தூத்துக்குடியைச் சேர்ந்த பத்திரிகையாளர் ஜோசப் ராஜன் அவர்களின்
பதிவு ஒன்றை “தமிழ் தேசிய கிறித்தவர் இயக்கம்” சார்பில்
முகநூலில் பதிவு செய்திருந்தார்கள். அதை அப்படியே கீழே தருகிறேன்.
“எனக்கு விபரம் தெரிந்த நாளிலிருந்து அரசியல் கட்சி ஆதரவாளனாக, அதன்பின்
ஒரு பத்திரிக்கையாளனாக நூற்றுக்கணக்கான அரசியல் கூட்டங்களிலும், மாநாடுகளிலும், கருத்தரங்குகளிலும்
செய்தி சேகரிக்க அல்லது ஆதரவாளனாக கலந்து கொண்டிருக்கிறேன்.
நீண்ட நாட்களுக்குப் பிறகு நேற்று தூத்துக்குடியில் நடைபெற்ற
நாம் தமிழரின் இன எழுச்சி மாறாட்டில் கலந்து கொண்டேன்.
மற்ற எந்த கட்சிகளையும் விட முற்றிலும் மாறுபட்ட ஒரு அரசியல்
அமைப்பாகவே இக்கூட்டத்தை காண முடிந்தது.
விசில் அடித்து ஆட்டம் போட்டுக்கொண்டு ஆரவாரம் இல்லை....
ஒரு சொட்டு மது இல்லை....
எவரும் குடித்து விட்டு வரவில்லை....
அதனால் அருகில் இருக்கும் டாஸ்மாக் கடையில் ஒரு குவார்ட்டர்
கூட எக்ஸ்ட்ரா விற்பனை ஆகவில்லை....
யார் வாயில் இருந்தும் ஒரு கெட்ட வார்த்தை இல்லை....
இதனால் காவல் துறையினருக்கு எந்த டென்சனும் இல்லை....
ரிலாக்சாக அமர்ந்திருந்தனர்.....
வந்து இறங்கிய கூட்டத்தில் பாதிக்குப் பாதி பெண்கள்....
இது எந்த அரசியல் கட்சி கூட்டத்திலும் இதுவரை நான் பார்க்காத
காட்சி...
வருகின்றவர்களுக்கு உதவ தன்னார்வ தொண்டரகளாக தம்பிமார்களின்
குடும்பத்தில் உள்ள பெண்கள்...
அவர்கள் கையில் வாக்கி டாக்கி....
அவர்கள் 200 ரூபா சம்பளத்திற்கு வந்தவர்கள் அல்ல...
படித்துக் கொண்டிருப்பவர்கள் அல்லது வேலையில் இருப்பவர்கள்...
ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள் சிலரும் தன்னார்வ தொண்டர்களாக பணியாற்றியது
மிகச்சிறப்பு....
கூட்டத்திற்கு வர யாருக்கும் பணம் கொடுக்கவில்லை....
தனியாக கார், வேன், பேருந்து அமர்த்தி குடும்பம் குடும்பமாக
பிள்ளை குட்டிகளுடன் வந்தவர்களே அதிகம்....
காரில் வந்து இறங்கிய ஒரு தம்பதியினரின் கையில் 3 வயது பெண்
குழந்தை....
அந்த குழந்தை காரில் இருந்து இறங்கியதும் கழுத்தில் அணியும்
இயக்கத்தின் கழுத்து பட்டையை அம்மாவிடம் கேட்டு வாங்கி ஆசையாக அணிந்து கொண்டு கம்பீரமாக
மைதானத்தில் நுழைந்தது.....
நுழைவு வாயிலில் புத்தக கடை போட்டிருந்தவர் அக்குழந்தையை பார்த்ததும்
இயக்கத்தினர் வழக்கப்படி கை முஷ்டியை உயர்த்தி அக்குழந்தைக்கு வணக்கம் வைத்தார்.
அக்குழந்தை அவரை விட அழகாக அதேபோல் அவருக்கு பதில் வணக்கம் வைத்தது....
நன்றாக பயிற்சி அளித்திருக்கின்றனர் அப்பெற்றோர்....
கடைக்காரர் ஓடிச்சென்று அக்குழந்தையை அள்ளி எடுத்து கொஞ்சி விட்டு
கீழே இறக்கினார்....
மீண்டும் பதில் வணக்கம் அப்படியே வைத்து விட்டு அக்குழந்தை சென்றது
இதுவரை நான் எந்த இயக்கத்திலும் பார்க்காதது... வியந்து போனேன்......
