Thursday, 15 April 2021

இழி குணம்: 'பெல் சிட்டி’ ஊழல்! …..14, இறுதிப்பகுதி

வாழ்க்கையின் அடிப்படை அத்தியாவசியத் தேவைகளுக்கு மட்டுமே பொருள் ஈட்டினால் போதுமானது; தேவைக்கு அதிகமாகச் சொத்து மற்றும் நகை வாங்குவது ஆடம்பரத்திற்கே வழிவகுக்கும் என்பதால் இயக்கப் பெண்கள் சிலர் நகை அணிவதையே அருவருப்பாகக் கருதினர். 1990-களின் தொடக்கத்தில் டிவிஎஸ் 50 இருசக்கர வாகனம் வைத்துக் கொள்வதே நுகர்வுக் கலாச்சாரம் என விமர்சிக்கப்பட்டதால் அன்று வாங்கிய ஒரு பழைய டிவிஎஸ் 50 ஐ விற்றவன் நான்.

வட்டித் தொழில் செய்வது மக்கள் விரோதச் செயலாகக் கருதப்பட்டது. சேமிப்பு என்ற பெயரில் நடத்தப்படும் எலச்சீட்டு முறையே அடுத்தவன் துன்பத்தில் காசு சேமிக்கும் கயமைத்தனம் என்பதால் தொடக்க காலம் முதல் இன்றுவரை அதைத் தவிர்த்தே வந்துள்ளேன். சொந்தத் தேவைகளுக்காகக்கூட அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் தரக்கூடாது; மாறாக லஞ்ச ஊழல் முறைகேடுகளுக்கு எதிராகப் போராட வேண்டும் என்ற கொள்கைப் பிடிப்பு இருந்ததால்தான் திருச்சி 'பெல்' நிறுவன 'கேண்டீன்' ஊழலுக்கு எதிராகப் போராடினேன். இதனால் பின்னாலில் எனது வேலையும் பறிபோனது பற்றி ஏற்கனவே குறிப்பிட்டுள்ளேன்.

சொத்துடைமைச் சமூகத்தைத் தகர்த்துப் பொதுவுடைமைச் சமூகம் படைக்கப் புறப்பட்ட நமக்குச் சொத்து எதற்கு எனக் கருதியதால் சொத்து சேர்ப்பதில் நான் நாட்டம் செலுத்தவில்லை. பொதுவாக கைநிறைய ஊதியம் பெறுவோர் வீட்டு மனைகளை வாங்குவதற்கு முனைப்பு காட்டுவர். தனியாகவோ அல்லது சங்கம் அமைத்துக் கொண்டு கூட்டுறவு முறையிலோ வீட்டு மனைகள் வாங்குவது வழக்கம். மோசடிகள் முறைகேடுகள் ஏதும் இன்றி வீட்டுமனை ஒன்றை வாங்கி வீடு கட்டிக் கொள்வதில் தவறேதும் இல்லை.

வீட்டு மனைகள் வாங்குவதற்காக சென்னை ‘பெல் பைப்பிங் சென்டரில்’ பணிபுரிந்த ஊழியர்கள் சிலர் சேர்ந்து தலைவர், செயலாளர், பொருளாளர் உள்ளிட்ட நிர்வாகிகளைக் கொண்ட ‘ஹவுசிங் சொசைட்டி’ ஒன்றை 2012 இல் ஏற்படுத்தி உள்ளனர். சென்னை, இராணிப்பேட்டை, திருச்சி மற்றும் திருமயம் ‘பெல்’ நிறுவனங்களில் பணிபுரிந்த ஊழியர்கள் இந்த ‘சொசைட்டியில்’ உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டடுள்ளனர். சென்னை புறநகரில், பழைய மகாபலிபுரம் சாலை, தாழம்பூர் பகுதியில் நிலம் தேர்வு செய்து, ‘பெல் சிட்டி’ என்ற பெயரில் மனைகளாகப் பதிவு செய்வதற்கான வேலைகளைத் தொடங்கி உள்ளனர்.

சத்தியநாராயணா ரெட்டிக்குச் சொந்தமான நிலம் என்று சொல்லி தெரிவு செய்யப்பட்ட இடம் ஒரு அனாதீன நிலம் என்பதைத் தெரிந்து கொண்ட பிறகு, மனை வேண்டாம் எனக்கூறி கொடுத்தப் பணத்தை திரும்பிப் பெற்றுக் கொண்டு நூற்றுக்கணக்கானோர் ஒதுங்கி உள்ளனர். ஆனால் இறுநூற்றுக்கும் மேற்பட்டோர் இத்திட்டத்தில் தொடர்ந்து இருந்துள்ளனர். இதில் நடைபெறும் முறைகேடுகளுக்கு இவர்களும் பதில் சொல்லக் கடமைப்பட்டவர்கள்தானே?

