Friday, 7 June 2024

மார்க்சிய-லெனினிய வாதிகளுக்கு இந்திய வாக்காளர்கள் உணர்த்தும் பாடம் என்ன?

அரசியல் துறையிலும், அமைப்புத் துறையிலும் கருத்து வேறுபாடுகள் இல்லாத எந்த ஒரு கட்சியும், இயக்கமும் இருக்கவே முடியாது.

ஒரு கட்சியில் அல்லது அமைப்பில் அல்லது குழுவில் எடுக்கப்படும் பெரும்பான்மை முடிவுக்கு சிறுபான்மையாக உள்ளவர்கள் கட்டுப்படுவதும்,

அதேபோல பல்வேறு கிளைகளைக் கொண்ட ஒரு கட்சியில் அல்லது அமைப்பில் அல்லது குழுவில் கீழ்மட்ட அணிகள் தலைமைக்குக் கட்டுப்படுவதும், 

ஒரு கட்சியில் அல்லது அமைப்பில் அல்லது குழுவில் உள்ள ஒவ்வொருவருக்கும் கருத்துச் சொல்ல சுதந்திரம் அளிப்பதும்

ஆகிய இந்த மூன்றும்தான் ஒரு அமைப்பைத் தூக்கி நிறுத்துவதற்கான ஜனநாயகத்தின் தூண்கள். இதைத்தான் ஜனநாயக மத்தியத்துவம் என்கிறார்கள்.

இவற்றை முழுமையாகக் கடைபிடிக்காத போதுதான் ஒரு கட்சியில் அல்லது அமைப்பில் அல்லது குழுக்களில் பிளவுகள் ஏற்படுகின்றன. பொதுவுடமை இயக்கங்கள், குறிப்பாக மார்க்சிய-லெனினிய இயக்கங்கள் பல்வேறு குழுக்களாக, துண்டு துண்டாக சிதறிக் கிடப்பதற்கு இந்த ஜனநாயக மத்தியத்துவக் கோட்பாட்டை கடைபிடிக்காத,  வன்முறைப் (அராஜகப்) போக்குதான் அடிப்படைக் காரணம்.

திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட தேர்தல் அரசியல் கட்சிகளில் இல்லாத கருத்து வேறுபாடுகளா? உள் முரண்களா? எங்கே இல்லை முரண்பாடுகள்? கருத்து வேறுபாடுகள்? அந்தக் கட்சிகளில் எல்லாம் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று துண்டு துண்டாக சிதறிப் போவதில்லையே? தலைமைக்குக் கட்டுப்படுகிறார்களே? ஏன்?

பிழைப்புவாத அரசியல் கட்சிகளிடம் இருக்கின்ற குறைந்தபட்ச ஜனநாயக உணர்வுகூட மார்க்சியம்-லெனினியம் பேசும் தோழர்களிடம் இல்லாதது வேதனை அளிக்கிறது. 

இந்திய அரசியலைக் கணிப்பதில், 'எல்லாம் எமக்குத்தான் தெரியும்' என்கிற அதிமேதாவித்தனமும், மார்க்சியம்-லெனினியம் பேசும் இயக்கங்களின் பிளவுகளுக்கு முக்கியப் பங்காற்றுகின்றன.

ஒரு கட்சி அல்லது அமைப்பு அல்லது குழு என்று எடுத்துக் கொண்டால், அதில் ஓராயிரம் கருத்துக்கள் வரத்தான் செய்யும். அத்தகைய கருத்துக்களில் எது பெரும்பான்மையான கருத்தோ அதை ஏற்றுக் கொண்டு செயல்படுவதும், சிறுபான்மையான கருத்துக்கள்தான் சரி என்று கருதுவோர் அதைப் பெரும்பான்மை ஆக்குவதற்கான போராட்டத்தை உள்ளிருந்தே செய்வதும்தான் ஒரு அமைப்பு கட்டுக்கோப்பாக இருப்பதற்கும் வளர்ச்சியை நோக்கிச் செல்வதற்கும் உதவும்.

நூறு பூக்கள் மலரட்டும் என்று மாவோ சொன்னதை, நூறு குழுக்கள் உருவாகட்டும் என்று இவர்கள் புரிந்து கொண்டார்களோ? சிறுபான்மை கருத்தைக் கொண்டு வெளியேறி தனிக் குழுவாக செயல்பட்டுவோர், எந்தக் குழுவிலிருந்து வெளியேறினார்களோ அந்தக் குழுவை மட்டுமே வசைப்பாடிக் கொண்டு காலத்தைத் தள்ளுகின்ற போக்கு இன்று அதிகரித்துள்ளது. அதேபோல தனி நபர்களாக வெளியேறிய இத்தகைய நபர்களும் இதே வேலையைத்தான் செய்து கொண்டிருக்கின்றனர். 

மேற்கண்ட சிறுபான்மையினரும் தனி நபர்களும், எந்த மார்க்சிய-லெனினியத்தை நேசிப்பதாகச் சொல்கிறார்களோ அவற்றை பலவீனப்படுத்துகின்ற வேலையைத்தான் தாங்கள் செய்வதாகவோ அல்லது மார்க்சிய-லெனினியத்தின் மீதான வெறுப்பை மக்களிடையே பரப்புகின்ற வேலையைத்தான் தாங்கள் செய்வதாகவோ அவர்கள் உணர்ந்ததாகத் தெரியவில்லை.

இந்து மதவெறிப் பாசிசத்தை வீழ்த்த வேண்டும் என்கிற கடமையை சாதாரண இந்திய வாக்காளர்கள் உணர்ந்திருக்கின்ற அளவுக்குக்கூட மார்க்சியம்-லெனினியம் பேசும் இந்தச் சிறுபான்மைக் குழுவினர் மற்றும் தனி நபர்கள் உணர்ந்ததாகத் தெரியவில்லை. 

இவற்றையெல்லாம் கணக்கில் கொண்டு, இனியாவது மார்க்சியம்-லெனினியம் பேசுபவர்கள் தங்களுக்கான ஒரு பொது மேடையை உருவாக்கி ஒரே அமைப்பாக ஒன்றிணைவதற்கான முயற்சிகளை மேற்கொள்ளவில்லை என்றால் இந்தியாவில் மார்க்சிய-லெனினியத்தின் சுவடுகளே இல்லாமல் போகும். 

தமிழ்மணி

No comments:

Post a Comment