இதைப் பார்த்ததும் இது கட்சி கூட்டம் அல்ல....
குடும்ப விழா என உணர்வே எனக்கு மேலோங்கியது...
நான்கு வழிச்சாலையில் கூட்டம்.
ஆனால் சாலையில் செல்லும் ஒரு வாகனத்திற்கு கூட சிறிய இடைஞ்சல்
கூட இல்லை....
ஐம்பதாயிரம் பேருக்கும் மேல் திரண்டிருந்த இக்கூட்டத்தில் ஒரு
சிறு சலசலப்பு கூட இல்லை....
பறை இசை, எழுச்சிப் பாடல்கள், சிறுவர் சிறுமிகளின் கலை நிகழ்ச்சிகள்
என கூட்ட ஏற்பாடுகள் பிரம்மாதம்....
நன்கொடைகள் வசூலித்தார்கள் தம்பிமார்கள்....
தேடிச்சென்று தம்பிமாரை அழைத்துத்தான் நன்கொடை கொடுத்தேன்....
அநேகர் அவ்வாறே தந்து உதவியதாக பெருமையாக தம்பிகள் சொன்னார்கள்....
ஒலி, ஒளி அமைப்பும் பிரம்மாதம்.....
மேடையின் பின்புறம் இதுவரை பிளெக்ஸ் போர்டுதான் வைப்பார்கள்....
இப்போது அதை டிஜிட்டல் ஸ்க்ரீன் முறையில் ராட்சத அளவில் அருமையாக
அமைத்திருந்தார்கள்....
அதுவும் எந்த இடத்திலும் பிசிறு தட்டாமல் தெளிவாக இயங்கியது....
4 மணிக்கு கூட்டம் தொடங்கும் என தெரிவித்திருந்தார்கள்....
4 மணிக்கே பத்தாயிரம் பேர் வரை திரண்டு விட்டார்கள்....
4.30 மணிக்கு பறை இசை துவங்கியதும் சீமான் வந்து முன்வரிசையில்
தம்பிமாரோடு அமர்ந்து விட்டார்.....
நுழைவு வாயிலில் முள்ளிவாய்க்கால் கஞ்சி சிரட்டையில் வழங்கப்பட்டது...
அதன் அருகில் 2 ஆம்புலன்சில் குருதிக்கொடை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது...
அநேகர் அங்கும் குருதிக்கொடை வழங்கினார்கள்.....
ராவணன் குடிலில் புகைப்பட கண்காட்சி சிறப்பாக அமைக்கப்பட்டிருந்தது....
தண்ணீர் வசதியுடன் கழிப்பறைகள்,
ஆங்காங்கே குளிர்ந்த குடிநீர் வசதியும் செய்யப்பட்டிருந்தது....
மைதானத்தை சுற்றிலும் ஈழ விடுதலை போராட்டத்தில் தங்களின் இன்னுயிர்
நீத்த மாவீரர்களின் படங்கள் வைக்கப்பட்டிருந்தன.
அனைவருக்கும் வணக்கம் என சொல்லி விட்டு உரை வீச்சை துவங்குவதுதான்
நாம் தமிழரின் சிறப்பு....
அவர்களே, இவர்களே என அம்பது பேர் பேரை அரை மணி நேரம் சொல்லி
விட்டு அப்புறம் பேச தொடங்கும்போது ஏற்படும் சலிப்பு இவர்கள் மேடையில் இல்லை...
பிரபாகரன் ஒழுக்கத்துடன் கட்டி எழுப்பிய அதே போர்ப்படை போன்றே
எனது அருமைத் தம்பி சீமானும் கட்டி எழுப்பி இருப்பது கண்கூடாக தெரிய வந்தது...
தூத்துக்குடி நாம் தமிழர் இயக்க தம்பிமார்கள், தங்கைமார்கள்
அனைவருக்கும் பாராட்டுக்கள்.... வாழ்த்துக்கள்...
உங்களின் உழைப்பு பிரம்மிக்கத்தக்கது...
எதிர்காலத்தைப் பற்றி சிந்தித்தபோது ஒன்று மட்டும் தெளிவாக புரிந்தது...
திராவிடத்திற்கும் தமிழ் தேசியத்திற்குமான மிகப்பெரிய போர் ஒன்று
இருக்கிறது...
இப்படையை அழித்து விட ஆட்சியாளர்கள் நினைப்பார்கள்....
