Monday, 30 March 2026

காகிதக் காலமும் கருப்பு அங்கிகளும்: பார் கவுன்சில் தேர்தல் அனுபவம்

"காதும் கண்ணும் இருக்கும் போது காகிதங்களுக்கு இங்கென்ன வேலை?" என்று கேட்கும் அளவுக்கு இது டிஜிட்டல் மயமாகிப்போன உலகம். மின்னஞ்சல்களும், குறுஞ்செய்திகளும், சமூக ஊடகச் செய்திகளும் ஆதிக்கம் செலுத்தும் இந்த யுகத்தில், கடிதங்கள் நம் வீட்டுக்கதவுகளைத் தட்டுவதே அபூர்வமாகிவிட்டது. 

ஆனால், கடந்த பத்து நாட்களாக என் வீட்டுக் கதவுகள் 'தடதட'த்தன. எட்டிப் பார்த்தால், வாக்கு கேட்டு வழக்கறிஞர்கள் அனுப்பிய கடிதங்கள் அங்கே விரவிக் கிடந்தன.

வீட்டுக்கதவுகள் மட்டுமல்ல, கைபேசிகளும்கூட இதற்கு விதிவிலக்கல்ல. குறுஞ்செய்திகள் மற்றும் வாட்ஸ்அப் வழியாக வந்து விழும் தேர்தல் செய்திகள் காதுகளை அதிர வைத்தன. இவையெல்லாம் 30.03.2026 அன்று நடைபெற்ற தமிழ்நாடு மற்றும் புதுவை பார் கவுன்சில் தேர்தலுக்கான பரபரப்புகள். 

'சாராய ‘பார்' பக்கம் ஒதுங்காதவர்களைக்கூடத் தன்பக்கம் இழுக்கும் வல்லமை கொண்டது இந்தப் ‘பார் கவுன்சில்’ தேர்தல். இதில் நானும் ஒரு வாக்காளனாக ஈர்க்கப்பட்டேன்.


வெயிலூரும் பயணமும்

எனக்கான வாக்குச்சாவடி வேலூரில் இருந்ததால், சக வழக்கறிஞர் தோழரோடு மதியம் 12 மணி வாக்கில் வாலாஜாவிலிருந்து இருசக்கர வாகனத்தில் பயணமானேன். நல்லவேளையாக, அன்று மேகங்கள் கதிரவனைச் சற்றே போர்த்திக் கொண்டதால் அனல் தெறிக்கும் வேலூர், 'வெயிலூராக' மாறாமல் தப்பிப் பிழைத்தது.

வாக்குச்சாவடிக்கு வெளியே வழக்கமான தேர்தல் திருவிழாக் கோலம். வேட்பாளர்களின் ஆதரவாளர்கள் தனித்தனி அணிகளாகப் பிரிந்து துண்டுச் சீட்டுகளைக் கொடுத்து வாக்கு வேட்டையில் ஈடுபட்டிருந்தனர். 
உள்ளாட்சி மற்றும் சட்டமன்றத் தேர்தல்களின் அதே பிம்பம் இங்கும் நிழலாடியது. 

வருத்தமளிக்கும் விதமாக, 'நம்ம ஆளு' என்கிற சாதியப் பற்றும் இங்கே தலைதூக்கி நின்றது. பிறப்பு முதல் இறப்பு வரை மனிதனைத் துரத்தும் சாதி, அறிவுசார் தளமான கருப்பு அங்கிகளையும் விட்டு வைக்கவில்லை என்பது கசப்பான உண்மை.

டிஜிட்டல் யுகத்தில் ஒரு 'மன்னராட்சி' முறை

பிற்பகல் ஒரு மணியைத் தாண்டியும் வாக்குப்பதிவு மந்தமாகவே இருந்தது. வாக்களிக்கக் காத்திருந்த சிலரிடம் பேச்சுக் கொடுத்தபோது, 'வராகனுக்காக' (பயன்) காத்திருப்பவர்கள் போலத் தெரிந்தனர்.

தொழில்நுட்ப முன்னேற்றத்தின் அடையாளமாக QR Code முறையைச் சமூக ஊடகங்கள் வழியாக அறிந்திருந்தேன். என் கைபேசியில் இருந்த குறியீட்டைக் காட்டினால் போதும் என்ற நம்பிக்கையில் உள்ளே சென்றேன். ஆனால், அங்கே ஏற்கனவே அச்சிட்டு வைக்கப்பட்டிருந்த QR Code தாள்களின் வரிசையில் என்னுடையது இல்லை. பிறகு கிரிமினல் பாருக்குச் சென்று, ஐந்து ரூபாய் செலவழித்து ஒரு அச்சுப் பிரதியை எடுத்துக் கொண்டு மீண்டும் வரிசையில் நின்றேன்.

அடையாள அட்டை சரிபார்ப்பு மற்றும் புகைப்படப் பதிவுக்குப் பின், வரும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு முன்னெச்சரிக்கையாக வலது கை ஆட்காட்டி விரலில் மை வைக்கப்பட்டது. (பொதுவாக தேர்தல் ஆணையம் இடது கை ஆட்காட்டி விரலில் மை வைப்பது வழக்கம்). அதன் பிறகு வழங்கப்பட்ட 'பாயளவு' வாக்குச்சீட்டு என்னை வியப்படையச் செய்தது.

விசித்திரமான வாக்குச்சீட்டு முறை

இது சற்றே மாறுபட்ட தேர்தல் முறை. மொத்தம் 23 பேருக்கு வாக்களிக்க வேண்டும். வேட்பாளர்களின் பெயருக்கு எதிரே 1, 2, 3 என விருப்ப வரிசைப்படி எண்களை இட வேண்டும். எனக்குத் தெரிந்த பத்துக்கும் மேற்பட்ட வேட்பாளர்களுக்கு வாக்களித்துவிட்டு வெளியே வந்தேன்.

வெளியே வந்தபோது பசி வயிற்றைக் கிள்ளியது. இன்னமும் பல வழக்கறிஞர்கள் வாக்களிக்காமல் தங்களது 'பசையற்ற' கைகளைப் பிசைந்து கொண்டு காத்திருந்தனர். 

வாக்குச்சீட்டு முறையில் முறைகேடுகள் நடக்காது என்று நம்பினாலும், இந்த அதிவேக டிஜிட்டல் உலகில் இந்த நடைமுறை எனக்கு ஒரு 'மன்னராட்சி காலத் தேர்தல்' முறையாகவே தோன்றியது.

மாற்றத்திற்கான தேவை

சுமார் ஒரு லட்சம் வழக்கறிஞர்கள் வாக்களிக்கும் இந்தத் தேர்தலில், 'முதல் விருப்ப' வாக்குகளைப் பெறுபவர் மற்றும் அதற்கு அடுத்தடுத்த வாக்குகளைப் பெறுபவர்கள் உள்ளிட்ட  23 பேரும் 'பார் கவுன்சில் உறுப்பினர்’ ஆகிவிடுவார்கள்.

இந்த முழு நடைமுறையையும் பார்த்தபோது, ஆன்லைன் முறையிலேயே இந்தத் தேர்தலைப் பாதுகாப்பாகவும், எளிமையாகவும் நடத்த முடியும் என்பது மட்டும் திண்ணமாகப் புரிந்தது.

எனது ‘பர்சில்’ கூடுதல் ‘சுமையும்’ ஏறாமல், விரலில் படிந்த கறைபடா கருப்பு மையுடன் மட்டும் மாலைப்பொழுதில் தெம்புடன் வீடு திரும்பினேன்.

பொன்.சேகர்
வழக்கறிஞர்
வாலாஜாபேட்டை

Sunday, 29 March 2026

சொத்தில் உரிமை உண்டு, சுமையில் பங்கு இல்லையா? – சட்டத்தின் ஓட்டைகளும் சிதையும் தார்மீகக் கடமைகளும்!

இந்தியச் சமூகத்தில் குடும்பக் கட்டுப்பாடு தீவிரமாகப் பிரச்சாரம் செய்யப்பட்ட காலத்திற்குப் பிறகு, "இரண்டு குழந்தைகள் போதும்" என்கிற நிலை உருவானது. காலமாற்றத்தில், கல்வி மற்றும் வாழ்க்கைச் செலவுகளைச் சமாளிக்க முடியாமல் இன்று "ஒரே ஒரு பிள்ளை" என்று பலரும் நிறுத்திக்கொள்கிறார்கள். அந்த ஒரே பிள்ளையும் ஆணாக இருந்து, அவன் எதிர்பாராத விதமாக இறந்துபோகும் சூழலில், அந்த முதிய பெற்றோரின் கதி என்ன? இது இன்று பல குடும்பங்களில் எழும் ஒரு மௌனமான அழுகுரல்.


சட்டத்தின் பார்வையும் சமூகத்தின் யதார்த்தமும்

சமீபத்தில் அலகாபாத் உயர் நீதிமன்றம் வழங்கிய ஒரு தீர்ப்பு (ராக்கேஷ் குமார் எதிர் உ.பி. அரசு, 2026), இந்த வலியை மீண்டும் ஒரு விவாதப் பொருளாக்கியுள்ளது. பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா (BNSS) பிரிவு 144 (பழைய CrPC பிரிவு 125-க்கு இணையானது) கீழ் முதிய தம்பதியினர் தங்கள் மருமகளிடம் பராமரிப்புத் தொகை கோரி தாக்கல் செய்த மனுவைத் தள்ளுபடி செய்த நீதிமன்றம்,

"மாமனார் மற்றும் மாமியாரைப் பராமரிக்க வேண்டிய சட்டப்பூர்வமான கடமை மருமகளுக்கு இல்லை" 

என்று திட்டவட்டமாகக் கூறியுள்ளது.

