Thursday, 15 September 2022

மனுதர்ம சாஸ்திரத்தை ஏன் எரிக்க வேண்டும்? தொடர்---3

பிரம்மாவின் தலை, தோல், தொடை, கால்களில் இருந்து பார்ப்பன சத்ரிய, வைசிய, சூத்திர சாதியினர் பிறந்ததாக மனு கதையளந்தாலும், உண்மையில் மனிதர்கள் பிறப்பது என்னமோ தாயின் வயிற்றிலிருந்துதான். 

ஒரு புது மணப்பெண் மூன்று மாதத்தில் கர்ப்பம் தரிக்கவில்லை என்றால் வருத்தப்படுவதையும், கர்ப்பம் தரித்து விட்டால் மகிழ்ச்சி அடைவதையும் நாம் பார்க்கிறோம். ஆனால் ஒரு பெண் கர்ப்பம் தரிப்பதையே தீட்டு என்கிறான் மனு. அதனால்தான் குழந்தை பிறப்பதற்கு முன்பே சீமந்தம் அல்லது வளைகாப்பு என்று சொல்லக்கூடிய தீட்டுக் கழிப்பு சடங்கைச் செய்யச் சொல்கிறான். தீட்டுக் கழிக்கப்பட்ட பிறகு பிறக்கும் குழந்தையைத்தான் நாம் சீமந்தப் புத்திரன் என்கிறோம்.

சீமந்த புத்திரனாய் இருந்தாலும் முதல் பிறப்பு, குறை பிறப்பே என்கிறான் மனு. பூணூல் அணியும் நிகழ்ச்சியான உபநயனம் செய்யும் பொழுது அவன் மீண்டும் ஒருமுறை பிறக்கிறானாம். இந்த இரண்டாவது பிறப்புக்குத் தகுதியானவர்கள் பார்ப்பனர்கள், சத்திரியர்கள், வைசியர்கள். இவர்களைத்தான் துவிஜர்கள் அல்லது இரு பிறப்பாளர்கள் என்று அழைக்கிறான் மனு. சமூகத்தின் ஆகப்பெரும்பான்மையாக உள்ள சூத்திரர்களுக்கும் பெண்களுக்கும் இந்த இரண்டாவது பிறப்பு எடுக்கும் உரிமையை மறுக்கிறான் மனு. 

அது மட்டுமல்ல, இந்த இரண்டாவது பிறப்பில் காயத்ரியை தாயாகவும், ஆச்சாரியானை அதாவது பார்ப்பனனை தகப்பனாகவும் கருத வேண்டும் என்கிறான். எளிமையாகச் சொன்னால் சத்திரியனும் வைசியனும் பார்ப்பானுக்குப் பிறந்தவர்கள் என்கிறான். (2-170). யாருக்கு யார் தகப்பன்? இது ஆகக் கொடுமையிலும் கொடுமை, அசிங்கத்திலும் அசிங்கமல்லவா? மனுதர்மம் இதைத்தான் சொல்லுகிறது. இதைக் கேள்வி கேட்டால் இந்து மதத் துரோகி என்கிறனர் சங்கிகள்.

பெண்களையும், சூத்திரர்களையும்தான் மிக அதிகமாக இழிவு படுத்துகிறான் மனு. பல இடங்களில் அவை சொல்லப்பட்டிருந்தாலும் நான் இந்தத் தொடரில் வரிசைக் கிரமமாக சில விசயங்களை எழுதி வருகிறேன்.

சிரிங்கார சேஷ்டைகளினால் மனிதர்களுக்குக் கெடுதலை உண்டு பண்ணுவது பெண்களின் சுபாவம்; அதனால் பெண்களிடம் மற்றவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்கிறான் மனு (2-213). 

தாய், தங்கைகளுடன் தனியாக ஒன்றாக உட்காரக் கூடாதாம். இந்திரியங்களின் கூட்டம் தெரிந்தவனையும் மயக்கிவிடுமாம். (2-215).

