Thursday, 20 January 2022

சுயநிர்ணய உரிமை என்றால் என்ன? தொடர்-8

சுயநிர்ணயம் என்ற சொல்லின் பொருள் என்ன? சட்டரீதியான வரையறைகளிலிருந்து இதற்கு விடை தேடுவதை விடுத்து, உலகம் முழுவதிலும் நடைபெற்று வரும் தேசிய இயக்கங்களின் அனுபவத்திலிருந்து வரலாற்று–பொருளாதார ரீதியில் ஆராய்ந்து பார்த்தால், தேசிய இனங்களின் சுயநிர்ணயம் என்பதன் பொருள், மாருஷ்ய நாட்டரசிலிருந்து உக்ரைன், லித்துவேனியா, லாத்வியா போன்ற தேசிய இனங்கள் அல்லது இந்திய ஒன்றியம் என்கிற நாட்டரசிலிருந்து தமிழ்நாடு, கேரளம், கர்நாடகம், ஜம்மு காஷ்மீர், நாகாலாந்து போன்ற தேசிய இனங்கள், அரசியல் ரீதியில் பிரிந்து தங்களுக்கான சுதந்திரமான தேசிய அரசு ஒன்றை அமைத்தல் என்பதைத் தவிர வேறு பொருள் கொள்ள முடியாது.

கணவன்-மனைவி இருவருக்குமான விவாகரத்து சுதந்திர உரிமையை ஆதரிப்பது எப்படித் தவறாகாதோ, அது போன்றுதான் தேசிய இனங்கள் பிரிந்து போகும் சுதந்திர உரிமையை ஆதரிப்பதும் தவறாகாது. கணவன்-மனைவி இருவருக்குமிடையே பிணக்குகள் தோன்றிய உடனேயே அவர்கள் பிரிந்து சென்று விடுவதில்லை. மாறாக, பிணக்குகளுக்கான காரணங்களைக் குறிப்பிட்ட குடும்ப வாழ்க்கையைப் பருண்மையாக ஆய்வு செய்த பிறகு, பிணக்குகளை தீர்ப்பதற்கு வேறு வழியே இல்லை என்கிற சூழ்நிலையில்தான் அவர்கள் பிரிந்து வாழ்வதற்கு விவாகரத்துக் கோருகிறார்கள். அது போன்றுதான் தேசிய இனப்பிரச்சனை போன்ற சமூகப் பிரச்சனையை ஆராயும் போது அதை, அதன் திட்டவட்டமான வரலாற்று எல்லைக்குள் ஆராய்ந்து, அதன் பிறகே பிரிந்து செல்வது பற்றி தீர்மானிக்க வேண்டும்.

கணவன் மனைவியையோ அல்லது மனைவி கணவனையோ அடக்கி ஒடுக்கும் ஒரு குடும்ப சூழ்நிலையில், அவர்கள் சேர்ந்து வாழலாமா? அல்லது பிரிந்து விடலாமா? குடும்ப நிலைமைகளைப் பாரதூரமாகப் பரிசீலிக்காமல் சேர்ந்து வாழ்வதா? அல்லது பிரிந்து விடுவதா? ‘இரண்டில் ஒன்று பதில் சொல்!’ என்று கேட்பது எப்படி அபத்தமானதோ அது போன்றுதான் தேசிய இனப் பிரச்சனையில் கேட்பதும்.

கணவனின் நலன் அல்லது மனைவியின் நலன் எதுவாக இருப்பினும், மொத்தத்தில் அது குடும்ப நலனுக்கு உட்பட்டதுதான் கணவன்-மனைவி இருவரும் பிரிந்து செல்லும் விவாகரத்து உரிமை. அது போல, பாட்டாளி வர்க்கத்துக்கும், வர்க்கப் போராட்ட நலன்களுக்கும் கீழ்ப்பட்டவைதான் தேசிய இனங்கள் பிரிந்து செல்வது குறித்த பிரச்சனையும்.