நமது நடைமுறையில், ஆண்கள் தான் பெற்றோரைப் பாதுகாக்க வேண்டும் என்பது காலம் காலமாக இருந்து வரும் ஒரு மரபு. ஆனால், ஒரே மகனைப் பெற்ற பெற்றோர், அவனை ஆளாக்கி, அவனுக்குத் திருமணம் செய்து வைத்து, தங்கள் சொத்துக்களுக்கும் அவனையே வாரிசாக்குகிறார்கள். அந்த மகன் இறந்துவிட்டால், அந்தப் பெற்றோரைப் பராமரிக்க வேண்டியது அந்த வீட்டு மருமகளும் பேரப்பிள்ளைகளும் தானே? 

ஆனால், சட்டம் இங்கே "தார்மீகக் கடமையை" விட "சட்டப்பூர்வ விதிகளுக்கே" முன்னுரிமை அளிக்கிறது.

சொத்துரிமை vs பராமரிப்புப் பொறுப்பு

இங்கேதான் ஒரு விசித்திரமான முரண்பாடு எழுகிறது. ஒரு மருமகள், தனது கணவர் மூலமாக மாமனார்-மாமியார் சேர்த்த சொத்துக்களை அனுபவிக்கச் சட்டப்படி உரிமை உண்டு. ஆனால், அதே சட்டமானது அந்தச் சொத்தைக் கொடுத்த மாமனார்-மாமியாரைப் பராமரிக்க வேண்டிய பொறுப்பு மருமகளுக்குக் கிடையாது என்கிறது.

பெண் பிள்ளைகளை மட்டுமே பெற்ற பெற்றோரின் நிலை இன்னும் மோசம். பெண் திருமணமானவுடன் "அடுத்த வீட்டுச் சொத்து" என்று கருதப்படும் சூழலில், அவள் சம்பாதித்தாலும் தன் பெற்றோருக்குச் செலவு செய்வதை பல கணவன்மார்கள் ஏற்பதில்லை. அதேபோல், சம்பாதிக்கும் கணவன் தன் பெற்றோரைக் கவனிப்பதைத் தடுக்கும் மருமகள்களும் உண்டு. 

சட்டத்தின் ஓட்டைகளும் நம் கடமையும்

நமது சட்டங்கள் பலவும் ஒரு குறிப்பிட்ட காலத்து சமூகக் கட்டமைப்பையும், ஆணாதிக்கச் சிந்தனையையும் அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டவை. இதனால்தான் பராமரிப்புப் பொறுப்பு என்று வரும்போது பல "ஓட்டைகள்" மிஞ்சுகின்றன. ஒரு மகன் இறந்த பிறகு, அவனது வாரிசுகள் அந்தச் சொத்தை அடையும்போது, அந்தச் சொத்தைச் சம்பாதித்த முதியவர்களைக் காக்கும் பொறுப்பும் அவர்களுக்குச் சட்டப்படி கட்டாயமாக்கப்பட வேண்டும்.

பராமரிப்பு மற்றும் நலவாழ்வுச் சட்டம் (Maintenance and Welfare of Parents and Senior Citizens Act, 2007) என்றொரு சட்டம் ஏற்கனவே இருந்தாலும், நாம் மேலே விவாதித்த சட்டச் சிக்கல்களைப் பொதுச் சமூகம் கூர்ந்து கவனிக்க வேண்டும். சட்டத்தில் உள்ள ஓட்டைகளை அடைத்து, முதியோர்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்யும் சட்டங்களை இயற்ற வேண்டியது மக்கள் பிரதிநிதிகளின் கடமை.

ஆனால், கெடுவாய்ப்பாக நமது பிரதிநிதிகள் தேர்தல் வெற்றிக்குப் பிறகு தங்களின் நிலையைப் பற்றி மட்டுமே கவலைப்படுகிறார்கள்.

தேர்தல் நெருங்கும் இந்த நேரத்தில், நாம் உரக்க எழுப்ப வேண்டிய குரல் இதுதான்:

சொத்துரிமை யாருடையதோ, அவரே முதியோர் பராமரிப்பு பொறுப்பையும் ஏற்றுக் கொள்ள வேண்டும்!

முதியோர் பாதுகாப்பு என்பது குடும்பத்தின் கருணைக்கு மட்டும் விடப்படக் கூடாது; அது சமூகமும் சட்டமும் இணைந்து உறுதி செய்ய வேண்டிய அடிப்படை பொறுப்பு.

பொன்.சேகர் 
வழக்கறிஞர்

செய்தி ஆதாரம்: Live Law

Saturday, 28 March 2026

பெருஞ்சாதிகளின் பின்னணியில் உள்ள அரசியல் சூழ்ச்சி!

முன்னுரை:ஒரு போலியான அரசியல் முகம்

தேர்தல் களம் என்று வந்துவிட்டால், தமிழக அரசியலில் 'கொள்கை' என்பது ஒரு மெல்லிய திரை மட்டுமே. அதன் பின்னால் இயங்கும் உண்மையான இயந்திரம் 'சாதி'. சிதறிக் கிடக்கும் சிறு சிறு உட்பிரிவுகளை ஒன்றிணைத்து, ஒரு 'பெருஞ்சாதியாக' (Mega-Caste) உருமாற்றும் வித்தை கடந்த சில ஆண்டுகளாக முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இது சாதி ஒழிப்பிற்கான வழியா அல்லது சனாதனக் கட்டமைப்பைப் பலப்படுத்தும் உத்தியா?


1. பெருஞ்சாதி உருவாக்கம் என்றால் என்ன?

வரலாற்று ரீதியாகவும், தொழில் ரீதியாகவும் வெவ்வேறு அடையாளங்களைக் கொண்டிருந்த கிளைச் சாதிகள், தங்களின் அரசியல் பேரம் பேசும் வலிமையை அதிகரிக்கவும், ஒரு பெரும் வாக்கு வங்கியாக மாறவும் தங்களை ஒரே பொதுப் பெயரில் அடையாளப்படுத்திக் கொள்வதே 'பெருஞ்சாதி உருவாக்கம்' ஆகும். இது சமூக மாற்றத்திற்கான ஒன்றிணைப்பு அல்ல; அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான கூட்டு முயற்சி.

2. பிழைப்புவாத அரசியல்: ஏன் இந்தத் தனித்தனி 'கடாபி'கள்?

பெருஞ்சாதிகளை உருவாக்கத் துடிக்கும் இந்தத் தலைவர்கள் கூட, உண்மையாக ஒன்றாக இல்லை. கிளைச் சாதிகள் அனைத்தும் ஒரே சாதியாக மாற வேண்டும் என்பது இவர்களின் உண்மையான நோக்கமாக இருந்தால், இவர்கள் ஏன் ஆளாளுக்கு ஒரு 'கடாபி'யாகத் தனித்தனி இயக்கங்களை நடத்தி வருகிறார்கள்?

ஒரே சாதியப் பின்னணி கொண்டவர்களே பல பிரிவுகளாகப் பிரிந்து, ஆளாளுக்கு ஒரு கொடியைப் பிடித்துக் கொண்டிருப்பது இவர்களின் பிழைப்புவாத அரசியலையே காட்டுகிறது. தங்களின் தனிப்பட்ட அதிகார வேட்கைக்காகவும், அரசியல் பேரம் பேசுவதற்காகவும் இவர்கள் மக்களைப் பிரித்து வைத்திருக்கிறார்கள்.



3. மேல் முதல் கீழ் வரை: பெருஞ்சாதிகளின் அணிதிரட்டல்

பார்ப்பனர்கள் தங்களுக்குள் பல்வேறு உட்பிரிவுகளாகப் பிரிந்திருந்தாலும், மற்றவர்களை ஒடுக்குவதிலும் தங்களின் மேலாதிக்கத்தைத் தக்கவைப்பதிலும் 'பிராமணர்' எனும் பெருஞ்சாதியாகத் தங்களை அடையாளப்படுத்திக் கொள்கிறார்கள். இதற்குச் சான்றாக, "அனைத்துச் சாதி அர்ச்சகர்" விவகாரத்தில் அவர்களின் ஒற்றைக் குரல் எதிர்ப்பைக் கூறலாம். இதே போன்ற திரட்டல் இன்று முதலியார், முக்குலத்தோர் உள்ளிட்ட இடைநிலைச் சாதிகள் மற்றும் தேவேந்திரகுல வேளாளர் உள்ளிட்ட ஒடுக்கப்பட்ட சாதிகளிடமும் அரசியல் லாபத்திற்காக முன்னெடுக்கப்படுகிறது.

4. சாதிப் பெருமை: வயிறு காய்ந்தவனின் 'புளித்தேப்பம்'

"சொந்த சாதிக்காரன் அதிகாரத்தில் அமர்வதைப் பார்த்து ஒரு பாமரன் மகிழ்ச்சியடைவது, பசியால் வயிறு காய்ந்து வாடிக்கொண்டிருக்கும் ஒருவன், வயிறார உண்டது போலப் 'புளித்தேப்பம்' விடுவதற்குச் சமமானது."

ஒரு நபர் தனது சாதி அடையாளத்தை ஒரு கேடயமாகப் பயன்படுத்தி, முறைகேடாக தனக்கான ஆதாயங்களை அடைகிறான்.