இப்படி எல்லாம் பெண்களை இழிவாகப் பேசுகின்ற மனுதர்மம் புனித நூலாம்; தங்களை ஆகக் கீழ்த்தரமாக சித்தரிக்கும் மனுதர்மத்தை எரிக்கின்ற போராட்டத்தில் பெண்கள் அல்லவா முன் வரிசையில் நிற்க வேண்டும்.

திருமணம் செய்யும் பொழுது இருபிறப்பாளர்களான பார்ப்பனர்கள், சத்திரியர்கள், வைசியர்கள் அவரவர் சாதிக்குள்ளேயே திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று சாதி மறுப்பு திருமணத்துக்குத் தடை போட்டவன் முதன் முதலில் மனுதான். (3-12).

இரண்டாவது திருமணம் செய்து கொள்வதாக இருந்தால் மட்டும்தான் சாதி கடந்து செய்து கொள்ளலாம் என்கிறான். பார்ப்பனன் தனக்குக் கீழே உள்ள சத்திரிய-வைத்திய-சூத்திரப் பெண்களையும், சத்ரியன் தனக்குக் கீழே உள்ள வைசிய-சூத்திரப் பெண்களையும், வைசியன் தனக்குக் கீழே உள்ள சூத்திரப் பெண்ணையும் இரண்டாவது திருமணம் செய்து கொள்ளலாம். ஆனால் சூத்திரன் தனது சாதிக்குள் மட்டும்தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும். (3-13).

தன் சாதிக்குள் பெண்ணே கிடைக்கலைன்னா கூட, சூத்திர சாதிப் பெண்ணை திருமணம் செய்யக்கூடாது என்று பார்ப்பனனுக்கும் சத்திரியனுக்கும் அறிவுரை கூறுகிறான் மனு. (3-14).

பார்ப்பனனும், சத்திரியனும், வைசியனும் தனக்குக் கீழே உள்ள சாதிப் பெண்ணை திருமணம் செய்து கொண்டால் அவர்கள் சூத்திரத் தன்மையை அடைகிறார்கள். (3-15). சாதி மறுப்பு திருமணம் செய்து கொள்பவர்களை சாதியப்படி நிலையில் கீழே தள்ளிவிடுகிறான் மனு.

மேற்கண்ட விதிகளைத்தான் இன்றைக்கும் இந்துக்கள் கடைபிடிக்கின்றர். பார்ப்பனர்கள்-சத்திரியர்கள்-வைசியர்கள் இவர்களுக்குள், அதாவது உயர் சாதியினருக்கு இடையில் சாதி மறுப்புப் திருமணங்கள் என்றால் ஏதோ ஒரு வகையில் ஏற்றுக் கொள்கின்றனர. ஆனால் ஒரு சேரிப் பையன் பிற சாதிப் பெண்களை திருமணம் செய்து கொண்டால் ஒரே ரணகளம் ஆகிறது.

ரணகளத்திற்கு வித்திட்ட மனுவை கொளுத்தாமல் கொஞ்சவா முடியும்?

வருணங்களையே நான் இங்கே சாதியாகக் குறிப்பிடுகிறேன்‌. வருணங்கள்தான் சாதிகளாக பரிணமித்தன என்பதை மனுதர்மமே பறைசாற்றுகிறது. இன்றைக்குப் பார்ப்பன வருணம் இருப்பது அனைவரும் தெரிந்ததுதான். பார்ப்பானை நாம் ஒரு சாதியாகத்தான் பார்க்கிறோம். ஆனால் சத்திரிய, வைசிய சாதிகள் இன்று இருக்கின்றனவா? சூத்திர சாதி என்றால் யார் என்பது குறித்து நமக்கு குழப்பம் இருக்கிறது. இது குறித்து அடுத்து பார்ப்போம்.

தமிழ்மணி

---தொடரும்

தொடர்புடைய பதிவுகள்

மனுதர்ம சாஸ்திரத்தை ஏன் எரிக்க வேண்டும்? தொடர்-2



No comments:

Post a Comment