"கொலைக்களமாக மாறிவரும் சமூகச் சூழல்! இதற்கு முடிவே கிடையாதா?"
என்ற தலைப்பில் இன்று ஒரு கட்டரை வெளியிட்டிருந்தேன்
அந்தக் கட்டுரையை கீழ்கண்டவாறு முடித்திருந்தேன்.
"உள்ளாட்சி அமைப்புகளை நக்சல்பாரிகள் கைப்பற்றி, நேர்மையோடும் போர்க்குணத்தோடும் செயல்பட முன்வராதவரை, உள்ளூர் அளவில் பிழைப்புவாதிகளும் இரவுடிகளும் தலையெடுப்பதும், அதைத் தொடர்ந்து உள்ளூர் அதிகாரிகள் துணையுடன் ஊழல் மற்றும் சமூக விரோதச் செயல்களில் ஈடுபடுவதும், இதில் ஏற்படும் போட்டி மற்றும் மோதல்களில் படுகொலைகள் நடப்பதும் தொடரவே செய்யும்.
மக்களின் அன்றாடத் தேவைகளில் கவனம் செலுத்தி, மக்களோடு மக்களாக பயணிப்பதற்கு உள்ளாட்சி அமைப்புகளில் செயல்படுகின்ற அணுகுமுறை வெகுவாக உதவும் என்றே நான் கருதுகிறேன். இதன் போக்கில்தான் பிழைப்புவாதிகளின் பிடியிலிருந்து மக்களை மீட்டெடுத்து அரசியல் படுத்தவும் முடியும்.
மாறிவரும் இன்றைய அரசியல் சூழலில், இது குறித்த விவாதங்கள் அவசியமானவை என்றே கருதுகிறேன்"
மாறிவரும் இன்றைய அரசியல் சூழலில், இது குறித்த விவாதங்கள் அவசியமானவை என்றே கருதுகிறேன்"
whatsapp குழுவில் பகிர்ந்த போது ஒரு நண்பர் கீழ்க்கண்ட கேள்வி எழுப்பி இருந்தார்.
"நக்சல்பாரி என்பவர் யார்? அவர் கொள்கை(கள்) என்ன (என்னென்ன)?"
அதற்கான எனக்கு பதில் கீழே,
காரல் மார்க்ஸின் பொதுவுடமைக் கோட்பாடுகளை ஒட்டி, 1917 இல் ரஷ்யாவில் லெனின் தலைமையில் சோசலிசப் புரட்சி நடைபெற்றது. அதைத்தொடர்ந்து கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் கம்யூனிசப் புரட்சிகள் நடைபெற்றன. 1949 இல் சீனாவில் மாசேதுங்கின் (மாவோ) தலைமையில் சோசலிசத்துக்கு முந்தைய கட்டமான பொதுவுடைமை கோட்பாடுகளின் அடிப்படையிலான புதிய ஜனநாயகப் புரட்சி நடைபெற்றது.
இந்தியாவைப் பொருத்தவரை 1924 இல் இந்தியப் பொதுவுடமைக் கட்சி (CPI) தோன்றியது. இந்தக் கட்சி இந்தியாவில் அமைதி வழியில் சோசலிசப் புரட்சியை வலியுறுத்தியது. சீனாவில் நடைபெற்ற மக்கள் ஜனநாயக புரட்சியை ஒட்டி இந்த கட்சியில் இருந்த ஒரு சிலர், இந்தியாவிலும் அது போன்றதொரு மக்கள் ஜனநாயகப் புரட்சி நடத்த வேண்டும் என்று 1964 இல் இந்தியப் பொதுவுடமைக் கட்சியை (மார்க்சிஸ்ட்) -CPI(M) தோற்றுவித்தனர். அதே நேரத்தில் இவர்கள் மேற்குவங்க சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று மந்திரிசபையில் பங்கேற்றனர்.
நிலவுடமை பண்ணை ஆதிக்கச் சுரண்டல் கோலோச்சியச் காலம் அது. உழுபவனுக்கே நிலம் சொந்தபாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து இந்த கட்சியில் இருந்தவர்கள் மேற்குவங்க மாநிலம் டார்ஜிலிங் மாவட்டம், சிலிகுரி வட்டத்தில் உள்ள நக்சல்பரி என்ற கிராமத்தில் இருந்த நிலங்களைக் கைப்பற்றி ஏழை விவசாயிகளுக்கு உரிமையாக்கி அந்நிலங்களில் செங்கொடியை ஏற்றினர். அப்பொழுது மேற்கு வங்க உள்துறை அமைச்சராக இருந்த ஜோதிபாசு காவல்துறையை ஏவி அந்தப் போராட்டத்தைக் கடுமையாக ஒடுக்கினார்.
ஆனால், இந்த போராட்டம் நாடெங்கிலும் காட்டுத் தீயாய் பரவியது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து வெளியேறிவர்கள் சாரு மஜூம்தார் தலைமையில் 1967 இல் இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்- லெனினிஸ்ட்) - CPI(M-L) என்ற கட்சியைத் தோற்றுவித்தனர்.