அப்படி நினைத்தால் அதற்காக மிகப்பெரிய விலையை அவர்கள் தர வேண்டியிருக்கும்...
மக்களுக்கு ஒரே ஒரு வேண்டுகோள்....
அன்பு மக்களே, நீங்கள் எந்த கட்சியிலும் இருந்து விட்டுப் போங்கள்....
ஒருமுறையாவது நாம் தமிழர் இயக்கம் நடத்தும் இப்படிப்பட்ட மாநாட்டை
ஒருமுறை சுற்றி வந்து அனைத்தையும் கவனித்துப் பாருங்கள்.”
இப்படி விலாவாரியாக நாம் தமிழர் கட்சி குறித்தும், சீமான்
குறித்தும் சிலாகித்திருந்தார் பத்திரிகையாளர் என்று பறைசாற்றிக் கொள்ளும் ஜோசப்
ராஜன் அவர்கள். இந்தப் பதிவு குறித்த மதிப்பீட்டை பின்னூட்டத்தில் தெரிவித்திருந்தேன்
அதைத் தொடர்ந்து எனக்கும் தினேஷ் ராஜன் என்கிற வழக்குரைஞருக்கும் இடையில்
நடைபெற்ற விவாதத்தை அப்படியே கீழே தருகிறேன். வாசகர்கள் இது குறித்துத் தங்களுடையக்
கருத்துக்களை தெரிவிக்கலாம்.
ஊரான்:
“மிகை மதிப்பீடு. ஓவர் பில்டப். ஒவ்வொரு கால கட்டத்திலும் தமிழ்
இளைஞர்கள் ஏதோ ஒன்றுக்குப் பலியாகிக் கொண்டுதானிருக்கிருக்கிறார்கள் இப்போது சீமானிடம்.
அவ்வளவுதான்.”
தினேஷ் ராவணன் வழக்கறிஞர்:
“நான் சரியான மதிப்பீடாகவே பார்க்கின்றேன்.இன்றைய தமிழ் தேசிய அரசியலில்
யார் முன்னின்று களமாடிக் கொண்டிருப்பது??? மற்ற எல்லா தலைவர்களையும் விட ஓட்டு அரசியலில்
இந்தக் கட்சிதான் முன்னிலையில் உள்ளது! சீமான் கரத்தை வலு சேர்க்க வேண்டி உள்ளதே”.
ஊரான்:
தினேஷ் இராவணன் வழக்கறிஞர் உங்களின் மதிப்பீடு தவறானது. சித்தாந்த
ரீதியாக அவருடைய செயல்பாடுகளை நாம் பரிசீலிக்க வேண்டும். அவருடைய நடைமுறை முழுக்க முழுக்க
சனாதனத்திற்கு வலு சேர்க்கக் கூடியவை. மேலும்
அவரது அரசியல் தமிழ் தேசிய விடுதலைக்கு எந்த வகையிலும் உதவாது. சித்தாந்த ரீதியாக அவரைப்
புரிந்து கொள்ள கீழ்கண்ட கட்டுரையின் தொடர் முழுவதையும் படிக்கவும்.
https://ethirthunil.blogspot.com/2022/01/1.html?m=1
மேற்கண்ட இணைப்பில் உள்ள கட்டுரை:
“தமிழ்த் தேசியம்
என்றால் அது சீமான்தான் என்கிற கருத்து இன்று இளைஞர்கள் மத்தியில் மிகத் தீவிரமாக
பரப்பப்பட்டு வருகிறது. தமிழரை உய்விக்க வந்த மாயோனாக, சீயோனாக சீமானை சில
இளைஞர்கள் பார்க்கின்றனர். முப்பாட்டன் முருகன் தொடங்கி பெரும்பாட்டி ஔவை,
ஓபிஎஸ்–இபிஎஸ் சித்தப்பாக்கள், சித்தி சசிகலா, வழி காட்டி திருவரங்கம் சங்கர்
அப்பா என இவருக்குச் சொந்த பந்தம் ஏராளம் என்பதாலும், அண்ணனின் ஆமைக்கறியால் இவரது
தசைகள் முறுக்கேறியதாலும், கிரீன் பெல்ட்-பிளாக் பெல்ட் என விளாசிக்
கொண்டிருக்கிறார். இவரது விளாசலில் திராவிடமே திக்குமுக்காடுவதாகத் தம்பிகள் வேறு
சாட்டையைச் சுழற்றுகின்றனர். தமிழ் மண்ணையே ஆளத் துடிக்கும் இவருக்கு, பாவம்
சொந்தமாக ஒரு வீடு இல்லை என்கிற ‘பெருந் துயரத்தைத்’ தவிர இவரது உல்லாசத்திற்குக்
குறை ஒன்றுமில்லை.
