Monday, 27 September 2021

வேளாண் திருத்தச் சட்டங்களுக்கு எதிராக வேலூரில் ஆர்ப்பாட்டம்!

  • விளைபொருள் ஊக்குவிப்புச் சட்டம் என்று சொல்லக்கூடிய விவசாயிகள் உற்பத்தி வணிகம் மற்றும் வர்த்தகச் சட்டம்.
  • ஒப்பந்தச் சாகுபடிச் சட்டம் என்று சொல்லக்கூடிய விலை உறுதி மற்றும் பண்ணை சேவைகள் சட்டம்.
  • அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்டம்
ஆகிய மூன்று வேளாண் சட்டத் திருத்தங்களை 05.05.2020 முதல் நடைமுறைக்குக் கொண்டு வந்துள்ளது மோடி தலைமையிலான சங்பரிவார பாஜக அரசு.

வேளாண் பொருள்களை இனி அரசு கொள்முதல் செய்வதை கைவிடுவதற்கும், விவசாயிகளை ஒப்பந்த முறையில் சிக்க வைத்து அவர்களை பெரும் முதலாளிகளுக்கு சேவை செய்யும் அடிமைகளாக மாற்றவும், எண்ணெய்-பருப்பு உள்ளிட்ட சில முக்கியமான வேளாண் பொருட்களை அத்தியாவசியப் பொருள்களின் பட்டியலிலிருந்து நீக்கி பதுக்கலுக்கும் விலைவாசி ஏற்றத்திற்கும் வழி வகை செய்யும் இச்சட்டத் திருத்தங்களை எதிர்த்து கிட்டத்தட்ட ஓராண்டு காலமாக விவசாயிகள் விடாப்பிடியாகப் போராடி வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழுவும், தமிழக ஐக்கிய விவசாயிகள் முன்னணியும் 27.09.2021 நாடு தழுவிய பொது வேலைநிறுத்தம் மற்றும் மறியலுக்கு அறைகூவல் விடுத்திருந்தது.

இந்திய பொதுவுடமைக் கட்சி, இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்), திராவிட முன்னேற்ற கழகம், காங்கிரஸ், மக்கள் அதிகாரம், CITU, AITUC, HMS, தொமுச, INTUC, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி உள்ளிட்ட அரசியல் கட்சிகள், இயக்கங்கள், தொழிற்சங்கங்கள் இப்போராட்டத்தில் நேரடியாக பங்கேற்றன.

இராமச்சந்திரன் (CITU), சிம்புதேவன் (AITUC), சுப்ரமணி (LPF), திருப்பதி (HMS), சேகர் (INTUC) ஆகியோர் தலைமையில் வேலூர் தலைமை அஞ்சலகம் எதிரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்று, வேளாண்மை சட்டங்களுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினர். மக்கள் கலை இலக்கியக் கழகம் மற்றும் புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணியின் இணைப்புச் சங்கமான வேலூர் மாநகர "தோழர் பகத்சிங் அமைப்புசாரா தொழிலாளர் சங்கத்தைச்" சேர்ந்த தரைக்கடை வியாபாரிகள், ஆட்டோ தொழிலாளர்கள், தோழர்கள் இப்போராட்டத்தில் திரளாகப் பங்கேற்றனர்.







தகவல்

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
வேலூர் மாவட்டம்

Sunday, 26 September 2021

வேலூரில் பகத்சிங் பிறந்த நாள் விழா!

அன்று வணிகம் செய்ய வந்த பரங்கியர் கூட்டம் நாட்டு வளங்களை அள்ளிச் சென்றது. நாட்டைக் காக்க வீரு கொண்டெழுந்த மக்களை அடக்குமுறைச் சட்டங்களாலும் கொடிய அடக்கு முறையாலும் ஒடுக்க முனைந்தக் கூட்டத்தை அஞ்சி நடுங்க வைத்தான் மாவீரன் பகத்சிங். 

இன்றோ நாட்டு வளங்களை தனியாருக்குத் தாரை வார்த்து, ஒட்டு மொத்த மக்களையும் ஓட்டாண்டியாக்கி வருகிறது பிழைக்க வந்த சங்பரிவார் கூட்டம்.  இந்தக் கூட்டத்தையும் விரட்டியடிக்க வேண்டுமானால் இன்று நமக்கு ஓராயிரம் பகத்சிங்குகள் தேவைப்படுகிறார்கள்.

இதை உணர்த்தும் விதமாக, பகத்சிங் பிறந்த நாளை நினைவு கூறும் வகையில் 27.09.2021 அன்று  வேலூர் மாவட்டம், வேலூர் மாநகர "தோழர் பகத்சிங் அமைப்புசாரா தொழிலாளர் சங்கம்", புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி சார்பாக பழைய பேருந்து நிலையம், ஆட்டோ ஸ்டாண்ட் அருகாமையில் தோழர் பகத்சிங் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

'புதிய வேளாண் சட்டத் திருத்தங்களுக்கு எதிராக டெல்லியில் போராடும் விவசாயத் தோழர்களுக்கு துணை நிற்போம்!' என்று முழக்கத்தை முன்வைத்து அனைவரும் உறுதி ஏற்றனர். சங்கத் தலைவர் தோழர் செல்வம் அவர்கள் நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கினார். ம.க.இ.க தோழர் இராவணன் அவர்கள், தோழர் பகத்சிங் குறித்தும், வேளாண் சட்டத்திருத்தங்கள் குறித்தும் சிறப்புரையாற்றினார். சங்க உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் விழாவில் கலந்து கொண்டனர்.







