Thursday, 21 May 2026

அதிகாரப் பெருமிதமும், சாதிச் சனாதனமும்: பதவி ஏற்பு விழாவின் பின்னுள்ள அரசியல் எதார்த்தம்!

சாதியற்றவர் பட்டியல் இல்லாத தமிழ்நாடும், சாதிப் பெருமிதங்களும்

தெலங்கானாவில் அண்மைய மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது, தங்களை "சாதியற்றவர்கள்" என்று சுமார் 3.4% மக்கள் தைரியமாகப் பதிவு செய்துள்ளனர். ஆனால், முற்போக்கு பேசும் தமிழ்நாட்டில் அப்படி ஒரு நிலை இதுவரை நடைமுறைக்கு வரவில்லை. இங்கு அதிகாரப்பூர்வமாக 'சாதி அற்றவர்கள்' என்று ஒருவரும் கிடையாது என்பதே கசப்பான எதார்த்தம். இதன் விளைவுதான் இன்றைய தமிழக அரசியல் களம் மிகக் கேவலமாக நகர்ந்து கொண்டிருக்கிறது.

"எங்க சாதிக்காரன் நாலு பேருக்கு அமைச்சர் பதவி கிடைச்சிருக்கு", 

"எங்க சாதிக்கு ஏழு பேர் மந்திரி ஆனது ஒரு வரலாற்றுச் சாதனை" 

என்று ஒருபுறம் சாதிப் பெருமிதக் கூச்சல்கள்; 

"எங்க சாதிக்கு இந்த முறை மந்திரி பதவி இல்லையா?" 

என்கிற சலிப்புகள் மறுபுறம்.

தமிழ்நாட்டில் சாதியற்றவர் என்று ஒரு பட்டியல் இல்லாததால், இங்கு எவனுக்கு மந்திரி பதவி கொடுத்தாலும் அவன் ஏதோ ஒரு சாதியின் பிரதிநிதியாகவே பார்க்கப்படுவான். 

"என் சாதிக்காரன் மந்திரி ஆகிவிட்டான்" 

என்று சாமானிய மக்கள் கொண்டாடும் ஒவ்வொரு நொடியும், சாதி என்னும் சனாதனக் கட்டமைப்புதான் இன்னும் இறுக்கமாகிறது என்பதை இவர்கள் எப்போது உணரப் போகிறார்களோ?

21.05.2026

சாமானியன் மந்திரியாவது வரலாற்றுச் சாதனையா?

"பார்த்தாயா! சாமானியனாக இருந்தவன், ரசிகனாக இருந்தவன், ஏழையாக இருந்தவன், குடிசையில் வாழ்ந்தவன், காலில் செருப்புக் கூட அணியாதவன் எல்லாம் இன்றைக்கு மந்திரி ஆகிவிட்டான்! இது ஒரு வரலாற்றுச் சாதனை!" 

என மூக்குக்கு மேலே பெருமை பேசுகின்றனர் சிலர்.

அவர்களிடம் நாம் கேட்க விரும்புவது ஒன்றுதான்: என்றோ ஒரு காலத்தில் கக்கனும், காமராஜரும் ஏழைகளாக இருந்துதான் ஆட்சி நடத்தினார்கள். அவர்கள் கடைசி வரை ஏழைகளாகவே வாழ்ந்து, ஏழைகளாகவே இறந்தும் போனார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறோம்.

ஆனால், இன்று 'சாமானியர்கள்' என்று சொல்லிப் பதவி ஏற்றவர்கள் அப்படி வாழ்வார்களா? யாரேனும் ஒரு வெள்ளைத்தாளிலாவது எழுதித் தரத் தயாராக இருக்கிறீர்களா?

அதுமட்டுமல்ல, நேற்றுவரை திமுகவில் 'அமைச்சர் ஜாம்பவான்களாக' வலம் வந்தவர்களில் பலருடைய பின்னணி என்ன? அவர்கள் ஒரு காலத்தில் லாரி கிளீனர்களாகவும், ஆட்டோ ஓட்டுநர்களாகவும், பஸ் டிரைவர்களாகவும் இருந்தவர்கள்தான் என்பது இன்றைய இளைய தலைமுறையில் எத்தனை பேருக்குத் தெரியும்? ஆனால், இன்றோ அவர்கள் கப்பல்களுக்கும், பேருந்துகளுக்கும், பிரம்மாண்டக் கல்லூரிகளுக்கும் அதிபதிகளாக உருவெடுத்து நிற்கிறார்கள்.

எம்.ஜி.ஆர் ஆட்சியின்போதுகூட ரசிகனும், சாமான்யனும் மந்திரிகள் ஆனார்கள். பிறகு கோடிகளில் புரளும் குபேரர்கள் ஆனார்கள். அம்மணிக்கு சமைத்துக் கொடுத்த பெண்மணி எல்லாம் தமிழ்நாட்டை சல்லடை போட்டு அள்ள வில்லையா?