‘நாம் தமிழர்’ சீமானின் தமிழ்த் தேசியம்!
தமிழின மீட்சி, தமிழீழத் தனியரசு, மாநிலங்களின் தன்னுரிமை,
இறையாண்மைக் குடியரசுகளின் கூட்டு இணையாட்சி-அதற்கேற்ப அரசியல் சட்டத் திருத்தம்,
ஆட்சி மொழி-வழிபாட்டு மொழி-வழக்காடு மொழி-தமிழில் படித்தவருக்கே வேலை வாய்ப்பு என
எங்கும் தமிழ், சமதர்மப் பாதையமைக்கக் கூட்டுறவு முறை, நிலமற்றோருக்கு நிலமும்
மனையும், அறிவியல்-தொழில் நுட்ப வளர்ச்சி, உலகத் தமிழர் ஒன்றிணைப்பு, சமனியத்
தமிழரசு, வருண–சனாதன அழிப்பு, சாதி-சமய ஆதிக்கம் ஒழிப்பு, சமயம் சாரா அரசு,
தனியார் மயம்–கள்ளப் பணம் ஒழிப்பு, மருத்துவம் அடிப்படை உரிமை, ஆண்-பெண் சுயஉதவிக்
குழுக்கள், தேசிய இன நட்புறவுக் கழகம் (எ.கா:தமிழர்-வங்காளி) என ஒரு
குடுகுடுப்பைக்காரன் குறி சொல்வது போல நீள்கிறது இவரது கொள்கைப் பிரகடனங்கள்.
யாரிடமிருந்து தமிழின மீட்சி? திமுக அதிகாரத்தில்
இருந்தாலும் இல்லை என்றாலும் ‘திருட்டு’ திராவிட திமுக-விடமிருந்து என்பார்
சீமான். ஆனால் (திராவிடத்தால் துளிர்த்த) இலை மலர்ந்தால் இவர் ஆமைக் கறியோடு
இளைப்பாறி விடுவார்.
தமிழீழ தனியரசு–புலம்பெயர் தமிழரிடமிருந்து பணம் கரப்பதைத் தவிர
வேறு ஒரு வெங்காயத்தையும் இவரால் உரிக்க முடியாது.
சாதி ஆணவப் படுகொலையை “குடிப்பெருமை கொலை” என பெருமை பேசும் இவர், சாதி
ஆதிக்கத்தையும் வருண-சாதியையும் ஒழிக்கப் போகிறாராம்? கிருஸ்தவமும் இஸ்லாமும்
ஐரோப்பிய–அரேபிய சமயங்கள்; சைவமும்–மாலியமும் மட்டும்தான் தமிழர் சமயங்கள் என கதை
அளந்து கொண்டே, சமயம் சாரா அரசு அமைக்கப் போவதாகச் சரடு விடுகிறார்.
பன்னெடுங்காலமாக தமிழகத்தில் வாழும் தெலுங்கர்களையும்,
மலையாளிகளையும், கன்னடர்களையும் எதிரிகளாகக் கட்டமைத்துக் கொண்டே தேசிய இன
நட்புறவுக் கழகம் பற்றி நரித்தனம் பேசுகிறார்.
திரைப்படங்களில் கச்சைக் கட்டி குத்தாட்டம் போட்டு கவர்ச்சி காட்டும் நடிகைகளுக்கும், இடுப்பில் பச்சைத் துண்டு கட்டிக் கொண்டு ‘தமிழர் முன்னணி’ ஆட்டம் போடும் இவருக்கும் பெருத்த வேறுபாடு இருப்பதாகத் தெரியவில்லை; இரண்டிலும் இளைஞர்கள் சீரழிவதைத் தவிர!
தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறு அடி பாயும்
என்பார்கள். ஆனால் இங்கோ, குட்டி எட்டடி பாய்ந்தால் தாய் பதினாறடி பாய்கிற கதையாகி
விட்டது, ஐயா மணியரசனின் கதை. சீமானாவது இந்து மதம் தமிழர் மதமே இல்லை என்கிறார். ஆனால் மணியரசனோ,
தமிழர்கள் எல்லாம் இந்துக்கள் என்று சொல்லி சைவத்தை
மீட்டெடுக்கும் திருநாஞானசம்பந்தராய் அவதாரம் எடுத்து வச்சிரநந்தியைக்
கழுவிலேற்றுகிறார்.