5. திருமண உறவுகளில் நிகழும் 'பெருஞ்சாதி' சமரசம்

முன்பெல்லாம் அந்தந்தக் கிளைச் சாதிகளுக்குள் மட்டுமே மண உறவு இருந்தது. ஆனால் இப்போது, முற்போக்கு எண்ணம் கொண்டோர் கூட, "மேலே உள்ள சாதி அல்லது கீழே உள்ள சாதி எதற்கு?" என்று அஞ்சி, மற்ற சாதிகளைத் தவிர்த்துவிட்டு "பெருஞ்சாதிக்குள் மண உறவு" என்பதில் சமரசம் செய்து கொள்கிறார்கள். இது சாதியை ஒழிக்காது, மாறாகச் சாதியை இன்னும் அகலமாக வேரூன்றச் செய்யும்.

6. காதல் திருமணங்களும் நக்சல்பாரி அரசியலும்

காதல் வயப்படுவதால் நடைபெறும் சாதி மறுப்புத் திருமணங்கள் பெரும்பாலும் குடும்ப எதிர்ப்பால் தோல்வியில் முடிகின்றன அல்லது பெரும் போராட்டத்திற்கு உள்ளாகின்றன. ஆனால், நக்சல்பாரி பின்னணி கொண்டவர்களிடம் இயல்பாகவே குடிகொண்டுள்ள தெளிவும் போராட்டக் குணமும் சாதி மறுப்பை ஒரு வாழ்க்கை முறையாகவே ஏற்க வைக்கின்றன.

அங்கே பொருளாதாரச் சிக்கல்கள் எழுந்தாலும், கொள்கை உறுதி இருப்பதால் மணவாழ்வில் கசப்பு ஏற்படுவதில்லை. எனவே, இத்தகைய புரட்சிகர அமைப்புகளின் எழுச்சியும் வளர்ச்சியும்தான் சாதி ஒழிப்பில் உண்மையான முன்னேற்றத்தைக் காண வழிவகுக்கும்.

7. தீர்வை நோக்கி: பொதுவுடைமை மற்றும் இடதுசாரி அணுகுமுறை

சாதி ஒழிப்பும், சனாதனக் கட்டமைப்பின் வீழ்ச்சியும் நிகழ வேண்டுமென்றால், வெறும் மேடைப் பேச்சுகள் போதாது.
  • வர்க்கப் போராட்டம்: மக்களைச் சாதி ரீதியாகப் பிரிக்காமல், 'உழைக்கும் வர்க்கம்' என்ற அடையாளத்தில் திரட்டுவது.
  • கலாச்சாரப் புரட்சி: பகுத்தறிவோடு நின்றுவிடாமல், சாதி மறுப்புத் திருமணங்களை ஒரு இயக்கமாக முன்னெடுத்து, சாதி மறுப்புச் சமூகத்தை உருவாக்குவது. சாதி மறுப்பு சமூகத்தை உருவாக்கினால்தான் அது சாதியற்ற சமூகத்தை நோக்கி முன்னேறும். 
முடிவுரை

அரசியல்வாதிகள் சூட்டிக்கொள்ளும் 'பாட்டாளி', புரட்சி, 'திராவிடர்', ‘நீதி’ போன்ற பெயர்கள் சாதி எனும் கசப்பான உண்மையை மூடி மறைக்கும் கவசங்களே. இந்தப் பெயர்களுக்குப் பின்னால் ஒளிந்துள்ள சாதியப் பிணைப்பை உடைத்து, சமத்துவம் மலரப் பொதுவுடைமைப் பயணம் ஒன்றே நிரந்தர வழி.

தமிழ்மணி

தொடர்புடைய பதிவு 

நீதிமன்றங்கள் சட்டக் காவலர்களா அல்லது தார்மீகக் காவலர்களா? - அலகாபாத் தீர்ப்பு எழுப்பும் விவாதங்கள்!

சமீபத்தில் அலகாபாத் உயர்நீதிமன்றம் வழங்கிய இரண்டு வெவ்வேறு தீர்ப்புகள், இந்தியச் சட்ட உலகில் ஒரு முக்கியமான விவாதத்தைத் தொடங்கி வைத்துள்ளன. குறிப்பாக, விவாகரத்து பெறாமல் 'லிவ்-இன்' (Live-in) உறவில் ஈடுபடும் தம்பதியினருக்குப் பாதுகாப்பு கோரும் வழக்கில், நீதிபதிகளின் மாறுபட்ட பார்வைகள் சட்டத்தின் அடிப்படை நோக்கத்தையே கேள்விக்குள்ளாக்குகின்றன.


1. இருவேறு தீர்ப்புகள்: ஒரு ஒப்பீடு

இந்த விவாதத்தின் மையப்புள்ளியாக விளங்கும் இரண்டு வழக்குகளை நாம் முதலில் கவனிக்க வேண்டும்:

தனி நீதிபதியின் வழக்கு (Single Judge Bench):
ஏற்கனவே திருமணமான ஒரு ஆணும் பெண்ணும் (இருவருக்கும் வெவ்வேறு நபர்களுடன் திருமணம் ஆகி இருந்தது), தங்கள் முதல் துணையிடமிருந்து விவாகரத்து பெறாமல் ஒன்றாக வாழ்ந்து வந்தனர். தங்களுக்குப் பாதுகாப்பு வழங்கக் கோரி அவர்கள் தாக்கல் செய்த மனுவை நீதிபதி விவேக் குமார் சிங் தள்ளுபடி செய்தார்.

"சட்டப்பூர்வமான விவாகரத்து இன்றி வேறொருவருடன் வாழ்வது IPC 494/495-ன் படி தண்டனைக்குரியது. ஒரு குற்றத்தைச் செய்பவர்களுக்கு நீதிமன்றம் பாதுகாப்பு வழங்கி, அதை ஊக்கப்படுத்த முடியாது" என்பதே இவரது தீர்ப்பின் சாரம். 

இங்கே 'சமூக ஒழுக்கம்' மற்றும் 'குடும்பக் கட்டமைப்பு' முன்னிறுத்தப்பட்டுள்ளது.

இரு நீதிபதிகள் அமர்வின் வழக்கு (Division Bench):
இதே போன்றதொரு சூழலில் (திருமணமான நபர் வயது வந்த பெண்ணுடன் வாழ்வது), நீதிபதிகள் ஜே.ஜே. முன்ஷி மற்றும் தருண் சக்சேனா ஆகியோர் அடங்கிய அமர்வு மாறுபட்ட தீர்ப்பை வழங்கியது. "சமூகத்தின் தார்மீகக் கண்ணோட்டங்கள் சட்டத்தை மாற்ற முடியாது. வயது வந்த இருவர் தங்கள் சம்மதத்துடன் இணைந்து வாழ்வதை 'குற்றம்' என்று சொல்ல முடியாது. ஒருவரின் தனிநபர் சுதந்திரத்தில் (Article 21) சமூகம் தலையிடக் கூடாது" என்று அவர்கள் குறிப்பிட்டனர்.

2. பிரிவு 21 மற்றும் IPC 494/495 (BNS 82) : ஒரு சட்ட ரீதியான அலசல்

இங்கே ஒரு முக்கியமான சட்ட முரண்பாட்டை நாம் கவனிக்க வேண்டும். 

இந்தியத் தண்டனைச் சட்டம் (IPC) பிரிவுகள் 494 மற்றும் 495 ஆகியவை "மறுமணம்" (Remarriage) செய்துகொள்வதைத் தான் குற்றமாக வரையறுக்கின்றனவே தவிர, "உடனுறைவு" (Live-in relationship) கொள்வதைக் குற்றம் என்று எங்கும் குறிப்பிடவில்லை.

அப்படியிருக்கையில், மனுதாரர்கள் திருமணம் செய்து கொண்டார்களா இல்லையா என்பது தெரியாமலேயே, அவர்கள் இணைந்து வாழ்வதே குற்றம் என்று கருதிப் பாதுகாப்பை மறுப்பது சட்டப்படி ஏற்புடையதல்ல.

இந்திய அரசமைப்புச் சட்டம் பிரிவு 21 மிகத் தெளிவாகக் கூறுகிறது: "சட்டத்தால் ஏற்படுத்தப்பட்ட நடைமுறையின்படி அன்றி (Procedure established by law), எவருடைய உயிரையோ அல்லது தனிநபர் சுதந்திரத்தையோ பறிக்கக் கூடாது." 

உடனுறைவு (Live-in) என்பது சட்டப்படி குற்றம் என்று எந்த ஒரு அரசாங்கப் புத்தகத்திலும் இல்லாதபோது, அதன் அடிப்படையில் ஒருவரின் தனிநபர் சுதந்திரத்தையும், பாதுகாப்பையும் மறுப்பது அரசமைப்புச் சட்டம் பிரிவு 21-க்கு எதிரானது என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

3. சட்டமா? தார்மீகமா? - ஒரு வழக்கறிஞரின் பார்வை

எந்தவொரு சிக்கலையும் அணுகும்போது, நீதிமன்றங்கள் சட்டப்படிதான் (Rule of Law) அணுக வேண்டுமே ஒழிய, தார்மீகத்தின் (Morality) அடிப்படையில் அல்ல. அதற்கான சில முக்கியக் காரணங்கள்:

1.சட்டம் vs ஒழுக்கம்: சட்டம் என்பது எழுதப்பட்ட விதிகள், அது அனைவருக்கும் சமமானது. ஆனால் தார்மீகம் அல்லது ஒழுக்கம் என்பது தனிநபர் சார்ந்தது; காலத்திற்கும் இடத்திற்கும் ஏற்ப மாறுபடக்கூடியது. தார்மீகத்தின் அடிப்படையில் தீர்ப்புகள் வழங்கப்பட்டால், அது நீதித்துறையில் பெரும் குழப்பத்தை விளைவிக்கும்.

2.தனிநபர் சுதந்திரம்: அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளை (Fundamental Rights), சமூகத்தின் பொதுவான ஒழுக்கக் கண்ணோட்டங்களுக்காகப் பறிக்க முடியாது.