அனாதீன நிலங்களைக் கண்டறிந்து, அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து, போலியான ஆவணங்களை உருவாக்கி அதை விற்பனை செய்யும் ‘ரியல் எஸ்டேட்’ தொழில் போன்றதுதான் இதுவும். போலி ஆவணங்களை உருவாக்கிப் பட்டா பெறும் வேலைகளை மேற்கொள்வதற்கு என ‘கமிசனுக்கு’ அமர்த்தப்பட்ட இடைத்தரகர்கள், இரண்டு வாடகைக் கார்கள், சகலவசதிகளோடு கூடிய அலுவலகம், கணக்கு வழக்குகளைப் பார்த்துக் கொள்ள சம்பளத்துக்கு அமர்த்தப்பட்ட ஒரு மேலாளர் என கணஜோராய் இவர்களது அலுவலகம் செயல்பட்டு வந்துள்ளது. ஆண்டுகள் கடந்தன. ஆனால் லட்சக் கணக்கில் பணம் கட்டியவர்களுக்கு வீட்டு மனைப்பட்டா மட்டும் கைக்கு வந்தபாடில்லை. பெரும்பாலும் மேற்கண்ட வேலைகள் அனைத்தும் ‘சொசைட்டி’ செயலாளர் மூலமாகவே மேற்கொள்ளப்பட்டுள்ளன.

ஒரு சமயம் இடைத்தரகர்களுக்குத் தரவேண்டிய ரூ.2 கோடிக்கான காசோலையை ‘சொசைட்டி’ செயலாளர் தனது மகன் பெயருக்குக் கொடுத்ததாக எழுந்தப் புகாரைத் தொடர்ந்து, ‘சொசைட்டி’ செயலாளர் மீது பல கோடி ரூபாய் பணம் கையாடல், ஆடி கார், சொத்துக் குவிப்பு என அடுக்கடுக்கான புகார்கள் எழத் தொடங்கின. ‘சொசைட்டி’ செயலாளர் சாதாரண ஒரு நபராக இருந்திருந்தால் இந்தப் புகார்கள் எல்லாம் பத்தோடு பதினொன்றாக முடிந்து போயிருக்கும். இப்படித்தானே வெளி உலகிலும் நடந்து கொண்டிருக்கிறது. 

ஆனால் அவர் ‘பெல் பைப்பிங் சென்டர்’ நிறுவனத்தில் முழுநேரமாகப் பணியாற்றிக்கொண்டே, ஒரு மார்க்சிய-லெனினிய அமைப்பின் முழுநேரப் புரட்சியாளராகவும் மற்றும் அந்த மார்க்சிய-லெனினிய அமைப்பின் தொழிற்சங்கத்தின் மாநிலச் செயலாளராகவும் இருந்தவர். இத்தகையப் பொறுப்பில் உள்ளவர் மீது புகார் வந்தால், அது மொத்த அமைப்பையும் அல்லவா நெருக்கடிக்கு உள்ளாக்கும் என்பதால் அமைப்பின் அரசியல் தலைமைக்கு வந்தப் புகாரின் அடிப்படையில் ஒரு விசாரணைக்குழு அமைக்கப்பட்டு அவர் மீதான புகார்களில் முகாந்திரம் இருப்பதாக உறுதி செய்து 2019 நவம்பரிலேயே தலைமையிடம் விசாரணை அறிக்கை ஒப்படைக்கப்பட்டது.

‘சொசைட்டி’ செயலாளரை அரசியல் ரீதியாக இயக்கிய ஒருவருக்கும் ‘சொசைட்டி’ செயலாளரோடு உடன் தங்கி இருந்த அரசியல் தலைமையின் செயலாளருக்கும், ‘சொசைட்டி’ வேலைகள் பெரும்பாலும் ஏற்கனவே தெரிந்தவைதான் என்பதாலும், பணம் கட்டியவர்களுக்கு மனையைப் பெற்றுக் கொடுத்துவிட்டால் ‘சொசைட்டி’ செயலாளர் மீதானப் புகாரை மூடி மறைத்துவிடலாம் எனக் கணக்குப் போட்டு விசாரணை அறிக்கையை பெற்றுக் கொண்ட அரசியல் தலைமையின் செயலாளர் அதை கிடப்பில் போட்டுவிட்டடார். ஆனால் ‘சொசைட்டியின்’ முறைகேடுகளை நக்கீரன் இதழ் வெளியிட்டு பொது உலகுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டி விட்டதால் அமைப்பின் மீதான நற்பெயருக்கு மிகப் பெரும் கலங்கம் ஏற்பட்டுவிட்டது. இதற்குப் பதில் சொல்ல வேண்டிய முழு பொறுப்பும் அரசியல் தலைமையின் மீது விழுந்ததால் இதிலிருந்து தப்பிக்கும் ஒரு யுக்தியாகத்தான், ஏற்கனவே தலைமைக் குழுவிலிருந்து இருவர் விலகியதைத் தொடர்ந்து, புதிய தலைமையைத் தேர்வு செய்வதற்கு அமைக்கப்பட்ட குழுவில் உள்ள ஒருவர் மீது சதிக்குற்றச்சாட்டுகளை ஜோடித்து அமைப்பை உடைத்துக் கொண்டு வெளியே சென்றுவிட்டனர். இந்த உண்மைகள் தெரியாத ஒருசில அப்பாவிகளும் அவர்கள் பின்னே சென்றுவிட்டனர். நியாயத்தின் பக்கம் நின்ற பெரும்பான்மையினர் எப்பொழுதும் போல எழுச்சியோடு தங்களது பயணத்தைத் தொடர்கின்றனர்.