இவர்கள் பேசும் தமிழ்த் தேசியத்தால், வேத-எதிர்ப்பை
அடிப்படையாகக் கொண்ட திராவிடக் கருத்தியலை, தமிழர் நெஞ்சங்களிலிருந்து
துடைத்தெறிந்துவிட்டு பார்ப்பனியத்தை மீட்டுருவாக்கம் செய்வதைத் தவிர
தமிழர்களுக்கு வேறொரு பயனும் கிட்டப் போவதில்லை.
தோழர் ஸ்டாலினின் சொற்களில் சொல்லவேண்டுமானால், இவர்கள்
இருவரும் தமிழ்த் தேசிய இனத்தைப் பழைய சமூக முறைக்குத் திரும்பச் செல்வதற்கு
முயற்சி செய்பவர்கள்; அதற்கு அவர்களுக்கு உரிமை உண்டு என்றாலும் கூட இந்த முடிவை
கம்யூனிஸ்டுகளால் ஆதரிக்க முடியாது. இவர்கள் பேசும் தமிழ்த் தேசியம் பிழையானது
என்பதற்கு, பல்வேறு தேசிய இன மக்களுக்கிடையே பகைமையை வளர்ப்பது, பாட்டாளி வர்க்க
ஒற்றுமையை சீர் குலைப்பது என வேறு பல காரணங்கள் இருந்தாலும் தமிழ்த் தேசிய
இனத்தைப் பழைய முறைக்குப் பின்னோக்கி இழுத்துச் செல்லும் ஒரே காரணத்திற்காக
இவர்கள் பேசும் தமிழ்த் தேசியம் நிராகரிக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.
பார்ப்பனரல்லாதோர் இயக்கம்-நீதிக்கட்சி தொடங்கி,
பெரியார்-அண்ணா-கலைஞர்-ஸ்டாலின் காலம் வரை திராவிடக் கருத்தியலை, பார்ப்பனர்கள்
மிகத் தீவிரமாக எதிர்ப்பது ஏன்? இட ஒதுக்கீடு உள்ளிட்ட திராவிடக் கருத்தியலின்
சமூக நீதிக் கோட்பாடுகளால், சூத்திரர்கள் இருந்த இடத்தில் பார்ப்பனர்களையும்,
பார்ப்பனர்கள் இருந்த இடத்தில் சூத்திரர்களையும் வைத்ததால்தான் பார்ப்பனர்கள்
பெரியார் மீது கடும்கோபம் கொள்ளக் காரணம். அனைத்து சாதி அர்ச்சகர் இதற்கு
சமீபத்திய எடுப்பான உதாரணம்.
வட இந்தியாவில் சட்டமன்ற-நாடாளுமன்ற உறுப்பினர்களாகவும்,
மத்திய- மாநில அமைச்சர்களாகவும் பெரும் எண்ணிக்கையில் பார்ப்பனர்களால்
வரமுடிகிறது. ஆனால் தமிழகத்திலோ ஒரு வார்டு உறுப்பினராக வருவதற்கே திண்டாட
வேண்டியிருக்கிறது. வடக்கும், தெற்கு போல ஆகிவிடுமோ என்ற அச்சம் பார்ப்பனர்களை
அச்சுறுத்தியதால்தான், உயர்சாதியினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீட்டைக் கொண்டு வந்து
அதிகாரத்தில் தங்களது ஆதிக்கத்தை நிலை நிறுத்த முயற்சி செய்கின்றனர் போலும்.
பெரியாரின் சமூகநீதிக் கோட்பாடுகளால் ஆதிக்கத்தை
இழந்தவர்கள் அலருவதில் அர்த்தம் உண்டு. ஆனால் பெரியாரால் ஆதாயமடைந்தவர்கள்
அலருகிறார்கள் என்றால் அதன் பொருள் என்ன?
தொடரும்
தமிழ்மணி”
தினேஷ் ராவணன் வழக்கறிஞர்:
இவருடைய கொள்கை எந்த விதத்தில் சனாதனத்திற்கு வழி வகுக்கின்றது
என்று எனக்குத் தெரியவில்லை ஐயா ! சனாதனைத்தை
முழு மூச்சாக எதிர்க்கன்றோம் என்று கூறும் திமுக பிஜேபி யிடம் சரணாகதி அடைந்துவிட்டது.
