காலை ஆறு மணி.
சாலையோர வேம்பு மற்றும் புங்கை மரங்களின் இலைகள் அசைவற்று, ஒருவித மரண அமைதியில் உறைந்திருந்தன. அந்த நிசப்தத்தைத் துணையாகக் கொண்டு கடைவீதியை நோக்கி நடந்தேன்.
நான்கு ரூபாய் கொடுத்து ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’வை வாங்கிக் கக்கத்தில் அடக்கினேன். கறிக்கடையில் ஒரு கிலோ கோழிக்கறியும், பத்து முட்டைகளும் வாங்கிப் பையில் பக்குவப்படுத்தினேன். மெட்ரோ காபி கடையில் இரண்டு சால்ட் பிஸ்கட்டுடன் சூடான டீயைத் தொண்டைக்குள் இறக்கிவிட்டு வீடு திரும்பினேன்.
காலையில் எழுந்ததும் அனிச்சையாகத் தேநீர்க் கடைகளை மக்கள் கூட்டம் மொய்ப்பதை அன்றாடம் காண்பதுண்டு. ஆனால் இன்று, அந்த அனிச்சை என்னை அங்கே தள்ளவில்லை; உடலின் தளர்ச்சிதான் "போ... போ..." என என்னை மெல்லத் தள்ளியது.
தேர்தலில் வென்றவர்களின் மனமும், தோற்றவர்களின் மனமும் ஒருசேர சிதைந்து, புண்ணாகி, பழுதடைந்து கிடப்பதைப் போல,
தேர்தலுக்கு முன் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு விரிவாக்கத்துக்காகச் சிதைக்கப்பட்ட சாலையோரங்கள், இன்று நாதியற்றுக் குண்டும் குழியுமாகச் சிதிலமடைந்து கிடக்கின்றன.
சமூக ஊடகங்களில் கடந்த இரண்டு நாட்களாக ஓடும் விவாதங்கள் என்னுள்ளும் பெரும் அலைகளை எழுப்புகின்றன. தேர்தலுக்கு முன் உன்மத்தர்களாகக் காட்சியளித்தவர்கள், இன்று சிலருக்கு உத்தமர்களாக மாறிவிட்டார்கள். எல்லாம் தலைக்கு மேல் தொங்கும் அந்த அரசியல் தேன்கூட்டின் மாயம்தான்.
ஒரு சொட்டுத் தேனுக்காக “ஆட்சியில் பங்கு... அதிகாரத்தில் பங்கு!” என்று சிலர் ஆர்ப்பரிக்கத் தொடங்கிவிட்டனர். “மக்களே எஜமானர்கள், மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு” எனக் கூறி தலைவரையே எச்சரிக்கும் தம்பிகளைப் பார்க்கும்போது — பெருமைப்பட வேண்டுமா, அல்லது பரிதாபப்பட வேண்டுமா என்று தெரியவில்லை.
“மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும்; மக்களிடம் கற்போம்” என்று அடிக்கடி சொல்கிறார்கள். ஆனால் மக்களிடம் உள்ளது என்ன? மூடநம்பிக்கைகள், சடங்கு சம்பிரதாயங்கள், சாதி-மத வெறி, எவன் காசு கொடுத்தாலும் கைநீட்டும் கயமைத்தனம் — இவைதானே மலிந்து கிடக்கின்றன?
தன்னலமும், ஏமாற்றும், பொய்யும், புரட்டும் மலிந்துவிட்ட இன்றைய சமூகத்தில், நேர்மையாளர்களை எண்ணினால் இரு கைகளின் விரல்களே போதுமானது. இதுதான் கசப்பான யதார்த்தம்.
முன்பெல்லாம் வள்ளுவர், புத்தர், வள்ளலார் போன்ற மகான்கள் மக்களை நெறிப்படுத்தினார்கள். இன்றோ, நேற்றுவரை மகான்களாகத் தெரிந்த அண்ணன்களைத் ‘தம்பிகள்’ சீற்றத்தோடு நெறிப்படுத்துகிறார்கள். இதைத்தான் கலிகாலம் என்று ரிஷிகள் சொன்னார்களோ?
எனது நடை இப்போது முன்போல் மிடுக்காக இல்லை. வயது முதிர்ந்தால் தளர்ச்சி இயல்புதானே! வீடு வந்து நாற்காலியில் அமர்ந்தபோது, மின்விசிறியின் மெல்லிய காற்று உடல் வெக்கையைச் சற்றே தணித்தது.
ஆனால்... இந்தச் சமூகம் உள்ளுக்குள் ஏற்றியிருக்கும் வெக்கை மட்டும் எப்போது, எப்படித் தணியும்?
ஊரான்
.png)
No comments:
Post a Comment