்றாக வாழும் பொழுது, அந்தக் கூட்டத்தைச் சார்ந்தவர்கள் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் என்ன?, அவர்களுக்கான கடமைகள் என்ன?, உரிமைகள் என்ன?, என்பதை அந்த மக்கள் கூட்டம் வரையறுத்துக் கொள்வதில் தவறேதுமில்லை. உலகில் உள்ள எல்லா மதக் குழுக்களும், இனக் குழுக்களும் அத்தகைய நெறிமுறைகளை வகுத்துக் கொண்டுள்ளனர்.
இரு வேறுபட்ட மதக் குழுக்கள் அல்லது இனக் குழுக்களுக்கு இடையே, தாங்கள் கடைபிடிக்கும் நெறி முறைகளில் கருத்து மாறுபாடுகள் ஏற்படும் போது, அவர்களுக்கிடையே பிணக்குகளும், மோதல்களும் நடந்து வருவதை நாம் அறிவோம். எந்த மதக் குழு வெற்றி பெறுகிறதோ அந்தக் குழுவின் பின்னால் மக்கள் செல்வது தவிர்க்க முடியாத ஒன்றாகி விடுகிறது. இப்படித்தான் மதங்கள் பரவுகின்றன, அல்லது விரிவடைகின்றன.
சனாதன தர்மத்தை அச்சாரமாகக் கொண்ட இந்து மதத்தில் மட்டும்தான் அவர்களுக்குள்ளேயே பிணக்குகளும் மோதல்களும் அன்றாடம் அரங்கேறுகின்றன. ஆகையினால்தான், பிற மத நம்பிக்கைகளை வீழ்த்தி விட்டு அதனால் தன்னை மேலும் விரிவுபடுத்திக் கொள்ள முடியவில்லை.
மனுதர்மம்தான் இந்துக்களின் சட்டம்!
இந்திய தண்டனைச் சட்டம் எப்படி 'இந்தியன் பீனல் கோடு' (IPC) என்று அழைக்கப்படுகிறதோ, அதுபோலத்தான் இந்து மதச் சட்டமான மனுதர்ம சாஸ்திரம், 'மனு கோடு' என்று அழைக்கப்படுகிறது. மனுதர்ம சாஸ்திரம்தான் இந்துக்களின் சட்டம் என்பதில் இரு வேறு கருத்துக்கு இடமில்லை.
பொதுவாகப் படிப்பதனால் மட்டும் சட்டங்கள் நமக்குப் புரிந்து விடுவதில்லை. ஒரு சட்டம் காட்சிப்படுத்தப்படும் பொழுது அல்லது கதையாகச் சொல்லப்படும் பொழுது அது எளிமையாகப் புரிவதோடு, ஆழமாக மனதில் வேரூன்றி விடுவதால் வாழ்க்கை நெடுக அதை நாம் கடைபிடிக்கிறோம். அப்படித்தான் மனுதர்ம சாஸ்திர சட்டம் என்பது பல்வேறு கதைகள் மூலம் காட்சிப் படுத்தப்பட்டு மக்களிடையே பதியப் பட்டிருக்கிறது.
ஸ்ருதி என்கிற நான்கு வேதங்கள், மனு ஸ்மிருதி உள்ளிட்ட 18 ஸ்மிருதிகள், பாகவதம் உள்ளிட்ட 18 புராணங்கள், மகாபாரதம், இராமாயணம் ஆகிய இரு இதிகாசங்கள் மற்றும் பகவத் கீதை இவையாவும் சனாதன தர்மத்தை மக்களிடைய புரிய வைத்து பதிய வைப்பதற்கானவைளாகும். இவை அனைத்தும் வலியுறுத்துவது ஒன்றே ஒன்றைத்தான். அதுதான் சனாதன தர்மம்; அதாவது, இந்துக்களின் வாழ்வியல் முறை மற்றும் கடமைகள், உரிமைகள் பற்றியதாகும்.
மனுதர்ம சாஸ்திரத்தைப் புரிந்து கொண்டால்தான், சனாதன தர்மம் அல்லது இந்து தர்மம் எப்படிப்பட்டது என்பதைப் புரிந்து முடியும். புரிந்தால்தான் சனாதன தர்மத்தை ஏற்றுக் கொண்டு வாழ்வதா அல்லது சனாதன தர்மத்தை வலியுறுத்துகின்ற மனுதர்மம் உள்ளிட்ட இந்து மத நூல்களை எரித்துச் சாம்பலாக்குவதா என்பதை தீர்மானிக்க முடியும்.
எரிப்பதற்கு ஆயிரம் காரணங்கள் உண்டு என்றாலும் நேரம் கருதி அவற்றில் ஒரு சிலவற்றை மட்டும் அடுத்து பார்ப்போம்.
தமிழ்மணி
-தொடரும்...
.
No comments:
Post a Comment