அதிமுக சொல்லவே வேண்டியதில்லை., அடுத்து இருக்கும் பாமக, விசிக, மதிமுக, கம்யூனிஸ்டு
போன்ற கட்சிகள் திராவிடக் கட்சிகளில்தான் மாறி மாறி சங்கமிக்கின்றன. வேறு யாரை நம்பி
களமாடுவது!
அரசியல் பேசும் கட்சிகளுக்கு இடையே இவர்தான் உயிர்மெய் நேயம்
பேசுகின்றான், காடு வளம், கனிம வளம், நீர் வளம், நில வளம் குறித்து பேசி வருகின்றான்..
எனக்கு ஒன்றுதான் ஐயா
என்னுடைய வளங்கள் காக்கப்பட வேண்டும், என் மண்ணை மற்ற மாநிலத்தை
போன்றே மண்ணின் மைந்தன் ஆள வேண்டும்!
ஊரான்:
கனிம வளம், நீர் வளம், நில வளம் குறித்து பேசுவதோடு சரி. அதிமுக
ஆட்சியிலும் சரி, திமுக ஆட்சியிலும் சரி இந்த வளங்கள் கொள்ளை போவது தொடரத்தான் செய்கிறது.
அதைத் தடுத்து நிறுத்துவதற்கு பெரிய தொடர் போராட்டங்கள் எதையாவது சீமான் நடத்தி இருக்கிறாரா?
அடையாளப் போராட்டங்கள் கதைக்கு உதவாது.
சனாதனம் என்றால் என்னவென்று தெரிந்தால்தான் இவர் சனாதனத்துக்கு
வக்காலத்து வாங்குகிறாரா இல்லையா என்பது புரியும். தயவு கூர்ந்து வேதங்களையும், உபநிடதங்களையும்,
மனுசாஸ்திர தர்மத்தையும் இன்ன பிற இந்து மத இதிகாசங்களையும், பகவத் கீதையையும் படியுங்கள்,
சனாதனத்தைப் புரிந்து கொள்வதற்கு. சைவத்தையும் மாலியத்தையும் சிவனையும் விஷ்ணுவையும்
தூக்கிப் பிடிப்பவர் எப்படி சனாதனத்துக்கு எதிரானவராக இருக்க முடியும்? சனாதானத்தை
அடிநாதக் கொள்கையாக வைத்திருக்கும் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளருக்கு மும்பை சென்று
வாக்கு சேகரித்தது எந்த அடிப்படையில்? 2000 ஆண்டுகளுக்கு முன்பு சனாதனத்தை எதிர்த்துப்
போராடிய திராவிடக் கருத்தியலை கொச்சைப்படுத்தி இழிவுபடுத்துபவர் சனாதனியாக மட்டுமே
இருக்க முடியும். இன்றைய திமுக மற்றும் திராவிடச் கட்சிகளை வைத்துக்கொண்டு திராவிடக்
கருத்தியலை கொச்சைப்படுத்திப் பேசுவது என்பது அடி முட்டாள் தனம்.
இப்படி ஏராளம் இருக்கு. ஆனால் இதற்கு மாற்று யார் என்று கேள்வி
எழுப்புகிறீர்கள். பொதுவுடமை சித்தாந்தம் மட்டுமே இதற்கு மாற்று. இதை இன்றைய தேர்தல்
அரசியல் கம்யூனிஸ்களிடமிருந்து கற்க முடியாது. மாறாக கம்யூனிச ஆசான்களின் நூல்களில்
இருந்து மட்டுமே கற்க முடியும். முயற்சி செய்து பாருங்கள்.
சித்தாந்த அடிப்படை எதுவுமில்லாத சீமானை ஒருக்காலும் மாற்றாக
ஏற்றுக் கொள்ள முடியாது. ஒருவேளை அப்படித் தமிழர்கள் ஏற்றுக் கொண்டால் அது சமூகத்தை சில
பத்தாண்டுகள் பின்னோக்கி இழுத்துச் செல்லவே உதவும். குறித்து வைத்துக் கொள்ளுங்கள்.
சனாதனக் கருத்தியலுக்கு எதிரான திராவிடக் கருத்தியலை ஒழித்துக்
கட்டுவதற்காகவே சங்கிக் கூட்டங்களால் திட்டமிட்டு உருவாக்கப்பட்டு வளர்க்கப்படுபவர்தான்
சீமான் என்பது இன்று சிலருக்குப் புரிந்தாலும் அது பலருக்கு விரைவில் தெரிய வரும்.