தகவல்

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
வேலூர் மாவட்டம்



Friday, 24 September 2021

வேலூர் மாநகரப் போக்குவரத்துக் காவல் ஆய்வாளர் சீனிவாசனின் அடாவடி!

மோடி அரசு ஆட்சிக்கு வந்த கடந்த ஏழு ஆண்டுகளில், வேலை வாய்ப்புகள் எதுவும் புதிதாக உருவாக்கப்படவில்லை. மாறாக அரசு கடைபிடித்து வரும் பொருளாதாரக் கொள்கைகளால் பலர் வேலையிழந்து வாழ வழியற்று நிற்கின்றனர்வேளாண்மை செய்தால் வயிற்றைக் கூட இனி கழுவ முடியாது என்பதால் பலர் நகரங்களில் தஞ்சமடைகின்றனர். பலர் சித்தாள்-கொத்தனார்களாக, சுமைதூக்கும் தொழிலாளர்களாக, சாலையோர சிறு வணிகர்களாக, ஆட்டோத் தொழிலாளர்களாக வாழ்க்கையை நகர்த்துகின்றனர்.

இவர்களில் தரைக்கடை-தள்ளு வண்டி  வியாபாரிகளும், ஆட்டோத் தொழிலாளர்களும் அரசு அதிகாரிகள் மற்றும் காவல் துறையினரின் தொடர்ந்த அச்சுறுத்தலுக்கும், தாக்குதலுக்கும் ஆளாகி வருகின்றனர். போக்குவரத்துக்கு இடையூறு செய்வதாக ஆட்டோக்களை பறிமுதல் செய்வதும், தள்ளுவண்டிகளைத் தாக்கி பொருட்களைச் சேதப்படுத்துவதும், தொழிலாளர்களை அச்சுறுத்துவதும், பொய் வழக்குப் புனைவதும் அரசு அதிகாரிகள் மற்றும் காவல் துறையினரின் கடமையாகவே மாறிவிட்டது.

சாலையோர வியாபாரிகளின் கடையை ஜனாதிபதியே நினைத்தால்கூட அப்புறப்படுத்த முடியாது; மாறாக சாலையோர வியாபாரிகள் சட்டப்படி (Street Vendors Act 2014) அமைக்கப்படும் குழுதான் (vending committee) இவர்களின் பிரச்சனையில் தலையிட முடியும். ஆனால் ஒரு அடி மட்ட 'கான்ஸ்டபிளே' தன்னை ஒரு ‘டொனால்டு ட்ரம்ப்பாக' நினைத்துக் கொண்டு சாலையோர வியாபாரிகளின் வாழ்வில் அத்துமீறி மூக்கை நுழைத்து அடாவடித்தனம் செய்வதைக் காண முடியும்.   

வேலூரில் ஒரு டொனால்டு ட்ரம்ப்

தனது கணவர் உடல் நலிவுற்று உழைக்க முடியாத சூழலில், வேலூரில் கவிதா என்கிற தொழிலாளி சாலையோரத்தில் வேர்க்கடலை, தண்ணீர் பாட்டில், மாங்காய் போன்றவற்றை விற்பனை செய்து தனது குடும்பத்தைக் காத்து வருகிறார். இவர் ஏதோ சாலையின் குறுக்கே ஷாப்பிங் மால்' வைத்து தொழில் செய்து, வேலூர் மாநகர போக்குவரத்தையே நிலைகுலைய வைத்துவிட்டது போல அவரை அச்சுறுத்தி,  மிரட்டி, அசிங்கப் படுத்தி உள்ளார் வேலூர் மாநகரப் போக்குவரத்துக் காவல் ஆய்வாளர் சீனிவாசன் என்பவர்.

ஆய்வாளர் சீனிவாசனின் அடாவடிக்கு எதிராக, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் இணைப்புச் சங்கமான தோழர் பகத்சிங் அமைப்புசாரா தொழிலாளர் நலச் சங்கம் கவிதாவுக்கு ஆதரவாக களம் இறங்கிப் போராடி வருகிறது. போராட்டங்கள் மட்டுமே 'டொனால்டு ட்ரம்ப்பு'களை புறமுதுகிட்டு ஓடச் செய்யும்.

00000

அ. போக்குவரத்து ஆய்வாளர் சீனிவாசனுக்கு எதிராக கண்டன சுவரொட்டி



ஆ. போக்குவரத்து காவல் ஆய்வாளர் சீனிவாசன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு


இ. அமைப்பு சாரா தொழிலாளர்களின் நலனைப் பாதுகாக்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு












தகவல்

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
வேலூர் மாவட்டம்