எனவே, வர்க்கப் புரிதல் இல்லாமல், "ஒரு சாமானியன் மந்திரியாகி விட்டான்" என்று இன்று பெருமை பேசுவதெல்லாம் வெற்று வீண் ஜம்பமே தவிர வேறொன்றுமில்லை. 

அரசு பதவி என்பது ஒரு பொன் முட்டையிடும் வாத்து. அந்த வாத்தை வளர்க்க வேண்டிய பொறுப்பு இப்போது அமைச்சர்களிடம் கொடுக்கப்பட்டுள்ளது. வாத்து இடப்போகும் பொன் முட்டைகளை இவர்கள் மக்களுக்குப் பயன்படுத்தப் போகிறார்களா அல்லது தங்களுக்குள்ளேயே பதுக்கப் போகிறார்களா என்பது போகப் போகத்தான் தெரியும்.

அதிகாரப் பெருமிதத்தில் அடகு வைக்கப்பட்ட தமிழ்!

இந்தச் 'சாதிப் பெருமிதத்திலும்', 'அதிகாரப் போதையிலும்' மூழ்கிக் கிடந்ததால்தானோ என்னவோ, தங்கள் கண் முன்னே தமிழ் மொழி இழிவுபடுத்தப்பட்ட நிகழ்ச்சியைக் கூட இவர்களால் தாங்கிக் கொள்ள முடிந்தது!

அண்மையில் நடைபெற்ற கூடுதல் அமைச்சர்கள் பதவி ஏற்பு விழாவில், தமிழ்நாட்டின் நீண்டகால மரபும் தன்னாட்சி உரிமையுமான ‘தமிழ்த்தாய் வாழ்த்து’ முதலிடத்தில் பாடப்படாமல், வந்தே மாதரம் மற்றும் தேசிய கீதத்திற்குப் பின்னால் மூன்றாம் இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது. இது தமிழுக்கும் தமிழ்நாட்டின் தனித்துவமான அரசியல் பண்பாட்டிற்கும் இழைக்கப்பட்ட அப்பட்டமான இழுக்கு! தமிழ் ‘நீசர்களின் பாஷை’ என்கிற சனாதனம் இங்கே அரங்கேறியது உங்களுக்கு உரைக்கவில்லையா?

இங்குதான் நம்முள் ஒரு நியாயமான தார்மீகக் கேள்வி எழுகிறது.

இந்த ஆட்சியில் இதுவரை இக்கட்சிகள் (இடதுசாரிகளும், விசிகவும்) நேரடியாகப் பங்கேற்கவில்லை; வெளியில் இருந்துதான் ஆதரவு தருகின்றன. எத்தனையோ மக்கள் போராட்டங்களை முன்னெடுத்த இடதுசாரித் (CPI, CPM) தோழர்களும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (VCK) தலைவர்களும் மேடையிலும் முன்னிலையிலும் அமர்ந்திருக்கும்போதே இந்தத் தவறு அரங்கேறியுள்ளது.

தவறு நடக்கும் இடங்களில் எல்லாம் உடனடியாகக் களமிறங்கிக் ‘கலகம்’ செய்யும் இந்த மக்கள் போராளிகள், தங்கள் கண் முன்னே தமிழ் மொழி பின்னுக்குத் தள்ளப்பட்டபோது அங்கேயே ஏன் குரல் எழுப்பவில்லை? மேடை நாகரிகம் கருதி, தமிழ்நாட்டின் சுயமரியாதையை அடகு வைக்கும் இந்த டிஜிட்டல் கால அடிமைத்தனத்தை அவர்கள் சத்தமில்லாமல் ஏற்றுக்கொண்டார்களா?

ஒன்றிய அரசின் புதிய சுற்றறிக்கை என்று கூறி ஆளுநர் மாளிகை மரபுகளை மாற்ற முயன்றபோது, "தமிழ் மண்ணில் தமிழ்நாடு அரசு வகுத்த நெறிமுறைதான் முதன்மையானது"  என்று அங்கேயே மேடையைப் புறக்கணித்தோ அல்லது முழக்கமிட்டோ தங்களின் தார்மீக எதிர்ப்பைப் பதிவு செய்திருக்க வேண்டாமா? விழா முடிந்து, எல்லாம் கைமீறிப் போன பிறகு கண்டன அறிக்கை விடுவதால் என்ன பயன்?

இணையத்தில் சனாதனமும், பழமைவாதமும் புது வடிவம் பெற்று, செயற்கை நுண்ணறிவு (AI) காலம் வரை தங்களை மீட்டெடுத்துக் கொண்டிருக்கும் இன்றைய வேளையில், அதற்குத் துணை போகும் ஆளுநர் மாளிகைச் சடங்குகளுக்கு முன்னால் நம் முற்போக்குத் தலைவர்கள் மௌன சாட்சிகளாய் நின்றது வேதனைக்குரியது.

அதிகாரத்திற்கு முன்னால் காக்கப்படும் ‘மேடை நாகரிகம்’, தமிழின் சுயமரியாதையை விடவும், சாதி ஒழிப்பு தத்துவத்தை விடவும் பெரிதாகிவிட்டதா தோழர்களே?

ஊரான்

No comments:

Post a Comment