எனக்கு தற்போது வயது 65. கிட்டத்தட்ட 45 கால ஆண்டு கால அரசியல்
வாழ்க்கையிலிருந்து சொல்லுகிறேன். தயவு செய்து சீமானுக்குப் பின்னால் செல்லாதீர்கள்.
மக்களுக்குத் துரோகம் இழைக்காதீர்கள். கம்யூனிசம் ஒன்றே மாற்று. அதை நோக்கிப் பயணிக்க
வாருங்கள்.
தினேஷ் இராவணன் வழக்கறிஞர்:
ஐயா, நான் தர்க்கம் செய்வதாக என்ன வேண்டாம். என் வயது 37 தான்
ஆகின்றது! உங்கள் அனுபவம் எங்கள் வழிகாட்டிதான்! உங்கள் கால சித்தாந்தம் இப்போது இல்லை
என்பது என் எண்ணம்! எப்படி இருக்க வேண்டிய கம்யூனிச தோழர்கள் இன்று எப்படி இருக்கின்றார்கள்!
தமிழகத்தில் உள்ள தோழர்கள் இனத்தை கொன்று ஒழித்த காங்கிரசுக்கு தோள் கொடுக்கின்றார்கள்,
கேரளாவில் உள்ள தோழர்கள் எதிர்க்கின்றார்கள்! என்ன சித்தாந்தம் இது? தமிழகத்திற்கு எதிராக மேக தாதுவில் ஆட்சிக்கு வந்தால் அணை கட்டுவோம் என்கிறது
கர்நாடக காங்கிரசு. இதைப் பற்றி தோழர்கள் ஏதாவது பேசுகின்றார்களா? அவர்களுடன் நிற்பதோடு
அவர்கள் வெற்றியை கொண்டாடுகிறார்கள்
தேர்தலில் காசு கொடுக்காமல் வெல்ல முடிந்ததா???
சனாதனம் என்ன என்று எனக்கு தெரியாமல் இருக்கலாம்!
ஆனால் இங்கு தமிழ் தேசிய அரசியலில் பண்பாட்டு புரட்சி இல்லாமல்
அரசியல் புரட்சி வெல்லாது ஐயா
இறுதியாக மனித குலம் உள்ளவரை கம்யூனிசம் வாழும் மறுக்க முடியாத
உண்மை!!!!!
சரி இன்றைய அரசியலில் யார் சரியானவர்கள் உங்களின் பார்வையில்???
ஊரான்:
நான் ஏற்கனவே குறிப்பிட்டிருக்கிறேன்
பொதுவுடமை சித்தாந்தத்தை மட்டும் பாருங்கள். பொதுவுடமையைப் பேசும் கட்சிகளைப் பார்க்காதீர்கள்
என்று. மீண்டும் நீங்கள் தேர்தல் அரசியலில் நிற்கும் பொதுவுடமைக் கட்சிகளைப் பற்றிப்
பேசுகிறீர்கள்.
"இறுதிவரை மனித
குலம் உள்ளவரை கம்யூனிசம் வாழும். மறுக்க முடியாத உண்மை" என்ற உங்களின் கூற்றுதான்
மிகச் சரியானது. அதற்காகத்தான் மனிதச் சமூகம் பாடுபட வேண்டும். அதை விடுத்து இடையில்
வந்தவர்களை அவர்களின் பேச்சுக்களால் ஈர்க்கப்பட்டு மயங்குவது மிகவும் ஆபத்தானது.
சனாதானத்தை மறுக்கின்ற
அல்லது அதற்கு எதிராகக் களமாடும் கட்சிகளுக்கு பிரச்சனைகளின் அடிப்படையில் நாம் ஆதரவு
தரலாம். மற்றபடி அவர்கள்தான் மாற்று என்று பேசுவது பொருத்தமானது அல்ல. அந்த வகையில்தான்
திமுகவையோ, காங்கிரசையோ, தேர்தல் அரசியலில் ஈடுபடும் கம்யூனிஸ்ட்களையோ அணுக வேண்டும்.
சனாதனத்தை ஆதரிக்கும் கட்சிகளை முழுமையாக நிராகரிக்க வேண்டும்.
‘தமிழ் தேசிய அரசியலில்
பண்பாட்டுப் புரட்சி இல்லாமல், அரசியல் புரட்சி வெல்லாது' என்று குறிப்பிட்டுள்ளீர்கள்.