3.ஆன்மீகமும் சட்டமும்: ஆன்மீகமோ அல்லது சமூக விழுமியங்களோ மதிக்கப்பட வேண்டுமானால், அவை முதலில் சட்டமாக்கப்பட (Codified) வேண்டும். அவ்வாறு சட்டமாக்கப்பட்ட பிறகு மட்டுமே, அவற்றின் அடிப்படையில் தீர்ப்புகள் வழங்கப்பட வேண்டும். சட்டத்தில் இல்லாத ஒரு விதியை 'தார்மீகம்' என்ற பெயரில் புகுத்துவது நீதித்துறையின் அதிகார வரம்பை மீறுவதாகும்.

முடிவுரை

நீதிமன்றங்கள் தார்மீகக் காவலர்களாக (Moral Guardians) செயல்பட வேண்டிய அவசியம் இல்லை. ஒருவேளை, தார்மீக அடிப்படையில் அல்லது மக்களின் நம்பிக்கையின் அடிப்படையில் தீர்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என்று கருதினால், அந்த நம்பிக்கைகளும் தார்மீக விழுமியங்களும் முதலில் சட்டமாக்கப்பட வேண்டும். அவ்வாறு சட்டமாக்கப்பட்டால் மட்டுமே அது சட்டப்படி நியாயமானதாக (Legally Justifiable) அமையும்.

சட்டத்தின் எழுத்துக்களையும் (Letter of the Law), அரசியலமைப்பின் ஆன்மாவையும் (Spirit of the Constitution) உயர்த்திப் பிடிப்பதே நீதியின் உண்மையான நோக்கம். சட்டம் சொல்லாத தார்மீகத்தை நீதிபதிகள் திணிக்க முற்படுவது ஜனநாயகத்திற்கு ஆரோக்கியமானதல்ல.

பொன்.சேகர், BE, ML, MPhil
வழக்கறிஞர்


Wednesday, 25 March 2026

பொதுவாழ்வில் சமூக செயல்பாட்டாளர்களிடம் இருக்கக்கூடாத 'மூன்று' கறைகள்!

பொதுநல இயக்கங்கள், இடதுசாரித் தோழர்கள் மற்றும் பெரியார்-அம்பேத்கர் சிந்தனைகளைப் பேசுபவர்கள் - இவர்கள் வெறும் தனிமனிதர்கள் அல்ல; ஒரு சமூக மாற்றத்தின் குறியீடுகள். ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாகவும், அநீதிக்கு எதிரான போர்க்கருவியாகவும் தங்களைக் கருதிக்கொள்பவர்களிடம், பொதுச் சமூகம் ஒரு உயர்ந்த அறத்தை எதிர்பார்க்கிறது.

ஆனால், இன்றைய சூழலில் இத்தகைய இயக்கங்களுக்குள் ஊடுருவியுள்ள சில 'கறைகள்', ஒட்டுமொத்தப் போராட்டத்தின் வீரியத்தையே நீர்த்துப்போகச் செய்கின்றன. ஒரு செயல்பாட்டாளர் பொது வாழ்க்கைக்கு லாயக்கற்றவர் என்பதைத் தீர்மானிக்கும் மூன்று முக்கியமான 'கூடாது'கள் இவை:


1.பாலியல் குற்றச்சாட்டுகள்: பெண்ணியத்தின் பெயரால் நடக்கும் வன்முறை

பெண் விடுதலை பேசும் இயக்கங்களுக்குள்ளேயே பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுவது மிகப்பெரிய முரண்.
  • தர்க்கம்: அதிகாரத்தைப் பயன்படுத்தியோ அல்லது தோழமை என்ற போர்வையிலோ ஒரு பெண் மீது பாலியல் அத்துமீறலில் ஈடுபடுபவர், சமூக மாற்றத்தைப் பேச எவ்விதத் தகுதியும் அற்றவர்.
  • விளைவு: இத்தகைய குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகும் நபர்கள், தாங்கள் சார்ந்த இயக்கத்தின் கொள்கைகளையே கேலிக்கூத்தாக்குகிறார்கள். "பெண் விடுதலை" பேசும் நாவால் பாலியல் வன்முறையை நியாயப்படுத்த முடியாது.

2.பொருளாதாரக் குற்றங்கள்: கொள்கை பேசும் நாவுகளில் ஒட்டியிருக்கும் பணத்தாசை

எளிய மக்களின் உரிமைக்காகவும், சுரண்டலுக்கு எதிராகவும் போராடுவதாகச் சொல்லிக்கொண்டு, நிதி மோசடிகளில் ஈடுபடுவது ஒரு தார்மீகக் குற்றமாகும்.
  • தர்க்கம்: பொதுமக்களிடமோ அல்லது இயக்கத் தோழர்களிடமோ வசூலிக்கப்படும் நிதியைத் தன் சுயநலத்திற்காகப் பயன்படுத்துவதும், பொருளாதாரக் குற்றங்களில் ஈடுபடுவதும் ஒரு செயல்பாட்டாளரைத் தரம் தாழ்த்துகிறது.
  • விளைவு: நிதி நேர்மை இல்லாத ஒருவரால், ஊழலுக்கு எதிரான எந்தப் போராட்டத்தையும் முன்னெடுக்க முடியாது. பணத்திற்காகக் கொள்கையை விற்பவர்கள் "வியாபாரிகளே" தவிர "செயல்பாட்டாளர்கள்" அல்ல.

3.சாதியப் பார்வை: சமத்துவத்தின் வேரில் ஊற்றப்படும் நஞ்சு

சாதி ஒழிப்பு, வர்க்கப் போராட்டம் பேசும் இடதுசாரி மற்றும் பெரியாரிய இயக்கங்களுக்குள் இருக்கும் மிகப் பெரிய சாபம் - 'குறுகிய சாதியப் பார்வை'.
  • தர்க்கம்: சக மனிதனை அல்லது சக தோழனைத் தரம் பிரிக்கும்போது, அவன் திறமையையோ அர்ப்பணிப்பையோ பார்க்காமல் "அவன் என் சாதிக்காரன்" என்று அணுகுவது மிகப்பெரிய துரோகம்.
  • விளைவு: இயக்கங்களுக்குள் சாதி ரீதியான குழுக்களை உருவாக்குபவர்கள், அந்த இயக்கத்தையே பலவீனப்படுத்துகிறார்கள். அம்பேத்கர் கண்ட கனவிற்கும், பெரியார் ஊட்டிய பகுத்தறிவுக்கும் இவர்கள் நேர் எதிரிகள்.

பழைய நோயுடன் புதிய வைத்தியம் தேவையா?

இங்கே ஒரு முக்கியமான தர்க்க ரீதியான கேள்வியை நாம் எழுப்ப வேண்டும். ஏற்கனவே பல கட்சிகளும் இயக்கங்களும் இத்தகைய பாலியல், பொருளாதார மற்றும் சாதியக் கறைகளுடன்தான் இயங்கிக் கொண்டிருக்கின்றன. நிலைமை இப்படி இருக்கையில், அதே கறைகளைக் கொண்ட ஒரு சில நபர்களையும் உள்ளடக்கிய, ஆனால் 'முற்போக்கு' பேசும் ஒரு புதிய இயக்கம் இந்தச் சமூகத்திற்குத் தேவையா?

பழைய கறைகளைச் சுமந்து கொண்டு, புதிய பெயரில் வரும் இயக்கங்கள் சமூக மாற்றத்திற்கு உதவாது; மாறாக, அவை புரட்சி / முற்போக்கு என்ற சொல்லின் மதிப்பையே கெடுத்துவிடும்.

முடிவுரை

மேற்கண்ட மூன்று கறைகளில் ஏதேனும் ஒன்று ஒருவரிடம் இருக்குமேயானால், அவர் எவ்வளவு பெரிய திறமைசாலியாக இருந்தாலும், எந்தப் பெரிய தத்துவத்தைப் பேசினாலும் அவர் பொது வாழ்க்கைக்கு லாயக்கற்றவர்.

இயக்கங்கள் என்பவை மிக உயரிய அறவோட்டம் கொண்டவை; ஆனால் அந்த இயக்கங்களை வழிநடத்தும் மனிதர்கள் தார்மீகத் தூய்மையைக் கொண்டிருக்க வேண்டியது அவசியம். பாலியல் நேர்மை, பொருளாதாரத் தூய்மை, மற்றும் சாதியற்ற மனிதாபிமானம் - இந்த மூன்றும் இல்லாத எவரும் சமூக மாற்றத்தைக் கொண்டுவர முடியாது; மாறாக, அவர்கள் சமூகத்தின் நோய்க்கூறுகளாகவே நீடிப்பார்கள்

தமிழ்மணி

அரசியல்வாதிகள் ஏன் தொகுதி மாறி ஓடுகிறார்கள்?

சில ஆண்டுகளுக்கு முன்பு திருவள்ளூர் மாவட்டம் வெளியகரம் பள்ளியில் ஆங்கில ஆசிரியர் பகவான் இடமாற்றம் செய்யப்பட்டபோது, மாணவர்கள் அவர் கால்களைக் கட்டிக்கொண்டு கதறி அழுதனர்; ஊர் மக்களே திரண்டு வந்து "எங்கள் ஆசிரியர் இங்கேதான் இருக்க வேண்டும்" எனப் போர்க்குரல் எழுப்பினர். 

சில நேர்மையான அரசு அதிகாரிகளுக்கும் இத்தகைய உணர்ச்சிப்பூர்வமான பிரியாவிடைகள் கிடைப்பதை நாம் பார்த்திருக்கிறோம்.

