Thursday, 4 July 2024

பாட்டாளி மக்கள் கட்சிக்கு எதிர்காலம் உண்டா?

பாட்டாளி மக்கள் கட்சியினர், பெரியாரையும் மார்க்சையும் உயர்த்திப் பிடித்துப் பேசிய, எழுதிய காலம் ஒன்று உண்டு. 

இவை, பாட்டாளி மக்கள் கட்சியின் அன்றைய நாளேடான "தினப் புரட்சி" யில் பிரசுரிக்கப்பட்டன. பேராசிரியர் தீரன் இருந்த காலம் அது. நெய்வேலியில் ஒரே மேடையில் அவரோடு மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் சார்பாக நானும் பேச்சாளராக மேடை ஏறி இருக்கிறேன். ஆனால் இன்றோ, அண்ணாமலை போன்ற ஆர்எஸ்எஸ் காரர்கள் பாட்டாளி மக்கள் கட்சியின் மேடையில் ஏறுகிறார்கள். 

அன்று தீவிர இடதுசாரிகளோடு உறவாடிய பாட்டாளி மக்கள் கட்சி, இன்று தீவிர வலசாரிகளோடு ஒட்டிக்கொண்டுள்ளது?
ராமதாஸ் கூட எண்ணற்ற சீர்திருத்த திருமணங்களை நடத்தி வைத்திருக்கிறார். ஆனால் அன்புமணியோ அப்படி ஏதும் செய்வதாகத் தெரியவில்லை.

விடுதலை சிறுத்தைகள் கட்சியைப் போல வியாபித்திருக்க வேண்டிய பாட்டாளி மக்கள் கட்சி, இன்று, மாநில கட்சி என்கிற தகுதியையும் இழந்து நிற்கிறது. 

அன்புமணி தலை எடுத்த பிறகு, வேல்முருகனை வெளியேற்றினார்கள். இடதுசாரி எண்ணம் கொண்ட எண்ணற்றோர் பாட்டாளி மக்கள் கட்சியை விட்டு வெளியேறினார்கள். பாட்டாளி மக்கள் கட்சியை ஆதரித்த எண்ணற்ற பேராசிரியர்கள் ஒதுங்கிக் கொண்டார்கள்.

கொள்கை கோட்பாடுகளைக் குழிதோண்டிப்  புதைத்து விட்டு, பணத்திற்கும் பதவிக்கும் பேராசைப்பட்டு, பார்ப்பனியத்துடன் சகவாசம் கொண்டதனால் பாழும் கிணற்றுக்குள் தள்ளப்பட்டார்கள். 

பிழைப்பு வாதத்தை மட்டுமே நம்பி இருக்கும் ஒரு கட்சி, தமிழ் மாநில காங்கிரசைப் போல, தேமுதிக வைப் போல கெட்டு சீரழிந்து காணாமல் போகும் என்பதற்கு பாட்டாளி மக்கள் கட்சியே இன்றைய சான்று. அன்புமணியைப் போன்றவர்கள் அரசியலில் இருக்கும் வரை, வன்னியர் மக்களுக்கான தனி இட ஒதுக்கீடு என்பது கானல் நீரே!

போர்க்குணமிக்க போராளிகளால் மட்டுமே கோரிக்கைகளில் வெற்றி பெற முடியுமே ஒழிய, பிழைப்புவாத பச்சோந்திகளால் அல்ல என்பதை வன்னிய உழைக்கும் மக்கள் உணராத வரை அவர்களுக்கு விடிவேதும் இல்லை. 

ஒரு இயக்கத்திற்கு தொண்டர்கள் இருந்தால் மட்டும் போதாது, நல்ல தலைவர்கள் வேண்டும்.  வன்னியர் சாதி மக்கள் நல்ல தலைவரை எப்பொழுது அடையாளம் காணப் போகிறார்களோ அதுவரை அவர்கள் கூத்துகளையும் நாடகத்தையும்தான் பார்த்துக் கொண்டிருக்க வேண்டி வரும். 

தமிழ்மணி

No comments:

Post a Comment