கணவன் மனைவி இருவரும். பிரிந்து செல்வதில் முடியுமா அல்லது சேர்ந்து வாழ்வதில் முடியுமா எனபதை எப்படி முன்கூட்டியே யாரும் சொல்ல முடியாதோ அது போலத்தான் ஒரு குறிப்பிட்ட தேசிய இனம் இன்னொரு தேசிய இனத்திலிருந்து பிரிந்து போவதில் முடியுமா அல்லது சம அந்தஸ்து பெற்று சேர்ந்திருப்பதில் முடியுமா என்பதை முன்கூட்டியே யாரும் சொல்ல முடியாது.

முடிவு எதுவானாலும், தனது மேம்பாட்டுக்கு வழிசெய்வதுதான் பாட்டாளி வர்க்கத்துக்கு முக்கியமானது. ஆனால், முதலாளித்துவ வர்க்கத்துக்கோ, பாட்டாளி வர்க்க நலனைவிட தனது நலனை முன்னிறுத்தி, பாட்டாளி வர்க்க நலனுக்கான  மேம்பாட்டை தடை செய்வதுதான் முக்கியம். எனவேதான், பாட்டாளி வர்க்கமானது, எந்த ஒரு தேசிய இனத்துக்கும் சாதகமாக இருப்போம் என்று உறுதி எதையும் அளிக்காமல், இன்னொரு தேசிய இனத்துக்குப் பாதகமாக எதையும் செய்வோம் என்றும் கூறாமல், சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்க வேண்டும் என்ற எதிர்மறைக் கோரிக்கையுடன் மட்டும் தன்னை நிறுத்திக் கொள்கிறது. பாதகமாக எதையும் செய்ய  மாட்டோம் என்று உறுதி அளிப்பதைத்தான் ‘எதிர்மறை’ கோரிக்கை என்கிறோம்..

சாத்தியமான தீர்வுகள் அனைத்திலும் மிகவும் ஜனநாயகமானத் தீர்வு ஒன்றைப் பெறுவதற்கு நடைமுறையில் சிறந்த உத்தரவாதத்தை இது ஒன்றுதான் அளிக்கிறது. பாட்டாளி வர்க்கத்துக்கும் இந்தகையதொரு உத்தரவாதம்தான் தேவை.

விவாகரத்து உரிமையில் பிரிந்து வாழ்வதற்கு உத்தரவாதம் இருப்பதால்தான் ஒருவர் நலனை மற்றொருவர் பறிக்காமல் அவர்கள் ஒன்றிணைந்து ஒன்றாக வாழ முடிகிறது. தேசிய இனங்களுக்கும் இது சாலப் பொருந்தும்தானே?

விவாகரத்து உரிமை, குடும்பத்தைத் துண்டு படுத்துவதாகும் என்று உரத்துக் குரல் கொடுப்பவர்கள், ஆண்களின் சிறப்பு உரிமைகளையும், பெண்களை ஆண்கள் ஒடுக்குவதையும் ஆரிக்கும் பிற்போக்காளர்கள், நயவஞ்சகர்கள் ஆவர். விவாகரத்து உரிமையினால் குடும்பங்கள் துண்டுபட்டுப் போவதில்லை; மாறாக நாகரிக சமுதாயத்தில் அது ஒன்றுதான் ஜனநாயக அடிப்படையிலான சாத்தியமான நிலையான, குடும்ப உறவுகளை வலுப்பத்தும் ஒன்றாகும்.