ஆனால், இதே போன்ற ஒரு காட்சியை நமது அரசியல் களத்தில் பார்க்க முடிகிறதா?


1. ஆசிரியரின் 'அடையாளம்' vs அரசியல்வாதியின்  
'அந்நியப்படுதல்'

ஒரு ஆசிரியர் தன் மாணவர்களுக்குப் பாடத்தைத் தாண்டி, அவர்களிடம் வாழ்வியலில் மாற்றத்தை உண்டாக்குகிறார். அதனால்தான் அவர் மாற்றப்படும்போது அது அந்த மாணவர்களின் தனிப்பட்ட இழப்பாக உணரப்படுகிறது.

ஆனால், ஐந்தாண்டு காலம் ஒரு தொகுதியின் பிரதிநிதியாக இருக்கும் ஒரு சட்டமன்ற உறுப்பினர் (MLA), அடுத்த தேர்தல் வரும்போது மிகச் சாதாரணமாகத் தனது தொகுதியைத் துறந்துவிட்டு வேறு தொகுதிக்கு ஓடுகிறார். 

வானதி சீனிவாசன் அல்லது நயினார் நாகேந்திரன் போன்ற முக்கிய முகங்கள் பாதுகாப்பான தொகுதி தேடி ஓடுவதாக வரும் செய்திகள் இதற்குச் சான்று.

இங்கே எழும் கேள்வி இதுதான்: "எங்கள் பழைய சட்டமன்ற உறுப்பினரே எங்களுக்கு மீண்டும் வேண்டும்" என்று ஒரு தொகுதியிலாவது மக்கள் கொந்தளித்தது உண்டா?

2. கட்சி எடுக்கும் முடிவு... மக்கள் காட்டும் மௌனம்

இன்னும் ஒரு படி மேலே போய் பார்த்தால், ஒரு கட்சியின் தலைமை பழைய சட்டமன்ற உறுப்பினருக்கு அதே தொகுதியில் மீண்டும் போட்டியிட வாய்ப்பு மறுத்து, ஒரு புதிய நபரை வேட்பாளராக நிறுத்துகிறது.

அப்பொழுதும் கூட, "எங்களுக்கு புதிய வேட்பாளர் வேண்டாம், பழைய சட்டமன்ற உறுப்பினர்தான் மீண்டும் வேட்பாளராக இருக்க வேண்டும்" என்று எந்த மக்களும் வீதிக்கு வந்து போர்க்குரல் எழுப்புவதில்லை.

ஏன் இந்த மௌனம்?

ஏனெனில், அந்த ஐந்து ஆண்டுகளில் அந்தப் பிரதிநிதி மக்களுடன் எத்தகைய இதயப்பூர்வமான உறவையும் ஏற்படுத்திக்கொள்ளவில்லை என்பதுதான் நிதர்சனம். மக்கள் பிரதிநிதிகள் என்பவர்கள் இன்று 'மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்' என்பதைவிட, 'கட்சித் தலைமைகளால் திணிக்கப்பட்டவர்களாகவே' இருக்கிறார்கள். 

ஒரு வேட்பாளர் மாறும்போது மக்கள் அதை ஒரு கட்சியின் நிர்வாக மாற்றமாகப் பார்க்கிறார்களே தவிர, உணர்வுப்பூர்வமான இழப்பாகப் பார்ப்பதில்லை.

3. 'பாதுகாப்பான தொகுதி' தேடி ஓட்டம்

தனது தொகுதியில் உண்மையாகவே அடிப்படை மாற்றங்களைக் கொண்டுவந்த ஒரு பிரதிநிதி, ஏன் வேறு தொகுதிக்கு ஓட வேண்டும்? தன் தொகுதி மக்களின் மீது அவருக்கு நம்பிக்கை இருந்தால், அவர் அங்கேயே நின்று மீண்டும் வெல்லத் துணிய மாட்டாரா?

ஒரு சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மாறுகிறார் என்பதே, அவர் அந்தத் தொகுதிக்குச் செய்த வேலைகளின் மீது அவருக்கே நம்பிக்கை இல்லை என்பதற்கான ஒப்புதல் வாக்குமூலம். 

"நான் இங்கே வேலை செய்யவில்லை, அதனால் மக்கள் எனக்குப் பாடம் புகட்டுவார்கள்" என்ற பயமே அவர்களைப் பாதுகாப்பான வேறு இடங்களைத் தேடி ஓட வைக்கிறது.

4. எங்கே போனது அந்தப் 'போர்க்குரல்'?

ஆசிரியருக்காகக் கண்ணீர் விடும் மாணவர்கள் இருக்கும் அதே சமூகத்தில்தான் நாமும் இருக்கிறோம். ஆனால், அதே சமூகம் தன் பிரதிநிதி மாறுவது குறித்துக் கவலைப்படாமல் இருப்பதற்குக் காரணம் - மக்கள் அவர்களைத் தங்களின் 'நலன் விரும்பிகளாக'ப் பார்ப்பதில்லை; மாறாக, ஐந்து ஆண்டுக்கு ஒருமுறை வரும் 'தேர்தல் ஒப்பந்ததாரர்களாகவே' பார்க்கிறார்கள்.

முடிவுரை

அரசியல்வாதிகள் வெறும் கட்சிப் பிரதிநிதிகளாக' மட்டுமே இருக்கிறார்கள், 'மக்களின் பிரதிநிதிகளாக' மாறுவதில்லை. ஒரு ஆசிரியர் தன் பணியால் மாணவர்களின் இதயத்தில் இடம்பிடிப்பது போல, ஒரு சட்டமன்ற உறுப்பினர் மக்களின் இதயத்தில் இடம்பிடிக்கத் தவறுகிறார்.

ஒரு சட்டமன்ற உறுப்பினரின் இடமாற்றத்திற்காக அந்தத் தொகுதி மக்கள் வீதியில் இறங்கிப் போராடும் நாள் வந்தால்தான் இந்திய ஜனநாயகம் அதன் உண்மையான இலக்கை எட்டியுள்ளது என்று சொல்லலாம். அதுவரை, இந்தத் தொகுதி மாற்றங்கள் அனைத்தும் அரசியல் பிழைப்புவாதத்தின் அடையாளங்களே!

ஊரான்

Monday, 23 March 2026

'தாய்மாமன் சீர்': தமிழ்ப் பண்பாடா? அல்லது பெண்களின் சொத்துரிமையைப் பறிக்கும் சதிவலையா?

சமீபத்தில் செங்கல்பட்டில் நடைபெற்ற மகளிர் தின விழாவில் (மார்ச் 2026), தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அவர்கள் ஆற்றிய உரை பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. தொண்டர்களின் குடும்பங்களுக்கு தான் ஒரு 'தாய்மாமனாக' இருந்து 'சீர்செனாதிகள்' செய்வேன் என்றும், பெண்களுக்குத் தங்க மோதிரங்களை வழங்கியும் அவர் ஒரு நெகிழ்ச்சியான பிம்பத்தை உருவாக்க முயன்றுள்ளார்.

ஆனால், இந்த 'தாய்மாமன் சீர்' என்ற சொல்லாடலுக்குப் பின்னால் ஒளிந்திருக்கும் கசப்பான உண்மையை நாம் உரக்கப் பேச வேண்டிய தருணம் இது.


'சீர்' என்பது உரிமையா? அல்லது பிச்சையா?

நீண்ட காலமாக சொத்துடைமைச் சமூகத்தில் 'தாய்மாமன் சீர்' ஒரு பெருமித அடையாளமாகவே சித்தரிக்கப்பட்டு வருகிறது. ஒரு பெண் திருமணத்தின்போதோ அல்லது அவள் பிள்ளைகளின் விசேஷங்களின்போதோ அண்ணன்-தம்பிகள் செய்யும் உதவிகளை 'தமிழர் பண்பாடு' என்று முட்டுக்கொடுத்துக் கொண்டாடுகிறோம்.

உண்மையில், இதன் உள்ளார்ந்த அரசியல் மிகக் கொடியது. பெண்களுக்குச் சேர வேண்டிய பூர்வீகச் சொத்தில் சரிபாதியைக் கொடுக்காமல் ஏமாற்றுவதற்காக உருவாக்கப்பட்ட ஒரு 'கைமாறு' (compensation) தான் இந்தச் சீர்.

"லட்சக்கணக்கில் பெறுமானமுள்ள நிலத்தையும் சொத்தையும் அபகரித்துக் கொண்டு, சில ஆயிரங்களில் சீர் செய்துவிட்டு 'தாய்மாமன்' என்று மார்தட்டிக் கொள்வது ஒரு சமூக முரண்பாடாகப் பார்க்கப்பட வேண்டியதல்லவா?"

சட்டமும் 'சீர்' அரசியலும்

பெண்களுக்குச் சொத்தில் சம உரிமை உண்டு என்ற சட்டம் வந்து பல தசாப்தங்கள் கடந்துவிட்டன. உச்ச நீதிமன்றமே “பிறப்பால் பெண் பிள்ளைகளுக்குச் சொத்தில் சம பங்கு உண்டு” என்று ஆணித்தரமாகக் கூறிவிட்டது.

இத்தகைய நவீன யுகத்தில், இன்னும் பழைய நிலப்பிரபுத்துவக் காலத்து 'தாய்மாமன்' பிம்பத்தைக் கட்டியமைப்பது என்பது பெண்களைச் சுதந்திரமான மனிதர்களாகப் பார்க்காமல், ஆண்களின் தயவில் வாழும் 'ஆதரவற்றவர்களாக' சித்தரிப்பதாகும். ஒரு தங்க மோதிரமோ, சில பரிசுப் பொருட்களோ ஒரு பெண்ணின் வாழ்நாள் உரிமையான சொத்துரிமைக்கு ஒருபோதும் ஈடாகாது.