சீனாவின் பாதையே நமது பாதை, இந்தியாவில் நீண்ட கால மக்கள் யுத்தம் என்ற போராட்ட முறையில் ஒரு புதிய ஜனநாயக அரசை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையோடு இந்தக் கட்சி செயல்பட்டது. ஆனால், அதே நேரத்தில் பண்ணையார்களையும் கந்துவட்டிக்காரர்களையும் படுகொலை செய்தனர். இரத்தத்தில் கை நனைக்காதவன் கம்யூனிஸ்டே அல்ல என்று முழுங்கும் அளவிற்கு இடது தீவிரவாதப் பாதையில் சென்றது. இத்தகைய படுகொலைகளைச் செய்வதன் மூலம் புரட்சியை சாதிக்க முடியாது, மாறாக ஒரு படையைக் கட்டி அரசுக்கு எதிராக போர் நடத்திதான் புரட்சி செய்ய வேண்டும் என்றும், படுகொலைகளுக்கு எதிரான கருத்துடையோர் கட்சியில் இருந்து வெளியேறி பல்வேறு பிரிவுகளாக பிளவுபட்டனர்.
இன்று அவர்கள் பல்வேறு குழுக்களாக செயல்படுகின்றனர். ஒரு சிலர் தேர்தல் அரசியலிலும் பங்கெடுத்து சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினராகவும் வருகின்றனர்.
ஆந்திராவில் செயல்படும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்) மட்டுமே கெரில்லாப் போராட்டம் நடத்தி வருகின்றனர். இது இந்தியாவில் தடை செய்யப்பட்ட கம்யூனிச அமைப்பாகும்.
நக்சல்பரி கிராமத்தில் நடைபெற்ற எழுச்சிக்குப் பிறகு 1967 இல் உருவான கட்சியின் பின்னணியில் செயல்படுபவர்களை அந்த கிராமத்தைக் குறிக்கும் வகையில் நக்சல்பாரிகள் என்று அழைக்கப்பட்டனர். அரசும், போலீசும் மற்ற கட்சியினரும் அந்தச் சொல்லை இழிவு படுத்த வேண்டும் என்பதற்காக 'நக்சலைட்' என்று அழைத்தனர்.
இத்தகைய வரலாற்றுப் பின்னணியைக் கொண்ட தமிழகத்தில் செயல்படும் ஒரு குழுவின் வெளிப்படையான மக்கள் கலை இலக்கியக் கழகத்தில்தான் நான் தீவிரமாக செயல்பட்டு வந்தேன்.
நக்சல்பாரி பின்னணியைக் கொண்டவர்கள் மக்களுக்குத் துரோகம் செய்ய மாட்டார்கள், நேர்மையாக செயல்படுவார்கள், அடக்கு முறைகளுக்கு அஞ்ச மாட்டார்கள் என்பது இன்றளவும் கடைபிடிக்கப்படுகின்ற நடைமுறை. ஒருவேளை சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக ஒரு சிலர் தவறு செய்தால் அவர்களை அந்த அமைப்பில் இருந்து வெளியேற்றி விடுவார்கள். பாரிய தவறு என்றால் தண்டனையும் வழங்குவார்கள்.
நக்சல்பாரி பின்னணி என்பது நாட்டுப்பற்று, நாட்டு மக்கள் நலனை மட்டுமே மையமாகக் கொண்டதொரு பாரம்பரியம்.
நக்சல்பாரி பின்னணியைக் கொண்ட இயக்கங்கள் பல்வேறு குழுக்களாக இருந்தாலும் அவர்களுடைய பொது நோக்கம் இந்தியாவில் ஒரு புதிய ஜனநாயக அரசை நிறுவி அதன் தொடர்ச்சியாக சோசலிச, பொதுவுடமை அமைப்பை நோக்கி முன்னேற வேண்டும் என்பதுதான். இதை அடைவதற்கான நடைமுறையில் கருத்து வேறுபாடுகள் இருப்பதால்தான் அவர்கள் பல்வேறு குழுக்களாக இருக்கிறார்கள்.
மார்க்சிய கோட்பாடுகளை ஏற்றுக் கொண்ட இயக்கங்கள் உலகமெங்கிலும் எல்லா நாடுகளிலும் செயல்படுகின்றன என்பது ஒரு கூடுதல் தகவல். ரஷ்யாவில் சோசலிச வீழ்ச்சிக்குப் பிறகு உலகம் எங்கிலும் பொதுவுடமை இயக்கங்கள் பலவீனமாக உள்ளன என்பதும் மறுக்க முடியாத உண்மை.
ஆனால், மனிதகுல வரலாற்று நோக்கில் புராதான பொதுவுடைமைச் சமுதாயம், ஆண்டான் அடிமைச் சமுதாயம், நிலவுடமைச் சமுதாயம், முதலாளித்து சமுதாயம், சோசலிச சமுதாயம் என்பது தவிர்க்க முடியாத ஒரு வரலாற்று காலகட்டம்.
உலகம் எங்கிலும் தற்போது நடப்பது முதலாளித்துவ சமுதாயம். இது தவிர்க்க முடியாமல் சோசலிச சமுதாயத்தை நோக்கி நகர்ந்தே ஆக வேண்டும். இது காலத்தின் கட்டாயமும் கூட.
மார்க்சியத்தின் மூல நூல்களைப் படித்தால் பொதுவுடமை குறித்த ஏராளமான விவரங்களைத் தெரிந்து கொள்ள முடியும்.
விரிவஞ்சி நான் மிக சுருக்கமாக பதிவிட்டிருக்கிறேன்.
நன்றி.
தமிழ்மணி
No comments:
Post a Comment