சுயநிர்ணய உரிமை சுதந்திரத்தை, அதாவது பிரிந்து போகும் சுதந்திர உரிமையை ஆதரிப்பதானது நாட்டைத் துண்டாடுவதற்குத் தூண்டிவிடுவதாகும் என்று குற்றம் சாட்டுவது நயவஞ்சகமானது, முட்டாள்தனமாது. விவாகரத்து சுதந்திர உரிமையை ஆதரிப்பவர்கள், குடும்ப உறவுகளைக் கெடுப்பவர்கள் என்று குற்றஞ்சாட்டுவது எந்த அளவுக்கு முட்டாள்தனமானதோ அந்த அளவுக்கு முட்டாள்தனமானது தேசிய இனங்கள் பிரிந்து போவதற்கான சுயநிர்ணய உரிமையை எதிர்ப்பது. உண்மையில் தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமையை எதிர்ப்பது என்பது ஒடுக்கும் தேசிய இனத்திற்கான சிறப்புச் சலுகைகளை ஆதரிக்கும், ஜனநாயகத்துக்கு முரணான செயலாகும்.

எல்லாத் தேசிய இனங்களுக்கும் பிரிந்து போகும் உரிமை உண்டு என்று சொல்வதற்குப் பதிலாக, ஒரு குறிப்பிட்ட தேசிய இனம் பிரிந்து போவதற்குச் “சரி” அல்லது “இல்லை” என்று தெளிவாகச் சொல் என்று கேட்பதற்கு எதிராக நிற்கிறது பாட்டாளி வர்க்கம். உதாரணமாக, இலங்கையில் தமிழீழம், இந்தியாவில் ஜம்மு காஷ்மீர் தனியாகப் பிரிந்து செல்லலாமா? கூடாதா?. இரண்டில் ஒன்று தெளிவாகச் சொல்!” என்று கேட்பதற்கு எதிராக நிற்கிறது பாட்டாளி வர்க்கம்.

சம அந்தஸ்தும், தனக்கான தனி தேசிய அரசு ஒன்றை அமைத்துக் கொள்ளும் உரிமையும் ஒரு தேசிய இனத்திற்கு வேண்டும் என்பதை அங்கீகரிக்கும் அதே வேளையில், எல்லாத் தேசிய இனங்களையும் சேர்ந்த பாட்டாளிகள் கூட்டாக இணைந்திருப்பதை மிகவும் முதன்மையானதாகக் கருதிப் போற்றுகிறது பாட்டாளி வர்க்கம்.

ஒடுக்கப்பட்ட தேசிய இனத்தின் முதலாளி வர்க்கம், ஒடுக்கும் தேசிய இனத்தை எதிர்த்து எந்த அளவுக்குப் போராடுகிறதோ அந்த அளவுக்கு, அப்போராட்டத்தை ஒவ்வொரு நிலையிலும் மற்றவர்களைக் காட்டிலும் அதிகமாகப் பாட்டாளி வர்க்கம் ஆதரிக்க வேண்டும்; ஏன் என்றால் ஒடுக்குமுறைக்கு சிறிதும் விட்டுக் கொடுக்காத தீவிரமான எதிரி பாட்டாளி வர்க்கம் மட்டும்தான்.

பல்வேறு தேசிய இனங்கள் உள்ள ஒரு நாட்டில், பெரிய தேசிய இனத்துக்கான சிறப்பு உரிமைகள், தனிச் சலுகைகள் எதையும் பாட்டாளி வர்க்கம் ஆதரிக்காது. வர்க்க லட்சியத்தை நோக்கி நடைபோடுவதற்கு, அத்தகைய நாட்டில் வாழும் அனைத்து தேசிய இனங்களையும் சேர்ந்த தொழிலாளர்களையும் ஒற்றுமைப் படுத்த வேண்டும்.

ஒடுக்கும் பெரிய தேசிய இனத்துக்கான சிறப்பு உரிமைகள், சலுகைகள் அனைத்தையும் எதிர்த்தும், அனைத்து தேசிய இனங்களும் தங்களுக்கான தேசிய அரசுகளை அமைத்துக் கொள்ளச் சம உரிமை உண்டு என்பதை ஆதரித்தும் அன்றாடப் பிரச்சாரம் மற்றும் கிளர்ச்சிகளை பாட்டாளி வர்க்கம் மேற்கொள்ள வேண்டும். இந்த வகையில்தான் அனைத்து தேசிய இனங்களைச் சேர்ந்த பாட்டாளிகள் சம அந்தஸ்துடன் ஒரு கூட்டணியை அமைத்துக் கொள்ள முடியும்.