விஜய்யின் அரசியல் நகர்வு: ஒரு விமர்சனம்

விஜய் தனது தனிப்பட்டப் பிரச்சினைகளைத் தாண்டி மக்கள் நலனே முக்கியம் என்று கூறுகிறார். ஆனால், மக்கள் நலன் என்பது வெறும் 'சர்ப்ரைஸ்' பரிசுகளில் இல்லை.

உரிமை vs சலுகை: பெண்களுக்குத் தேவைப்படுவது அரசியல், சட்ட மற்றும் பொருளாதார ரீதியிலான சம உரிமை (Rights). யாரோ ஒரு 'தாய்மாமன்' வழங்கும் சலுகைகள் (Charity) அல்ல.

பிற்போக்குத்தனத்திற்கு முட்டுக்கொடுத்தல்: “என் பிள்ளைக்கு தாய்மாமன் விஜய் தான்” என்று உணர்ச்சிவசப்படும் தொண்டர்கள் கவனிக்க வேண்டியது ஒன்றுதான் — இந்தத் தாய்மாமன் பிம்பம், பெண்களைச் சொத்துரிமை கோரவிடாமல் தடுக்கும் ஒரு உளவியல் தடையாகவே செயல்படுகிறது.

முடிவுரை

தாய்மாமன் சீர் என்பது பெண்களின் சொத்துரிமையை மறைக்கும் ஒரு சமூக நடைமுறையாகப் பார்க்கப்பட வேண்டிய சமூக முரண்பாடு. சொத்தில் பங்கு கொடுக்காமல் அக்கா-தங்கைகளைச் சமாதானப்படுத்த முன்னோர்கள் கையாண்ட தந்திரம். அதை இன்றைய நவீன அரசியலில் 'மக்களுக்கான ஆதரவு' என்று சந்தைப்படுத்துவது அபத்தமானது.

பெண்களுக்குத் தேவைப்படுவது தற்காலிகமான தங்க மோதிரங்கள் அல்ல; அவர்கள் காலடியில் இருக்க வேண்டிய நிரந்தரமான நிலமும், பொருளாதாரச் சுதந்திரமுமே. சீர் செய்யும் தாய்மாமன்கள் அல்ல, சொத்துரிமையை மதிக்கும் சமூகமே பெண்ணுரிமையின் உண்மையான அடையாளம்.

"சீர் கொடுக்கும் தாய்மாமன் அல்ல, உரிமை வழங்கும் சமூகம்தான் பெண்ணின் உண்மையான உறவு!"

தமிழ்மணி 

Sunday, 22 March 2026

ஒரு படைப்பின் மீது எதிர்மறை விமர்சனங்கள் வைக்கலாமா?

ஒரு படைப்பாளி தனது நீண்டகால அனுபவம் மற்றும் ஆழ்ந்த தேடல்களை முதலீடாகக் கொண்டுதான் ஒரு படைப்பைச் செதுக்குகிறான்.

அந்தப் படைப்பு உருவான சூழலும், அதற்காக அவன் செலவிட்ட உழைப்பும், அவனது அக உலகச் சிந்தனையும் மற்றொருவருக்கு முழுமையாகப் புரிய வாய்ப்பில்லை.

அப்படியிருக்க, ஒரு படைப்பின் மீது வைக்கப்படும் எதிர்மறை விமர்சனங்கள் எந்த வகையில் நியாயமானவை? இது குறித்த ஒரு தர்க்கரீதியான தேடல் இது.

தேவைகளின் முரண்பாடு

ஒரு படைப்பு பொதுவெளியில் வெளியிடப்படும் போது, அது மற்றவர்களின் ஏதோ ஒரு தேவைக்காகத்தான் பகிரப்படுகிறது. அதேபோல, ஒரு வாசகரும் ஏதோ ஒன்றைத் தேடித்தான் ஒரு படைப்பை வாசிக்கிறார்.
  • சங்கமம்: படைப்பாளியின் வெளிப்பாடும், வாசகரின் தேவையும் ஒரு புள்ளியில் இணையும் போது அங்கே பாராட்டு பிறக்கிறது.
  • முரண்பாடு: எப்போது வாசகரின் எதிர்பார்ப்பும், படைப்பாளியின் கருத்தும் வெவ்வேறு திசைகளில் பயணிக்கிறதோ, அங்கேயே எதிர்மறைக் கருத்துகள் முளைக்கின்றன.

விமர்சனமா? அல்லது ஐயமா?

படைப்பாளியின் ஒட்டுமொத்த அனுபவ அறிவோ அல்லது அவர் கையாண்ட தரவுகளின் ஆழமோ விமர்சனம் செய்பவருக்கு முழுமையாக இருக்க முடியாது. ஓரளவுக்கு இருக்கலாமே ஒழிய, அந்தப் படைப்பின் உட்கரு ரகசியங்கள் வாசகருக்குத் தெரிய வாய்ப்பில்லை.

இந்தச் சூழலில், தனக்கு உடன்பாடில்லாத ஒரு கருத்தை உடனே 'எதிர்மறை விமர்சனமாக' முன்வைப்பது முறையா? அல்லது அதை சப்பி ஒரு 'ஐயமாக' எழுப்புவது முறையா?

1.விமர்சனம் என்பது ஒரு தீர்ப்பு: "இது தவறு" என்று ஒரு முடிவை அறிவிப்பது. இது சில நேரங்களில் படைப்பாளியின் உழைப்பைச் சரியாகப் புரிந்துகொள்ளாமல் விடக்கூடும்.

2.ஐயம் என்பது ஒரு உரையாடல்: "இந்த இடத்தில் உங்கள் தரவு எதை அடிப்படையாகக் கொண்டது? என்னால் இதைப் புரிந்துகொள்ள முடியவில்லை, விளக்க முடியுமா?" என்று வினவுவது.

பண்பட்ட வாசகரின் அடையாளம்

ஒரு படைப்பை அணுகுவதில் 'ஐயம் எழுப்புவதே' மிகச்சிறந்த பண்பு. ஏனெனில்:
  • அது படைப்பாளியின் உழைப்பிற்குத் தரும் குறைந்தபட்ச மரியாதை.
  • வாசகருக்கும் படைப்பாளிக்கும் இடையே ஒரு ஆரோக்கியமான 'உரையாடலை' (Dialogue) அது உருவாக்கும்.
  • தவறான புரிதல்களைக் களைந்து, புதியதொரு தெளிந்த அறிவை நோக்கி இருவரையும் அழைத்துச் செல்லும்.
முடிவுரை

திறமை ஒரு படைப்பாளியை உலகிற்கு அடையாளம் காட்டலாம்; ஆனால், ஒரு படைப்பின் பின்னாலுள்ள உழைப்பை மதிக்கும் பண்பே, அந்தப் படைப்பை முழுமைப்படுத்துகின்றன.

விமர்சனம் என்பது ஒரு பூட்டிய கதவாக இல்லாமல், உண்மையை நோக்கித் திறக்கும் சாவியாக இருக்க வேண்டும்.

அப்பொழுதுதான் ஒரு படைப்பும், ஒரு வாசகரும் சேர்ந்து அறிவை உருவாக்க முடியும்.

வாசகர்களே... ஒரு படைப்பை அதன் குறைகளுக்காக நிராகரிப்பதை விட, அதன் பின்னாலுள்ள உழைப்பைப் புரிந்துகொள்ள முயல்வதே ஒரு அறிவுச்சமூகத்தின் அடையாளம்!

தமிழ்மணி

Saturday, 21 March 2026

முகமூடியின் பின்னால்!


கலை —
ஒரு தூய ஆறு!
ஆனால்,
சில கரங்கள்
அதைத் தொடும் போது
அந்த நீர்கூட அழுக்காகி விடுகிறது!

சொல்லடுக்குகளால்
மேடைகளை அதிரவைப்பவன்,
வாழ்க்கைப் பாதையில்
தறிகெட்டுத் தடுமாறுகிறான்.

கருணை சொட்டும் கதைகள்
அவனது உதடுகளில் மலர்கின்றன;
ஆனால்
அந்தச் சொற்களே
அவனது வக்கிரங்களுக்கு
மெல்லியக் கவசமாகின்றன.

கவிதையில் வழியும்
கண்ணீர்த் துளிகள் —
சில நேரங்களில்
குற்றங்களை மறைக்கும்
வண்ணக் கலவைகள்.

ஓவியத்தின் கோடுகள்
அழகை வரையலாம்;
ஆனால்
அவன் உள்ளத்தின் கோடுகளோ
அழுக்கை வெளிப்படுத்தலாம்!

திரையில்
நாயகனாய் ஒளிரும் ஒருவன்
உண்மை வாழ்க்கையில்
ஒரு வீழ்ந்த மனிதன் ஆகலாம்!

மக்களே —
ஒளியை மட்டும் பார்க்காதீர்.
அதன் பின்னாலுள்ள
இருளையும்
ஒருமுறை பாருங்கள்!

பொருளாதாரக் குற்றங்களில்
சமூகத்தைச் சுரண்டுபவனும்,
பாலியல் வேட்டையில்
புரளுபவனும் —
எவ்வளவு பெரிய கலைஞனாக இருந்தாலும் 
அவன் நாயகன் அல்ல;
வரலாற்றில் ஒரு கரும்புள்ளி!

நல்லவன் யார்?
நயவஞ்சகன் யார்?
சமுதாயக் கண்ணாடியை
துடைத்துப் பாருங்கள்!

புறந்தள்ளப்பட வேண்டியவர்களை
போற்றத் தொடங்கினால்
தூய்மையான கலைகூட
ஒருநாள்
தீயாய் எழுந்து
தன்னைத்தானே எரித்துக் கொள்ளும்!