இதில் வேடிக்கை என்னவென்றால் “சொசைட்டி“ செயலாளர் மீதான புகாரை விசாரணை செய்தக் குழுவில் இருந்த இருவர், ‘சொசைட்டி’ செலாளார் தவறு செய்வதை தெரிந்தே அனுமதித்த அரசில் தலைமையின் சிறுபான்மைக்குப் பின்னால் ஓடியதுதான். இப்படி ஓடியவர்கள், ஒன்று முறைகேடுகளைக் கண்டு ஆத்திரம் கொள்ளாத சொரணையற்றவர்களாக இருக்க வேண்டும்; அல்லது இவர்களே இத்தகைய முறைகேடுகளில் ஈடுபடுபவர்களாகவோ அல்லது துணைபோகின்றவர்களாகவோ இருக்க வேண்டும்.

பாலியல் பாவிகளும், இலஞ்ச ஊழல் பேர்வழிகளும் வழக்குரைஞராவதற்கு இலாயக்கற்றவர்கள் என்பதால்தான் வழக்காடிகள் இழிகுணம் அற்றோராய் இருக்க வேண்டும் என விதி வகுத்துள்ளனர் என்பதை ஏற்கனவே சுட்டிக்காட்டி உள்ளேன். அப்படினால் பொதுவாழ்வில் உள்ளோர், அதுவும் சமூகத்தைப் புரட்டிப் போடும் புரட்சிப் பணியில் ஈடுபடுவோர், அப்பழுக்கற்றவர்களாக இருக்க வேண்டும் அல்லவா? அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து, போலியான ஆவணங்களை உருவாக்கி, அனாதீன நிலத்தைப் பட்டாவாக மாற்றும் இழிகுணம் கொண்ட ஒரு ‘கிரிமினல்’ வேலையை ‘சொசைட்டி’ செலாளர் தெரிந்தே செய்துள்ளார். அரசியல் தலைமையாகச் செயல்பட்ட, உடனிருந்த இருவர் இவற்றை எல்லாம் தெரிந்தே கண்டும் காணாமல் அனுமதித்துள்ளதால் அவர்களும் ‘சொசைட்டி’ செயலாளரின் இழிகுணங்களுக்கு முழுப் பொறுப்பேற்க வேண்டும். இத்தகைய இழிகுணம் கொண்டோர் பொது வாழக்கையிலிருந்து அப்புறப்படுத்தப்பட வேண்டியவர்கள். அப்படிப்பட்டவர்கள் எந்தப் பெயரில் வந்தாலும் அவர்களை பொதுச் சமூகத்திலிருந்து விலக்கி வைப்பதன் மூலம்தான் நாட்டில் நல்லதொரு மாற்றத்தைக் காண முடியும். இத்தகைய இழிகுணம் கொண்டோரை கண்டும் காணாமல் மௌனமாக இருப்பீர்களேயானால் வரலாறு உங்களையும் மன்னிக்காது.

முற்றும்

தமிழமணி

தொடர்புடைய பதிவுகள்

இழி குணம்: கருத்து முரண்களும் பண்பாட்டுச் சீர்கேடுகளும்!....13

இழி குணம்: போராளிகள் தடம் புரளும் தருணங்கள்!.....12

இழி குணம்: பெல்லில் இரண்டாவது அத்தியாயம்.....10
இழி குணம்: மீண்டும் புதிதாய்ப் பிறந்தேன்!.....9
இழி குணம்: போனஸ் போராட்டமும் களப்பலியும்!.....8
இழி குணம்: நாலரை கோடி 'பெல்' உணவக ஊழல்!.....7
இழி குணம்: எதிர் கொண்ட கசையடிகளும், சிறைக் கொட்டடிகளும்!.....6
இழி குணம்: இராகு காலத்தில் இணை ஏற்பு! .....5 
இழி குணம்: மட்டவெட்டும் மலைபடுகடாமும்!.....1

இழி குணம்: மட்டவெட்டும் மலைபடுகடாமும்!.....1

No comments:

Post a Comment