Sunday, 22 September 2024

மார்க்சியவாதிகளே! மாணவர்களாய் மாறுங்கள்!

மார்க்சியம் பேசும் எல்லோருமே  கம்யூனிஸ்ட் அறிக்கை, மூலதனம், லெனின் தேர்வு நூல்கள், தேசிய இனப் பிரச்சனை குறித்து ஸ்டாலின், மாவோவின் தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகள் என மூல நூல்களைத்தான் படிக்கின்றனர். 

ஓம்சின் மின்சார விதி,  பித்தாகரசின் கணித விதி, ஆர்க்கிமிடிஸின் மிதவை விதி என அறிவியலின் பலப்பல மூலவிதிகளைப் படிப்பவர்கள் அனைவருமே உலகம் முழுக்க ஒரே மாதிரியாகத்தான் புரிந்து கொள்கின்றனர், நடைமுறைப் படுத்துகின்றனர்.  ஆனால் மார்க்சிய மூல நூல்களைப் படிப்போருக்கு மட்டும் மாறுபட்டப் புரிதல்களும் நடைமுறைகளும்  இருப்பதற்குக் காரணம் என்ன? மார்க்சியம் ஒரு அறிவியல் இல்லையா? 


ஒன்று மார்க்சியம் படிப்போருக்கு மார்க்சிய விதிகள் புரியாமல் இருக்க வேண்டும் அல்லது புரிந்தாலும் தங்களின் விருப்பமே இதில் மேலோங்கி இருக்க வேண்டும். திருக்குறளை தங்கள் வசதிக்கேற்ப சங்கிகள் வேண்டுமென்றே திரித்துப் புரட்டுவதைப் போல மார்சியத்தையும் இவர்கள் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப புரட்டுகிறார்களோ என்றுதான் எண்ணத் தோன்றுகிறது.

இந்தியாவின் அரசியல் பொருளாதாரம் இன்று என்னவாக இருக்கிறதோ அது அதுவாகத்தான் இருக்கிறது. இதைப் புரிந்து கொள்வதிலும் மார்க்சியவாதிகள் வேறுபடுகிறார்களே, ஏன்? இந்தியாவின் அரசியல் பொருளாதரத்தில் பல உண்மைகள் இருக்க முடியாதே? ஒரு உண்மைதானே இருக்க முடியும்? அப்படி இருக்க மார்க்சியவாதிகளுக்கு மட்டும் பலநூறு புரிதல்கள் வருவது ஏன்? 

தான் நம்புவதுதான் (கடவுள்) உண்மை என நம்பும் ஒரு பக்தனுக்கும், தான் நம்புவதுதான் உண்மையான மார்க்சியம் என நம்பும் ஒரு மார்க்சியவாதிக்கும் என்ன வேறுபாடு?

மார்க்சியம் என்றால் இதுதான் மார்க்சியம் என்றும், இந்தியாவில் சமூக மாற்றம் இப்படித்தான் நடக்க வேண்டும் என்றும் ஒரு முன்முடிவை வைத்துக்கொண்டு, அதற்கான ஆதாரங்களைத்தான் மூல நூல்களில் இன்றைய மார்க்சியவாதிகள் தேடுகிறார்களோ என்றுகூட ஐயுறவேண்டி உள்ளது.

அதிகத் தரவுகள் கிடைக்கும் போதுதான் ஒரு சிக்கலுக்கான காரணங்களைக் கண்டறிந்து அதைத் தீர்க்கவும் முடியும் என்பது இன்றைய அறிவியல் அணுகுமுறை.

சிலர் மார்க்சிய நூல்களைக் கட்டுக் கட்டாகப் புதுப்பிக்கின்றனர். இரவு பகலாகச் சிலர் படிக்கின்றனர். பலர் வண்டி வண்டியாக எழுதிக் குவிக்கின்றனர். அப்படியானால் நிறையத் தரவுகள் கிடைக்கிறது என்றுதானே பொருள். தரவுகள் அதிகரிக்க அதிகரிக்க இந்தியப் புரட்சி குறித்தப் புரிதலில் ஒத்தக் கருத்தை நோக்கி நகருவதுதானே நடக்க வேண்டும்.

ஆனால், நடைமுறையில் இவர்கள் தரவுகளைத் தேடத் தேட
சிக்கல்கள் அதிகமாவதோடு கருத்து வேறுபாடுகளும் அதிகரித்து ஒற்றுமைக்குப் பதிலாக பிளவுகளே எஞ்சி நிற்கின்றன.

மார்க்சியம் பேசும் பலரும் ஏற்கனவே படித்த விவரங்களிலிருந்து ஒரு முடிவுக்கு வந்துவிட்டு, அந்த முடிவுக்கான ஆதாரங்களைத்தான் இவர்கள் மார்க்சிய மூலநூல்களில் தேடிக் கொண்டிருக்கின்றனர். தங்களுடைய முடிவுதான் அறுதியானது, இறுதியானது என்கிற இறுமாப்பும் இவர்களைத் தொற்றிக் கொள்வதால் இவர்கள் தங்களை மார்க்சிய அதிமேதாவிகளாகக் கருதிக் கொள்வதோடு, தங்களது முடிவோடு மாறுபடுகிறவர்களை ஓடுகாலிகள், சந்தர்ப்பவாதிகள், திருத்தல்வாதிகள் என வசைபாடி, நேற்று வரை தோழர்களாகப் பழகியவர்களிடம் பங்காளிச் சண்டைக்குத் தூபம் போடுவதோடு மார்க்சியவாதிகள் மேலும் மேலும் பிளவுபடுவதற்குக் காரணமாக அமைகின்றனர்.  

என்னைப் பொறுத்த வரையில் இந்தியாவில் மார்க்சியத்தில் கரை கண்டவர்கள் எவரும் இல்லை. எல்லோரும் மாணவர்கள்தான். ஆனால், ஒரு சிலரோ தங்களை ஆசிரியர்களாக, பேராசிரியர்களாகக் கருதிக் கொண்டு எல்லோருக்கும் மேலானவர்களாக தங்களை நிறுத்திக் கொள்கின்றனர். அந்த மார்க்சே மீண்டும் உயிர்த்தெழுந்து வந்தாலும் அவருக்கே இவர்கள் வகுப்பெடுக்கத் தொடங்கிவிடுவார்கள்.

எனவே, மார்க்சியவாதிகளே, மாணவர்களாய் மாறுங்கள். மார்க்சியம் பற்றிப் படருவதை யாராலும் தடுக்க முடியாது. மாணவர்களே எதையும் சாதிக்க வல்லவர்கள்.

தமிழ்மணி 

No comments:

Post a Comment