விழிப்பாய் இருப்போம்!
திறமை
ஒரு மனிதனை உயர்த்தலாம்;
ஆனால்,
தனிமனித ஒழுக்கமே
மனித வாழ்வின்
உண்மையான அடித்தளம்!

தமிழ்மணி

Thursday, 19 March 2026

மரணங்களில் மலர் மாலை அஞ்சலி அவசியமா?

மரணத்தின் மௌனத்தை விட, அந்த மரணத்திற்குப்பின் நாம் செய்யும் சடங்குகளின் இரைச்சல் இன்று பெருகிவிட்டது. ஒரு மனிதன் பணக்காரனோ ஏழையோ, நல்லவனோ கெட்டவனோ, இளைஞனோ முதியவரோ - அவர் இறந்த பிறகு அவருக்குச் செலுத்தப்படும் அஞ்சலி என்பது 'டன்' கணக்கில் மாலைகள் குவியும் நிகழ்வாக மாறிப்போயிருப்பது ஒரு வேதனையான சமூக முரண்பாடு.


சடங்காக மாறிய அஞ்சலி

அஞ்சலி என்பது ஒரு மனிதனின் இழப்பிற்குச் செலுத்தும் மனமார்ந்த மரியாதை. இயல்பாகக் கைகூப்பி ஒரு வணக்கம் செலுத்தியோ, கொள்கை வீரர்களுக்குச் செவ்வணக்கம் செலுத்தியோ அல்லது ஒரு நிமிடம் மௌனமாக நின்றோ அந்த மரியாதையைச் செய்ய முடியும். 

ஆனால், இன்று கையில் ஒரு மாலையோடு செல்வது என்பது ஒரு கட்டாயச் சடங்காக (Ritual) மாற்றப்பட்டுவிட்டது. அந்த மாலையின் அளவைப் பொறுத்தே அந்த மனிதருக்கான மரியாதை அளவிடப்படுகிறது என்ற எண்ணமே எவ்வளவு பெரிய அபத்தம்!

மலர் மாலைகள் அணிவிப்பதும், மலர் தூவுவதும் இன்று ஒரு காட்சியாக, ஒரு பகட்டு நிகழ்வாக மாறிப்போனதால், அங்கே உண்மையான துயரப் பகிர்வு மங்கிப்போகிறது.

மாலைக்குப் பதிலாக நிதி: ஒரு நடைமுறைத் தீர்வு

ஒரு இறப்பு நிகழும்போது, மருத்துவச் செலவு, இறுதிச் சடங்கு, வருமான இழப்பு என்கிற பாதிப்பு அந்தக் குடும்பத்தை நிலைகுலையச் செய்கிறது.
அஞ்சலிக்காக வாங்கப்படும் இந்த மாலைகளுக்குச் செலவிடப்படும் தொகை கொஞ்ச நஞ்சமல்ல.

'மாலைக்குப் பதிலாக நிதி' என்ற ஒரு எளிய அறைகூவல் மூலம் சேரும் தொகை, பாதிக்கப்பட்ட அந்தக் குடும்பத்திற்கு ஒரு துணிச்சலான ஆதரவாக இருக்கும்.
உதவி தேவைப்படாத குடும்பமாக இருந்தால் கூட, அந்தத் தொகையை நலிந்தோர் நலனுக்குப் பயன்படுத்தலாம்.

சவப்பெட்டி மீது மாலைகளைச் சாத்திவிட்டுப் புகைப்படம் எடுத்துக் கொள்வதை விட, ஒரு குழந்தையின் கல்விக்கோ அல்லது ஒரு நோயாளியின் மருந்துக்கோ அந்தப் பணம் பயன்படுவதே அறிவார்ந்த செயலாகும்.

மறைமுகப் பாதிப்புகளும் மனித உழைப்பின் வீணடிப்பும்

இறுதி ஊர்வலத்தின் போது சாலைகளில் பிய்த்து எறியப்படும் மாலைகள் வெறும் குப்பைகள் மட்டுமல்ல; அவை ஆபத்துகளும் கூட. ஈரமான பூக்களும் நார் சுருள்களும் இருசக்கர வாகனங்கள் வழுக்கி விழக் காரணமாகின்றன. 

அதைவிடக் கொடுமை, வீதிகளில் வீசி எறியப்பட்ட அந்தப் பூக்களைக் கூட்டித் தள்ளும் தெருவாசிகளின் சாபமும், வசைச் சொற்களும் அஞ்சலி செலுத்தியவர்களின் காதுகளுக்கு எட்டாமலேயே காற்றில் கரைந்து போகின்றன.

பொருளாதார ரீதியாகப் பார்த்தால், மருந்து மற்றும் உணவுத் தேவைக்காக உற்பத்தி செய்யப்படும் பூக்களைத் தவிர, மற்ற அத்தனை பூக்களும் தேவையற்றவையே. ஒரு விவசாயியின் கடும் உழைப்பில் உருவான மலர்கள், சில மணி நேரங்களில் குப்பைகளாக மாறுவது சமூகப் பொருளாதார ரீதியாக ஒரு பெரிய வீணடிப்பு. இந்தப் பூக்களுக்காகச் செலவிடப்படும் மனித உழைப்பும் நீரும் 'விழலுக்கு இறைத்த நீர்' போலத்தான்.

முடிவுரை

மரணம் அனைவருக்கும் வரும். அப்போது நாம் செய்யும் சடங்குகள் நம்மைப் பற்றி என்ன சொல்ல வேண்டும்? "நான் பணத்தை விரயம் செய்தேன்" என்றா? அல்லது "நான் மனிதநேயத்துடன் நடந்தேன்" என்றா?

மரியாதை என்பது மனதிலிருந்து வர வேண்டியது; மலர்களிலிருந்து அல்ல. இறந்தவருக்குச் செய்யும் உண்மையான அஞ்சலி என்பது, அவர் விட்டுச் சென்ற குடும்பத்திற்குத் தோள் கொடுப்பதிலும், அவர் வாழ்ந்த நற்பண்புகளைக் கடைப்பிடிப்பதிலுமே உள்ளது. 

மாலைகளைக் குவித்துச் சுற்றுச்சூழலைச் சீரழிப்பதைக் கைவிட்டு, மனிதர்களை உயர்த்தும் ஆக்கப்பூர்வமான பழக்கத்தை நாம் வளர்த்தெடுக்க வேண்டும்.

“பூக்களுக்குப் பதிலாக நிதி உதவி; சடங்குக்குப் பதிலாக மனித உணர்வு – இதுவே இன்றைய காலத்தின் அறம்”.

ஊரான்

தொடர்புடைய பதிவுகள்

Sunday, 15 March 2026

ஒரு விரல் புரட்சி ஊழலை ஒழிக்குமா?

“ஊழலை ஒழிப்பேன்” என்று முழங்கி ஆட்சிக்கு வந்தவர்கள் வரலாற்றில் பலர். ஆனால் அவர்களில் யாராவது உண்மையில் ஊழலை ஒழித்திருக்கிறார்களா? வரலாறு அப்படி சொல்லவில்லை.

மாறாக, அதிகாரம் கைக்கு வந்தவுடன் அவர்களும் அதே ஊழல் சுழலில் மூழ்கிப்போனதையே நாம் மீண்டும் மீண்டும் பார்த்திருக்கிறோம்.
இதற்கு தனிநபர் ஒழுக்கக் குறைவு மட்டுமே காரணமல்ல. நாம் வாழும் சமூக-பொருளாதார அமைப்பே கோளாறானது.

இன்றைய அரசியல் அமைப்பில், கட்சிப் பதவிகளை வைத்துக்கொண்டே முறைகேடாகச் செல்வம் சேர்க்கும் ஆற்றல் பலருக்கும் உள்ளது. இவர்களிடம் அரசியல் அதிகாரமும் சேர்ந்து கொண்டால், ஊழல் பெருகுவது தவிர்க்க முடியாததாகி விடுகிறது.


ஊழலின் வேர் எங்கே?

ஒரு மனிதன் எதற்காக ஊழல் செய்கிறான்?
“எனக்கும் என் பிள்ளைகளுக்கும் பின்னால் சொத்து இருக்க வேண்டும்” என்ற பயமும் பேராசையும்தான் அதன் அடிப்படை காரணம்.

எவ்வளவு வேண்டுமானாலும் சொத்து சேர்க்கலாம் என்ற உரிமை (தனிச்சொத்துரிமை) இருக்கும் வரை, எந்தக் கொம்பன் ஆட்சிக்கு வந்தாலும் ஊழலை முழுமையாக ஒழிக்க முடியாது.

மாற்றத்திற்கான வழிமுறைகள்

1.நிலமும் பொன்னும் அரசின் கட்டுப்பாட்டில்

மண்ணையும் (நிலம்), பொன்னையும் (தங்கம்) தனிநபர்கள் வாங்கவோ விற்கவோ முடியாபடி இருந்தால், பெரும்பாலான ஊழல்களுக்கு அடிப்படையாக இருக்கும் பதுக்கல் தானாகவே குறையும்.
நில விற்பனை இல்லையெனில் ரியல் எஸ்டேட் ஊழலுக்கு இடமிருக்காது. தங்கம் பதுக்க முடியாத நிலை ஏற்பட்டால் கறுப்புப் பணம் புழங்குவற்கும் வழியில்லை.

2.அடிப்படைத் தேவைகளை அரசு உறுதி செய்ய வேண்டும்

ஒவ்வொரு மனிதனுக்கும் தேவையான உணவு, வீடு, கல்வி, மருத்துவம் ஆகியவற்றை அரசே உறுதி செய்ய வேண்டும். அதே சமயம், அதற்கு மேல் அளவில்லாத சொத்துச் சேர்க்கும் வாய்ப்புகளை கட்டுப்படுத்த வேண்டும்.

