Wednesday, 16 August 2023

நீங்கள் கூத்தாடிகளாக இருக்க விரும்புகிறீர்களா?

மக்கள் அதிகாரம் என்ற அமைப்பின் பெயரில், தமிழகத்தில் மூன்று குழுக்கள் செயல்படுகின்றன. 80% பேரைக் கொண்ட ராஜூ தலைமையிலான அணிதான் உண்மையான மக்கள் அதிகாரம் என்ற உண்மை தெரிந்தும்கூட, மற்ற இரண்டு சிறுபான்மை கோஷ்டிகளும் மக்கள் அதிகாரம் பெயரிலேயே செயல்படுவதால் குழப்பம்தான் நீடிக்கிறது. தோழர் ராஜூ தலைமையிலான அணியினர்தான் பெரும்பான்மை அணியினர் என்பது 13.08.2023 அன்று தஞ்சையில் நடைபெற்ற விவசாயிகள் விடுதலை முன்னணியின் பேரணியும் மாநாடும் மீண்டும் ஒருமுறை உறுதி செய்துள்ளது. 

எனவே, கூட்டு நடவடிக்கைகளுக்கு ஏற்பாடு செய்யும் பிற முற்போக்கு ஜனநாயக இயக்கங்கள், மக்கள் அதிகாரம் பெயரில் செயல்படும் சிறுபான்மை கோஷ்டிகளிடம் இதுகுறித்துக் கேள்விகளை எழுப்ப வேண்டும். சிறுபான்மை கோஷ்டிகளான வெற்றிவேல் செழியன் மற்றும் முத்துகுமார் கோஷ்டிகள் தங்களது அமைப்புப் பெயரை மாற்றிக் கொள்ளாதவரை அவர்களைக் கூட்டு நடவடிக்கைகளுக்கு அழைப்பதைத் தவிர்க்க வேண்டும். வேறு வழியே இல்லாத சூழலில் அவர்களை அழைக்கும் போது, குறைந்தபட்சம் மக்கள் அதிகாரம் (வெற்றிவேல் செழியன் பிரிவு), மக்கள் அதிகாரம் (முத்துக்குமார் பிரிவு)  என்றாவது பிரசுரங்களிலும், சுவரொட்டிகளிலும் போட வேண்டும் . சமூக வலைதளங்களிலும் அவ்வாறே தெரிவிக்க வேண்டும்.


இன்று, தமிழ்நாட்டில் செயல்படும் பல்வேறு முற்போக்கு ஜனநாயக இயக்கங்களில் செயல்படுவோர், ஏதோ ஒரு தாய் அமைப்பிலிருந்து வெளியேறி வந்தவர்கள்தான். அவ்வாறு வந்தவர்கள், தங்களது தாய் அமைப்பின் பெயரிலேயே செயல்படுவதில்லை; மாறாக, புதியதொரு அமைப்புப் பெயரில்தான் செயல்பட்டு வருகின்றனர். மக்கள் ஜனநாயக இளைஞர் கழகத்திலிருந்து வெளியேறியவர்கள், ஒரு பிரிவினர் "மக்கள் ஜனநாயக இளைஞர் முன்னணி" என்ற பெயரிலும் மற்றொரு பிரிவினர் "பாட்டாளி வர்க்க சமரன் அணி" என்ற பெயரிலும்தான் செயல்பட்டு வருகின்றனர் "மக்கள் ஜனநாயக இளைஞர் முன்னணி" தோழர்களும் அதன் பெயரிலேயே செயல்பட்டு வருகின்றனர். அவர்கள் தனித்தனியாக இருந்த போதிலும், பிற முற்போக்கு ஜனநாயக இயக்கங்கள் ஏற்பாடு செய்கின்ற கூட்டு நடவடிக்கைகளில் மேற்கண்ட மூன்று பிரிவினரும்கூட அதில் பங்கேற்கின்றனர். மக்கள் அதிகாரம் அமைப்பு பிளவுபட்ட அதே காலகட்டத்தில் நடந்தவைதான் மேற்கண்ட எடுத்துக்காட்டும்.

இத்தகைய கள நிலவரம் தெரிந்தும், வெற்றிவேல் செழியன் கோஷ்டியினரும் முத்துக்குமார் கோஷ்டியினரும், மக்கள் அதிகாரம் பெயரிலேயே செயல்படுவது ஜனநாயக விரோதமானது மட்டுமல்ல, அராஜகமானதும் வன்முறையானதுமாகும்கூட.

மக்கள் அதிகாரம் அமைப்புகள் பிளவுபட்டு மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனால், சிறுபான்மை கோஷ்டியினர் தொடர்ந்து மக்கள் அதிகாரம் பெயரிலேயே செயல்படுவதை பிற முற்போக்கு ஜனநாயக இயக்கங்கள் அங்கீகரிப்பதும் ஏற்றுக்கொள்வதும் "ஊரு ரெண்டு பட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம்" என்பதாகத்தான் கருத வேண்டி இருக்கிறது. எனவே, முற்போக்கு ஜனநாயக இயக்கங்களே! நீங்கள் தொடர்ந்து கூத்தாடிகளாக இருக்க விரும்புகிறீர்களா என்பதை நீங்கள்தான் முடிவு செய்ய வேண்டும். வேறு ஒன்றும் சொல்வதற்கில்லை!

வருத்தத்துடன்

தமிழ்மணி

தொடர்புடைய பதிவுகள்

மூன்று "மக்கள் அதிகாரம்",! குழப்பம் தீருமா?

No comments:

Post a Comment