அரை நிலவுடைமை, அரைக் காலனிய இந்தியாவில் ஏகாதிபத்தியங்கள், தரகு முதலாளிகள் மற்றும் நிலப்பிரப்புகளின் சுரண்டலிலிருந்து மக்களை மீட்டு, ஒரு புதிய ஜனநாயக அரசு அமைப்பதைக் குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டு வந்த மார்க்சிய-லெனினிய பொதுவுடமை இயக்கங்கள், இன்று தேசிய இன விடுதலை குறித்து அதிகமாகப் பேசத் தொடங்கி விட்டன.
1990-களுக்குப் பிறகு அறிமுகப்படுத்தப்பட்ட தனியார் மயம்-தாராள மயம்-உலக மயம் உள்ளிட்ட புதிய தாராளவாதக் கொள்கையின் விளைவாக உள்நாட்டுத் தொழில்கள் நலிவடைந்தன. பொதுத் துறைகள் மூடப்படுகின்றன. இயற்கை வளங்களும், தொழில்களும் தனியார் வசமாகின்றன. கார்ப்பரேட் முதலாளிகள் நலனுக்காக தொழிலாளர் நலச் சட்டங்கள் உள்ளிட்ட பல சட்டங்கள் திருத்தப்படுகின்றன. கார்ப்பரேட் முதலாளிகளின் வரைமுறையற்ற கொள்ளையினால் சுற்றுச்சூழல் கேடுகளும், இயற்கைச் சீற்றங்களும் அதிகரித்து வருகின்றன.
2014-ல் மோடி ஆட்சிக்கு வந்த பிறகு சாதித்-தீண்டாமை வன்கொடுமைகளும், பெண்கள் மீதான பாலியல் வக்கிரங்களும், இஸ்லாமியருக்கு எதிரான தாக்குதல்களும், மாட்டுக்கறி உள்ளிட்ட உணவுத் தீண்டாமை, இந்தித் திணிப்பு-சமஸ்கிருத மயம் உள்ளிட்ட தாக்குதல்களும் அதிகரித்துள்ளன.
கார்ப்பரேட்டுகளும், காவிகளும் ஒன்று சேர்ந்து கொண்டு, சுரண்டலை அடிப்படையாகக் கொண்ட சனாதன இந்தியாவை உருவாக்க முனைகின்றனர். எதிர்த்துப் பேசுவோர், UAPA உள்ளிட்ட கொடும் சட்டங்கள் மூலம் சிறையில் அடைக்கப்படுவதும், படுகொலை செய்யப்படுவதும் அதிகரித்து வருகின்றன. கார்ப்பரேட்-காவிப் பாசத்தை வீழ்த்துவதே இன்றைய முதன்மைப் பிரச்சனையாக இருப்பதால் ஆர்எஸ்எஸ்-பாஜகவுக்கு எதிரான சக்திகள் ஒருங்கிணைய வேண்டும் என்ற குரல்கள் பலமாக எழுப்பப்படும் காலகட்டம் இது.
ஆனால், தேசிய இனச் சிக்கல்தான் இன்றைய முதன்மைப் பிரச்சினை. எனவே, தேசிய இன விடுதலையை முன்னெடுப்பதன் மூலம் மட்டும்தான் ஒட்டுமொத்தப் பிரச்சனைகளையும் தீர்க்க முடியும் என்கின்றனர் தமிழ்த் தேசியம் பேசுவோர். எனவே, தேசிய இனப் பிரச்சினை குறித்தப் புரிதல் இருந்தால்தான் எது சரியானது என்பதைத் தீர்மானிக்க முடியும்.
தொடரும்
தமிழ்மணி
தொடர்புடைய பதிவுகள்
No comments:
Post a Comment