Wednesday, 13 August 2025

சென்னை தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தின் பொதுத்தன்மை என்ன?

கடந்த ஆண்டுகளில் ஒப்பந்த முறை குறித்த சட்டங்கள் எப்படி இருந்தன, தற்போதைய அதன் நிலை என்ன? புதிய தொழிலாளர் நல சட்ட திருத்தம் இது குறித்து என்ன சொல்கிறது?  ஒப்பந்தத் தொழிலாளர்களை முறைப்படுத்தி படிப்படியாக நிரந்தரம் செய்வது என்கிற பழைய சட்டம் முடக்கப்பட்டு இனி கேந்திரமானப் பணிகளில்கூட ஒப்பந்த முறையை நடைமுறைப்படுத்தலாம் என்கிறது புதிய சட்டம். பழைய சட்டம் இருக்கும் போதே ஒப்பந்த முறை எல்லாத் துறைகளிலும் நடைமுறைக்கு வந்துவிட்டது என்பதை நாம் அறிவோம்.


இதன் ஒரு பகுதியாகத்தான் சென்னையில் கடந்த 10 ஆண்டுகளில் 10 மண்டலங்களில் ஒப்பந்த முறை நடைமுறைக்கு வந்துள்ளது. இனி புதிய தொழிலாளர் சட்டம் அமுலாகும் பொழுது எல்லா இடங்களிலும் ஒப்பந்த முறை நீக்கமற நிறைந்திருக்கும்.

மேலும், புதிய தொழிலாளர் சட்டங்களில் தொழிலாளர்களுக்கு எதிராகப் பல்வேறு திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. ஆனால் தமிழ்நாட்டு அளவில் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி (NDLF) சில முன்னெடுப்புகளை செய்திருக்கிறது. மற்றபடி புதிய சட்டத்திருத்தங்களுக்கு எதிராக தமிழ்நாடு அளவிலோ அல்லது இந்திய அளவிலோ போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தவோ, போராட்டம் நடத்தவோ அரசியல் கட்சிகளோ, தொழிற்சங்கங்களோ முன்வரவில்லை என்பது கவலையோடு நோக்கத்தக்கது. வேளாண் திருத்தச் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் நடத்திய போராட்டங்களிலிருந்துகூட இன்றைய முன்னேறிய நவீன பாட்டாளி வர்க்கம் கற்றுக் கொள்ளவில்லை என்றால் நாம் எங்கே தவறிழைக்கிறோம் என்பதைப் பரிசீலிக்க வேண்டும்.

இதுதான் சென்னையில் தற்போது ஐந்து மற்றும் ஆறாவது மண்டலங்களில் கொண்டு வரப்படும் ஒப்பந்த முறைக்கு எதிரானப் போராட்டத்தில் நாம் பேச வேண்டிய பொதுத்தன்மை. இதைப் பேசினால்தான் தற்போதைய போராட்டத்தில் மூக்கை நுழைக்கும் சனாதன சங்கிகளையும், இன்னபிற பிழைப்புவாதிகளையும், விளம்பரம் தேடும் சாகசவாதிகளையும் அடையாளம் கண்டு அப்புறப்படுத்த முடியும்.

நிற்க, ஐந்து மற்றும் ஆறாவது மண்டலங்களில் தற்போது பணியில் இருக்கும் தூய்மைப் பணியாளர்கள் தற்காலிகப் பணியார்களா அல்லது வேறு வகைப் பணியாளர்களா, அவர்களுக்கு என்னென்ன சலுகைகள் இதுவரை வழங்கப்பட்டு வந்தன என்பது பற்றி இதுவரை எந்த அக்கறையும் காட்டாத சங்கிகள் உள்ளிட்ட சிலர் போராட்டக் களத்தில் குதிப்பதற்கான பின்னணி என்ன? திமுக அரசு ஒன்றும் பாட்டாளி வர்க்க அரசு அல்ல; அது ஏற்கனவே 12 மணி நேர வேலையை நடைமுறைப்படுத்த முயன்று, கடுமையான எதிர்ப்பினால் பின் வாங்கிக் கொண்டது. அப்பொழுதெல்லாம் தலை காட்டாத சங்கிகள் இப்பொழுது தலைகாட்டுவதற்குக் காரணம் திமுக எதிர்ப்பு-தேர்தல் அறுவடை என்பதைத் தவிர இதில் தொழிலாளர் நலன் துளி அளவும் கிடையாது என்பது பாமரனுக்குக்கூட புரியும்.

ஒப்பந்த முறைக்கு எதிராகக் கடுமையானப் போராட்டத்தைக் கட்டமைக்க வேண்டிய கட்டாயத்திற்குப் பாட்டாளி வர்க்கம் தள்ளப்பட்டுள்ளது. அதற்கு பரந்ததொரு தொழிற்சங்க கூட்டமைப்பை உருவாக்க வேண்டும். அப்படி செய்யும் பொழுதுதான் போராடுகின்ற தொழிலாளர் பக்கம் உண்மையிலேயே யார் யார் நிற்கிறார்கள் என்பதைக் கண்டறிய முடியும். 

இது ஒன்றும் ஜல்லிக்கட்டுப் போராட்டம் அல்ல; பண்பாட்டுத் தளத்தில் உள்ளக் கிளர்ச்சியை ஏற்படுத்தி, மக்கள் எழுச்சியை உருவாக்கி, சாகசங்களை நிகழ்த்திக்காட்டி ஒரிரு நாட்களில் முடிவு காண்பதற்கு? இது வர்க்கப் போராட்டத்தின் ஒரு பகுதி. அதற்கு ஏற்ப வர்க்க சக்திகளின் அணி சேர்க்கையும், விடாப்பிடியான தொடர் பிரச்சாரமும் போராட்டமும் தேவைப்படுகிறது. 

இதன் மூலமாகத்தான் எந்த ஒரு துறையிலும் அது தனியார் நிறுவனமாக இருந்தாலும் ஒப்பந்த முறை கொண்டு வருவதை தடுத்து நிறுத்தவும், ஒப்பந்த முறையை அங்கீகரிக்கும் சட்டத்தை ஒழித்துக் கட்டவும் முடியும். இதுதான் சென்னை தூய்மைப் பணியாளர்களின் போராட்டத்தில் பாட்டாளி வர்க்கம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம் என்று நான் கருதுகிறேன்.

தமிழ்மணி

1 comment:

  1. புலனத்தில் பழனிச்சாமி: சிறப்பு.

    தமிழ்நாட்டில் ஆளும் கட்சி என்ற ஒரு காரணத்தைக் காட்டி, எல்லாச் சுமைகளையும் தி.மு.க வின் மீது சுமத்தும் சங்கித்தனம் சகிக்க முடியவில்லை.

    முதன்மையான அரசியல் முரணான கார்ப்பரேட்-காவி பாசிசத்திற்கு எதிரான முன்னெடுப்பிற்கு கீழ்படிந்ததாக எந்தவொரு போராட்டமும் இருக்க வேண்டும். இதுவே மா-லெ அரசியல் செயல்தந்திரம். இதை மறந்து எல்லா முரண்களையும் ஒரு சேர தீர்க்க முயற்சிப்பது சாகசவாத சந்தர்ப்பவாதம் ஆகும்.

    ReplyDelete