தமிழ்நாட்டில் நக்சல்பாரி அரசியலை, மக்கள் திரள் அரசியலாக மிக ஆழமாகப் பதிய வைத்த, கடந்த ஆண்டு தோழர் அன்பழகன், தற்போது தோழர் ஆர்.கே என இரு நக்சல்பாரித் தலைவர்கள் மரணித்துள்ளனர். மிகப்பெரிய அளவில் உயிர்ப்போடு நினைவுகூறப்பட வேண்டிய அவர்களின் அரசியல் பங்களிப்பு அவ்விருவரின் அந்திமக்காலச் செயல்பாடுகளால் அவர்களின் மரணம் குடத்துக்குள் இட்ட விளக்காய் குன்றிப் போனது.
அவர்களின் கடந்தகால சாதகங்கள், சாதனைகளை ஒரு பக்கமும், கடைசி காலகட்டத்தில் அவர்களின் அரசியல் மற்றும் அமைப்பு நடைமுறைகளையும் ஒப்பிட்டு பரிசீலிக்க வேண்டும். அவர்கள் மரணிக்கும் போது ஏன் தனிமைப்பட்டு, கேட்க நாதியற்றுப் போனார்கள்-குறிப்பாக தோழர் ஆர்.கே - அதற்கான காரணம் என்ன என்பது பற்றியும் பரிசீலிக்க வேண்டும். மரணிக்கும் போது ஒரு மகத்தான தலைவராக மரணித்தத் தோழர் சீனிவாசனோடு இவர்கள் இருவரின் மரணத்தையும் ஒப்பீடு செய்யலாம்.
ஆயிரம் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் பெருமான்மைக் கருத்தை ஏற்றுக் கொண்டு ஒரே அமைப்பில் தொடர்ந்து செயல்படுவதுதான் ஜனநாயக மத்தியத்துவத்தை மதிக்கின்ற போக்காகும். அதேபோல சிறுபான்மை கருத்துள்ளவர்களின் கருத்துக்களுக்கு மதிப்பளித்து அதன் மீதான ஆக்கபூர்வமான விமர்சனங்களை முன்வைப்பதும் பெரும்பான்மையாக உள்ளோர் கடைபிடிக்க வேண்டிய ஜனநாயக மத்தியத்துவக் கோட்பாடாகும். இரு தரப்புமே இதை மீறும்பொழுதுதான் சிறுபான்மையோர் மற்றும் தனிநபர்கள் வெளியேறுவதும், அமைப்பு பிளவு படுவதும் நடக்கிறது.
இந்த அடிப்படைக் கோட்பாடுகளில் ஊன்றி நிற்காமல் போனதனால்தான் தோழர் அன்பழகன், தோழர் ஆர்.கே இருவரின் பெரும் பங்களிப்பால் உருவான ஒரு அமைப்பு பிளவுபட்டுப் போனது என்பதைவிட பிளவுகளுக்கு அவர்களே காரணமாகவும் அடைந்துவிட்டார்கள். இது பிளவுபட்டுக் கிடக்கும் பிற மா-லெ குழுக்களுக்கும் பொருந்தும்.
தோழர் ஆர்.கே
பொதுவாக அரசியல் வழிகாட்டிகளாக இருப்பவர்கள் பற்றி கூடுதல் மதிப்பீடும், மக்கள் திரள் அமைப்பில் செயல்படுபவர்களுக்கு குறைவான மதிப்பீடும் என்கிற ஒரு போக்கு மா-லெ இயக்கங்களில் நிலவுகிறது. என்னதான் சரியான அரசியல் நிலைப்பாடுகள் எடுத்தாலும் அதை மக்கள் மொழியில் அற்பணிப்போடு எடுத்துச் செல்லும் மக்கள் தலைவர்கள் இல்லை என்றால் அத்தகைய அரசியல் நிலைப்பாடுகள் மக்களிடையே எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தாது.
சித்தாந்தத்தை ஒருவர் எழுதி வைத்தாலும் அது விவாதத்திற்குப் பிறகு அணிகளால் ஏற்றுக் கொள்ளப்பட்ட பிறகு அது அமைப்பின் சித்தாந்தமாகிவிடுகிறது. பிற்காலத்தில் அது தவறு என கண்டறியப்பட்டால் அதற்கு அமைப்புதான் பொறுப்பே ஒழிய எழுதி முன்வைத்த தனிநபர்கள் அல்ல.
ஒருவர் முன்வைத்த சித்தாந்தம் பின்னாளில் தவறு என கண்டறியப்பட்டால், அவரை மட்டுமே ஒரு அமைப்பு குறை கூறுவதும், அல்லது ஒரு சரியான சித்தாந்தத்தை முன்வைத்து ஒரு அமைப்பு வெற்றி பெற்று விட்டால் அது தன்னால்தான் என அந்தத் தனிப்பட்ட நபர் பெருமையுடன் உரிமை கோருவதும் இரண்டுமே தவறான போக்குகளாகும்.
மேலும் சித்தாந்தத் தலைமையாக கருதப்படுபவர்கள், தங்களது இறுதி மூச்சுவரை, நிலவுகின்ற அரசியல் பொருளாதார சூழ்நிலைக்கு ஏற்ப மிகச் சரியான அரசியலை முன்வைத்து அது பெரும்பான்மையான அணிகளால் ஏற்கப்பட்டு, மக்களிடையே செல்வாக்கைப் பெறுகிறதா என்பதையும் பரிசீலிக்க வேண்டும்.
மேற்கண்ட அம்சங்களைக் கணக்கில் கொண்டு தோழர் ஆர்.கே மறைவுற்றுள்ள இந்தத் தருணத்தில் ஒரு விரிவான பரிசீலனை தேவை எனக் கருதுகிறேன். இதுவே மார்க்சிய-லெனினியர்கள் தங்கள் தவறுகளைக் களைந்து கொண்டு ஒன்றுபடவும், வளர்ச்சி பெறவும் உதவும். எதிர்மறை அம்சங்களைப் பரிசீலிக்கும் பொழுதுதான் நாம் எங்கே தவறிழைக்கிறோம் என்பதை உணரமுடியும்.
தோழர் ஆர்.கே வுக்கு சிவப்பஞ்சலி!
தமிழ்மணி
No comments:
Post a Comment