உண்மையில் இந்தப் பிரச்சாரம் மட்டும்தான் மக்களிடையே சோசலிச உணர்வை  ஏற்படுத்தும். பல தேசிய இனங்கள் இருக்கும் ஒரு நாட்டில், அமைதி நிலவுவதற்கும், தேசிய இனங்கள் மிகவும் அமைதியாகத் தனித் தனி அரசுகளாகப் பிரிவதற்கும் அதிக வாய்ப்புகளை மேற்கண்ட பிரச்சாரம் மூலம் மட்டும்தான் ஏற்படுத்த முடியும். தேசிய இனப் பிரச்சனையில் பாட்டாளி வர்க்கத்தின் ஒரே கொள்கை இதுதான்.

எல்லா வகையான தேசியவாதத்தையும், குறிப்பாக ஒடுக்கும் தேசிய இனத்தின் தேசிய வாதத்தை எதிர்த்துப் போராடுவது (1) மற்றும் பொதுவாக எல்லா தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமைகளை ஏற்றுக் கொள்வதோடு மட்டுமன்றி, அரசு அமைப்பதற்கான, சம உரிமைகளை, அதாவது தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமையை, பிரிந்து போகும் உரிமையை ஏற்றுக்கொள்வது (2) ஆகியவைதான் பாட்டாளி வர்க்கத்தின் முன் உள்ள இரண்டு கடமைகளாகும்.

அதே சமயத்தில் அனைத்து விதமான தேசிய வாதத்தையும் எதிர்த்துப் போராட வேண்டி, பாட்டாளி வர்க்கப் போராட்டத்தின் ஐக்கியத்தை, பாட்டாளி வர்க்க அமைப்புகளின் ஐக்கியத்தைப் பேணிப் பாதுகாப்பதும் பாட்டாளி வர்க்கத்தின் கடமையாக உள்ளது. இந்த அமைப்புகளை நன்கு நெருக்கமான சர்வதேச பொது  நிறுவனமாக இணைப்பதும் முக்கியக் கடமையாக உள்ளது.

“எல்லா தேசிய இனங்களுக்கும் சம உரிமைகள்; தேசிய இனங்களுக்கு சுயநிர்ணய உரிமை; எல்லாத் தேசிய இனங்களையும் சேர்ந்த தொழிலாளர்களுக்கிடையில் ஒற்றுமை”-இதுதான் மார்க்சியம் போதிக்கும் செயல் திட்டமாகும்.


1896, லண்டன் சர்வதேசக் காங்கிரசின் தீர்மானங்கள், ருஷ்யக் கம்யூனிஸ்ட் கட்சியின் 1903 செயல் திட்டம் மற்றும் 1912, 1913, 1914, 1916, 1922 ஆண்டுகளில்
  லெனின், ஸ்டாலின் ஆகிய இருவரின் வழிகாட்டுதல்படிதான் தேசிய இனப் பிரச்சனை குறித்து இங்கே விவாதிக்கப்பட்டுள்ளது.

தாெடரும்

தமிழ்மணி

தொடர்புடைய பதிவுகள்

சீமானின் தமிழ்த் தேசியம் தமிழர்களைக் கரை சேர்க்குமா? தொடர்-1


திராவிடம்! தொடர் - 2


தமிழீழ விடுதலைப் போராட்டமும் தமிழகத்தில் அதன் தாக்கமும்! தொடர்-3



தேசம் என்றால் என்ன? தொடர்-5



தேசிய இனங்களின் உருவாக்கமும், தேசிய இன ஒடுக்கு முறையும்! தொடர்-7


No comments:

Post a Comment