பண்பாடு என்பது அரசியல்
பொருளாதாரத்தின் ஒரு வெளிப்பாடு. என்ன வகையான அரசியல் கொள்கைகள் மற்றும் பொருளாதாரக்
கொள்கைகள் கடைபிடிக்கப்படுகிறதோ அதற்கு ஏற்பதான் மக்களின்
பண்பாடு தீர்மானிக்கப்படும். எனவே அரசியல் பொருளாதாரம் மாறாமல் பண்பாட்டை முதலில் மாற்ற
முடியாது என்பதை நினைவில் கொள்ளவும். பண்பாட்டை மாற்ற வேண்டும் என்றால் கூட நாம் அரசியல்
பொருளாதாரத்தைத் தீர்மானிக்கும் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான இலக்கை நோக்கி
முன் செல்ல வேண்டும். வெறும் பிரச்சாரங்களால் அல்லது வாய் வீச்சுப் பேச்சுக்களால் மக்களின்
பண்பாட்டை மாற்றி விட முடியாது.
பொதுவாகவே நாம் தமிழர்
கட்சியை, சீமானை ஆதரிக்கின்ற இளைஞர்கள் உணர்ச்சிக்கு ஆட்பட்டுதான் அவரை ஆதரிக்கிறார்கள்.
மற்றபடி அதற்குப் பின்னால் ஒரு தெளிவான அரசியல் சித்தாந்த கோட்பாடு எதுவும் கிடையாது
என்பது இப்போது நாம் நடத்திக் கொண்டிருக்கும் விவாதத்திலிருந்து எளிதாகப் புரிந்து
கொள்ள முடியும். நான் உங்களைக் குறை கூறுவதாகத் தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம். இதுதான்
எதார்த்தம்.
மிகச் சரியானவர்கள்
யார் என்று இறுதியாகக் கேட்டிருக்கிறீர்கள். பொதுவுடமை பேசக்கூடிய மார்சிய-லெனினிய
கட்சிகளைச் சார்ந்தவர்கள்தான் மிகச் சரியானவர்கள். அவர்களுக்கிடையே கூட சில பிரச்சனைகள் இருக்கத்தான் செய்கின்றன.
ஆனாலும் அவர்கள் தங்களது வாழ்க்கையில் பல்வேறுத் தியாகங்களைப் புரிந்து கம்யூனிசத்தை
நிறுவுவதற்காகப் போராடிக் கொண்டிருப்பவர்கள். அவர்களுக்குப் பின்னால் இளைஞர்கள் அணிதிரளுவது
ஒன்றுதான் மாற்று. அத்தகையப் பாதையைக் கடந்து வந்தவன்தான் நான்.
மத்திய அரசின் பொதுத்தறை
நிறுவனத்தில் அதிகாரியாக இருந்து கொண்டே, தொழிலாளர்களின் தொழிற்சங்கப் போராட்டங்களில்
பங்கேற்று, அரசியல் பண்பாட்டுத்தளத்தில் ஒரு கலை இலக்கியவாதியாக பல்வேறு போராட்டங்களில்
ஈடுபட்டு கைது சிறை என எண்ணற்ற இன்னல்களை எதிர்கொண்டவன். தொழிற்சங்கப் பணிகளுக்காக
வேலை நீக்கம் செய்யப்பட்டு பெருத்த பொருளாதார இழப்புகளுக்கிடையில் மீண்டும் பணியில்
சேர்ந்து பணி ஓய்வு பெற்றவன். தற்போது ஒரு வழக்குரைஞராக "மக்கள் உரிமைப் பாதுகாப்பு
மையத்தில்" என்னை இணைத்துக் கொண்டு செயல்பட்டு வருகிறேன்.
வழக்கறிஞர் என்ற முறையில் நீங்களும் எங்களை நோக்கி வரவேண்டும் என்பதுதான் எனது கோரிக்கை. நீங்கள் எந்த ஊரில் இருக்கிறீர்கள் என்பது தெரியாது. எங்களோடு இணைந்து பணியாற்ற விரும்பினால் தொடர்பு கொள்ளலாம். உங்களது விருப்பத்தைப் பொறுத்து மேலும் விவாதத்தைத் தொடரலாம். நாகரிகமாகவும் பொறுமையோடும் விவாதம் செய்யும் உங்களுக்கு எனது வாழ்த்துகள். நன்றி!
தமிழ்மணி
No comments:
Post a Comment