எனது கிராமம் திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் வட்டம், மட்டவெட்டு கிராமப் பஞ்சாயத்துக்கு உட்பட்ட அத்திமூரான் கொட்டாய். இங்கு வசிக்கும் மக்கள் அனைவரும் ஒரே மூதாதையரின் வாரிசுகள். சில நூறு ஆண்டுகளுக்கு முன்பு இங்கே வந்து கொட்டாய் அமைத்து வாழ்ந்ததனால் கொட்டாய் என்ற பெயர் ஒட்டிக் கொண்டது போலும். ஆனால் கொட்டாயோடு அத்திமூர் எப்படி சேர்ந்து கொண்டது?
இதே மாவட்டத்தில் போளூர் அருகே சவ்வாது மலை அடிவாரத்தில் உள்ள கிராமம் அத்திமூர். சில நூறு ஆண்டுகளுக்கு முன்பு இங்கே ஒரு மன்னன் மலைக்கு மேலே கோட்டை அமைத்து ஆட்சி புரிந்ததாகவும், கோட்டையைக் கைப்பற்ற ஆங்கிலேயர் ஒரு சிறு படையுடன் வந்தபோது அவர்களை வெட்டி வீழ்த்திய வீரன் ஒருவன், பின்னர் ஆங்கிலேயரின் பெரும்படை வருவதைக் கண்டு அங்கிருந்து தனது மனைவியோடு தப்பி அடர் காடுகளின் ஊடாக பருவத மலையைக் கடந்து, அதற்கு அடுத்துள்ள பெருமாள் மலை உச்சியிலே சில காலம் தலைமறைவாக வாழ்ந்து வந்ததாகவும், வாரிசுகள் உருவான பிறகு அவன் மலையை விட்டேகி பாலூர் கிராமத்தில் வசித்த பிறகு, மட்டவெட்டு மலை அடிவாரத்தில் விவசாய நிலம் இருந்த இடத்திலேயே குடிபெயர்ந்ததால் அவ்விடம் அத்திமூரான் கொட்டாயாக பரிணமித்தது என்று சில ஆண்டுகளுக்கு முன்பு மறைந்த எனது பெரியப்பா நாராயணசாமி அவர்கள் வாய் வழியாகச் சொன்ன செய்தி இது. மூதாதையர் அத்திமூர் என்பதனால் இது அத்திமூரான் கொட்டாயானது. நான் அத்திமூரான் கொட்டாய்க்காரன்.
1975, பழைய எஸ்எஸ்எல்சி ஆண்டு இறுதித் தேர்வு 600க்கு 398 மதிப்பெண்கள் எடுத்து பள்ளியில் இரண்டாவதாக வந்தேன். முதல் மாணவன் எனது நண்பன் சண்முகம். இருவருமே சிறுவயதிலிருந்தே கடவுள் பக்தி அற்றவர்கள். ஆங்கிலம் மற்றும் கணிதப் பாடத்திற்கு ஒரே ஆசிரியர். இரண்டிலும் பாதி பாடங்கள் கூட நடத்தப்படவில்லை. யார் யாரெல்லாம் இறுதியில் தேறுவார்கள் என்று கணக்கிட்டு அவர்களை சில மாதம் பள்ளியிலேயே தங்கச் சொன்னார்கள். அதில் நானும் அடக்கம். உண்டு உறைவிடப் பள்ளி போல. ஆனால் உணவு மட்டும் வீட்டுடிலிருந்து வந்து விட வேண்டும். கொஞ்சம் பேராவது தேறினால்தான் பள்ளியின் மானம் கப்பல் ஏறாமல் இருக்கும். கிராமப்புற பள்ளிகளில் நிலைமை இதுதான்.
பட்டணம் போனால் பிழைத்துக்கொள்ளலாம் என்று சொல்வார்கள். அதனால்தானோ என்னவோ மெட்ராஸ் மத்திய தொழில்நுட்பக் கல்லூரியில் (CPT) சேர்க்க எனது பெரியப்பா மகன் அண்ணன் கண்ணன் எனக்காக விண்ணப்பம் வாங்கி வந்து மெட்ராஸ் பட்டணத்தில் பட்டயப் படிப்புப் படிக்க ஏற்பாடு செய்தார். இல்லையேல் நானும் அத்திமூரான் கொட்டாயோடு முடங்கிப் போய் இருப்பேன்.
12.07.1975 அன்றைய நேர்காணலுக்காக முதல் நாள் இரவே மெட்ராஸ் சென்றபோது எல் ஐ சி கட்டிடம் எரிந்துகொண்டிருந்தது. சில நாட்கள் கழித்து படிப்பில் சேர அழைப்பு வந்ததால் நான் மட்டும் தனியாக திருவண்ணாமலையிலிருந்து 122 ல் ரூ.6 பயணக் கட்டணம் செலுத்தி மெட்ராசுக்குப் பயணமாகி, பிராட்வே பேருந்து நிலையத்தில் இறங்கி உயர்நீதிமன்ற வாயிலை சென்றடைந்தேன். அடையாறு செல்லும் பேருந்து இருக்குமிடத்தைக் காட்டுவதாகச் சொல்லி ரிக்சாவில் ஐந்து ரூபாயைக் கட்டணமாகப் பெற்றுக் கொண்டு அழைத்துச் சென்றார் ஒரு ரிக்சாக்காரர். உயர்நீதிமன்ற வளாகத்தை ஒரு சுற்று சுற்றி விட்டு, விசாரித்த இடத்திற்குச் சற்றுப் பக்கத்திலேயே அவர் என்னை இறக்கி விட்டார் என்பதை பின்னாளில் தெரிந்து கொண்ட போது, முதல் முறையாகப் பட்டணத்தில் ஏமாற்றப்பட்டேனோ என்ற நினைவு மட்டும் இன்றும் என்னுள் நிழலாடுகிறது. அடையாறு செல்ல சைதாப்பேட்டையிலேயே இறங்கி விடலாம் என்பதையும் அனுபவம்தானே உணர்த்தியது. பட்டால்தான் புரியும் என்று சும்மாவா சொன்னார்கள்.
தமிழ்மணி
தொடரும்
தொடர்புடைய பதிவுகள்
இழி குணம்!.....1
No comments:
Post a Comment