கள்ளக்குறிச்சி சாராயச் சாவுகள் நடந்த பிறகு கோவனுக்கு எதிராக சில திண்ணைத் தூங்கிகள், கீழ்த்தரமான விமர்சனங்களை முன்வைத்து எள்ளி நகையாடி வருகின்றனர்.
திராவிட மாடல் ஆட்சிக்கு எதிராக ஓராண்டுக்கு முன்பு அவர் பாடிய பாடல் இந்தத் திண்ணைத் தூங்கிகளுக்குத் தெரியவில்லை போலும். திருச்சியில் இரண்டு டாஸ்மாக் சாராயக்கடைகளை மகஇக போராட்டத்தின் மூலம் மூடி இருக்கிறார்கள். அப்பொழுது எழுதப்பட்ட பாடல் அது.
கள்ளக்குறிச்சி சம்பவத்திற்குப் பிறகு உடனடியாக திருச்சியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அவர் தனது கண்டனத்தைப் பதிவு செய்திருக்கிறார்.
ஒரு பாடல் வைரல் ஆவதும், வைரல் ஆகாமல் இருப்பதும் சமூக ஊடகங்களைப் பொறுத்தது. ஊத்திக் கொடுத்த உத்தமியை பிரபலமாகியவர்கள் தமிழ்நாடு காவல்துறையும் சமூக ஊடகங்களும்தான்.
நிற்க, கலைஞர் ஆட்சி காலத்தில் கலைஞருடைய பெயரைக் குறிப்பிட்டு அவர் மேடைகளில் பாடிய பொழுது திமுக காரர்களின் நேரடி தாக்குதலுக்கெல்லாம் உள்ளாகி இருக்கிறார் என்பது இந்தத் திண்ணைத் தூங்கிகளுக்குத் தெரியாது.
நிற்க, ஒரு கலைஞனின் செயல்பாடுகள், ஏன் இப்போது அப்படி இல்லை, இப்படி இல்லை என்று புலம்புகின்ற திண்ணைத் தூங்கிகள், எப்படி இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்களோ அப்படி இந்தத் திண்ணைத் தூங்கிகள் செய்வதை யார் தடுத்தது?
திமுக ஆட்சியானாலும், அதிமுக ஆட்சியானாலும் கடந்த காலங்களில் பல்வேறு மேடைகளில் உயிரைப் பணயம் வைத்து அவரோடு ஒரு மேடைப் பேச்சாளராக உடன் பயணித்தவன் நான். அப்பொழுதெல்லாம் சமூக ஊடகங்கள் இல்லாத காலகட்டம். அதனால் அத்தகைய செயல்பாடுகளை எல்லாம் கூகுளில் தேடினாலும் கிடைக்காது. தமிழ்நாடு கியூ பிரிவு போலீசாரைக் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். எனவே, அவரைக் குறை கூறுவதற்கு திண்ணைத் தூங்கிகள் எவருக்கும் எந்த அருகதையும் கிடையாது.
நெளிகிற புழுக்கள் நெளிந்து கொண்டே இருக்கட்டும். அருவருப்பாகத்தான் இருக்கும். ஆனால், புழுக்களின் காலம் மிகவும் சொற்பமானது.
தமிழ்மணி
No comments:
Post a Comment