சேர்த்து வைக்க முடியாத சூழல் உருவானால், ஊழல் செய்ய வேண்டிய உந்துதலும் இல்லாமல் போகும்.

3.உழைப்பவனுக்கே உரிமை

நாட்டில் உள்ள முக்கிய உற்பத்தித் துறைகள் அரசின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும்.

“உழைத்தால்தான் உணவு” என்ற நிலை உருவானால், உழைப்பின் மதிப்பு உயரும்; பதுக்கிப் பணம் சேர்ப்பது குறையும்.

முடிவுரை

வெறும் மேடைப் பேச்சாலும், தேர்தல் வாக்குறுதிகளாலும் ஊழலை ஒழித்துவிட முடியாது.
சொத்துச் சேர்க்கும் இந்த அமைப்பை மாற்றாமல், ஆள்வோரை மட்டும் மாற்ற முயல்வது அறிவுடமை அல்ல.

சொத்து சேர்ப்பதை கட்டுப்படுத்தும் ஒரு பொதுவுடைமை நோக்குடைய சமூக அமைப்பு உருவானால்தான் ஊழலை உண்மையாகவே ஒழிக்க முடியும்.

அதற்கான முன்னெடுப்புகளே நீண்டகால நோக்கில் பயனளிக்கும்.

யாருக்கு வாக்களிப்பது? 

கம்யூனிஸ்டுகள் பலவீனமாயுள்ள இன்றைய சூழலில் பொதுவுடைமைச் சமூகம் உடனடி சாத்தியமா என்ற ஐயம் உங்களுக்குள் எழுவது இயல்புதான். 

பிறகு என்ன செய்வது?

சனாதனத்தை நிறுவத் துடிக்கும் ஆர்எஸ்எஸ்-பாஜக ஒன்றிய அரசை அதிகாரத்திலிருந்து அகற்றுவதும், இந்துத்துவ மதவாத சக்திகளை ஒழித்துக் கட்டுவதும் நமது உடனடித் திட்டமாக இருக்க வேண்டும். 

அதேவேளையில், தமிழ்நாடு அரசு மேற்கொள்ளும் ஒருசில மக்கள் நலத் திட்டங்களுக்கு முட்டுக்கட்டை போடும் பாஜகவையும், அதற்கு ஒத்தூதும் அதன் நேரடி மற்றும் மறைமுகமான ஆதரவு கட்சிகளையும் தோற்கடிப்பது ஒன்றுதான் இன்றையத் தேவையாக உள்ளது. 

ஒரே வரியில் சொன்னால், திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் மீது நமக்கு ஆயிரம் கருத்து வேறுபாடு இருந்தாலும், அந்தக் கூட்டணியை வெற்றி பெறச் செய்வதன் மூலமாகத்தான் குறைந்தபட்ச ஜனநாயக உரிமைகளையாவது தக்க வைத்துக் கொள்ள முடியும்!

தமிழ்மணி

Sunday, 8 March 2026

மார்க்சியக் கோட்பாடும், அம்பேத்கர்-பெரியார் சிந்தனைகளும் இணையும் புள்ளி எது?

முன்னுரை:

இந்தியச் சமூகத்தைப் புரட்டிப்போட முனையும் எந்தவொரு இயக்கமும் சந்திக்க வேண்டிய அடிப்படை வினா: "இந்தியாவின் எதார்த்தம் என்ன?". 

ஐரோப்பியச் சூழலில் உருவான மார்க்சியம் வர்க்க முரண்பாடுகளைத் துல்லியமாக விளக்குகிறது. ஆனால், இந்தியாவோ வர்க்கத்தோடு 'சாதி' என்கிற கண்ணுக்குத் தெரியாத இரும்புச் சங்கிலியால் பிணைக்கப்பட்டுள்ளது. இந்தச் சூழலில், மார்க்சிய-லெனினியக் கோட்பாட்டை (Theory), அம்பேத்கர் மற்றும் பெரியார் ஆகியோரின் புரட்சிகரக் கருத்தியல்களுடன் (Ideology) இணைப்பதே முழுமையான விடுதலையைத் தரும்.

1. கோட்பாடு vs கருத்தியல்: ஒரு தத்துவத் தெளிவு

மார்க்சியம்-லெனினியம் என்பது ஒரு உலகளாவிய அறிவியல் கோட்பாடு. அது வரலாற்றின் இயக்கவியலைப் பொருள்முதல்வாத அடிப்படையில் விளக்குகிறது. மாவோ சீனாவில் மார்க்சியத்தைச் சீனச் சூழலுக்கு ஏற்பத் தகவமைத்தபோது அதை "மாவோ சிந்தனை" என்றே அழைத்தனர். அது ஒரு நடைமுறை உத்தி.

அதேபோல, இந்தியாவில் அம்பேத்கர் மற்றும் பெரியார் முன்வைத்தவை கருத்தியல்கள் அல்லது புரட்சிகரச் சிந்தனைகள். மார்க்சியக் கோட்பாட்டை இந்திய மண்ணில் விதைக்க இவர்களின் சிந்தனைகள் என்கிற 'ஏர்' அவசியம். இவர்களை உள்வாங்காமல் இங்குப் பொதுவுடமைப் புரட்சி சாத்தியமில்லை. 

அதே வேளையில், இவர்களின் சிந்தனைகளை மட்டும் நடைமுறைப்படுத்தினால் அது சமூகத்தில் சில சீர்திருத்தங்களைத் தருமே ஒழிய, சுரண்டல் கட்டமைப்பை வேரோடு புரட்டிப்போட முடியாது.

2. சாதி ஒழிப்பு: மதம் மற்றும் பொதுவுடமை

சாதியை எப்படி ஒழிப்பது என்பது குறித்து இதுவரை யாரும் ஒரு உடனடிச் சூத்திரத்தைத் தரவில்லை. ஏனெனில், சாதி என்பது ஒரு உற்பத்தி முறையோடு பிணைந்தது.

  • மதமே காப்பரண்: இந்து மதம் இருக்கும் வரை சாதி இருக்கும். நலம் மாறினாலும், மதம் மாறினாலும் சாதித் தொடரும் என்பதற்கு இந்தியக் கிறித்தவம் ஒரு சாட்சி.
  • தீர்வு: மதம் என்பது ஒடுக்கப்பட்டவர்களின் பெருமூச்சு. இந்து மதம் இல்லாத ஒரு மதமற்ற சமூகத்தில்தான் சாதி முழுமையாக ஒழியும். அது ஒரு முழுமையான பொதுவுடமைச் சமூகத்தில்தான் சாத்தியம்.

3. போராட்டமே வழிமுறை

சாதியை ஒழித்த பிறகுதான் வர்க்க ஒற்றுமை என்பது ஒரு கற்பனையான வாதம். யதார்த்தத்தில், சாதிய ஏற்றத்தாழ்வுகள் மற்றும் பாகுபாடுகளுக்கு எதிரான அன்றாடப் போராட்டமே சாதி ஒழிப்புக்கான போராட்டமாகும். தீண்டாமைக்கு எதிராகவும், சமூகப் புறக்கணிப்புக்கு எதிராகவும் மக்களைத் திரட்டும்போதே அவர்களுக்குள் வர்க்க உணர்வு பிறக்கிறது. இந்தச் சாதி ஒழிப்புப் போராட்டம் என்பது மார்க்சியத்தோடு இணைந்த ஒரு வர்க்கப் போராட்டமே தவிர வேறல்ல.

4. இணையும் புள்ளி எது?

மார்க்சியமும், அம்பேத்கர்-பெரியார் சிந்தனைகளும் இணையும் புள்ளி என்பது "சுரண்டலற்ற, படிநிலைகளற்ற சமத்துவச் சமூகம்" ஆகும்.

  • மார்க்சியம்: பொருளாதார அடிமைத்தனத்திலிருந்து (Capitalism) விடுதலை அளிக்கிறது.
  • அம்பேத்கர் & பெரியார்: சமூக மற்றும் பண்பாட்டு அடிமைத்தனத்திலிருந்து (Caste & Religion) விடுதலை அளிக்கிறார்கள்.

5. தரவுகளும் யதார்த்தமும்

இந்தியாவில் 5% ஆதிக்கச் சாதியினர் நாட்டின் 45% செல்வத்தைக் கொண்டுள்ளனர். பட்டியல் மற்றும் பழங்குடியினரில் 80% பேர் நிலமற்ற கூலிகளாக உள்ளனர். இங்குப் பொருளாதார அடிமைத்தனமும் சாதிய அடிமைத்தனமும் ஒன்றே. நில விநியோகம், சம ஊதியம் மற்றும் அதிகாரப் பகிர்வுக்கான வர்க்கப் போராட்டமே சாதி ஒழிப்பிற்கான முதற்படியாகும்.

முடிவுரை:

சாதி ஒழிப்பு என்பது ஒரு நீண்டகாலத் தத்துவப் போராட்டம். இந்து மதத்தின் பிடியிலிருந்து விடுபட்ட, உழைப்பைத் தூர்வாரும் ஒரு பொதுவுடமைச் சமூகமே சாதியற்ற உலகிற்கான ஒரே திறவுகோல். வர்க்கப் போர், சாதி ஒழிப்பு, பண்பாட்டு விடுதலை - இம்மூன்றும் இணையும் புள்ளியில்தான் இந்தியச் சமூகத்தைப் புரட்டிப்போடும் உண்மையான மாற்றம் நிகழும்.

தமிழ்மணி