நெற்றிப் பொட்டு துடிக்கிறது, கண்கள் குளமாகி விட்டன. நா வறண்டு விட்டது. இதயம் துடிக்கிறது. என்ன வென்று சொல்ல? எழுத வார்த்தைகள் கிடைக்க வில்லை.
சொந்த வேலை காரணமாக வெளியில் சென்றுவிட்டு மூன்று மணி நேரம் கழித்து பிற்பகல் ஒரு மணிக்கு வீட்டிற்கு வந்தேன். அகோரப் பசி. வலது கையோ சோற்றுப் பருக்கைகளை வாய்க்குள் திணித்துக் கொண்டிருந்தது. இடது கையோ கைபேசியில் முகநூல் பக்கங்களைப் புரட்டிக் கொண்டிருந்தது.
விவசாயிகள் விடுதலை முன்னணியின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் மோகன் அவர்களின் முகநூல் பதிவு ஒன்று என்னை நிலைகுலைய வைத்துவிட்டது. வலது கையில் சோற்றுப் பருக்கைகள் சிதறின. இடது கை விரல்களோ அடுத்தப் பக்கத்திற்குச் செல்ல நடுங்கின.
“விவசாயிகள் விடுதலை முன்னணி, கடந்து வந்த கரடுமுரடான பாதையில், நெடியதொரு காலம் உழைக்கும் மக்களின் வர்க்க விடுதலைக்கு, தனது சுக போகங்களைத் துறந்து, குடும்பத்தை மறந்து இன்முகத்துடன் ஒப்படைத்த ஒப்பற்றத் தோழனே ஓய்வெடு!” இதுதான் அந்தப் பதிவு.
எனது நாற்பதாண்டு கால புரட்சிகர அரசியல் வாழ்க்கையில் எண்ணற்றோருடன் பயணித்திருக்கிறேன். எல்லோருமே மனதில் நீங்கா இடம் பெற்று விடுவதில்லை. ஒரு சிலரே இதயத்தில் சிம்மாசனமிட்டு அமர்ந்து கொள்கின்றனர்.
1980 களின் தொடக்க காலத்தில் புதியதொரு புரட்சிகர மாற்று அரசியலை என்னுள் ஆழமாக ஊன்றிய அரசியல் ஆசான் அவர். பிரியமான ‘ரகு’வாகத்தான் அவரை நான் அறிவேன். சுமார் பத்து ஆண்டுகாலம் அவருடன் நான் பயணித்திருப்பேன். அதன் பிறகு அரசியல் பணிக்காக அவர் வேறு பகுதிக்குச் சென்று விட்டாலும், அமைப்பின் மாநாடுகளில், பொது நிகழ்ச்சிகளில் ஆயிரக்கணக்கானோர் மத்தியில் அவரைக் காண எனது கண்கள் ஏங்கும்.’கண்டேன் சீதையை’ என்பதைப் போல அவரைக் கண்டு விட்டால் எனது நெஞ்சம் பூரித்து போகும்.
யார் சொன்னது புரட்சியாளர்கள் கல் நெஞ்சக்காரர்கள் என்று? ரகுவோடு உறவாடியவர்களுக்குத்தான் தெரியும் அவர்கள் ரோசாவின் ராசாக்கள் என்பது.
மக்கள் கலை
இலக்கியக் கழக முன்னாள் மாநிலப் பொருளாளர் தோழர் சீனிவாசன் மறைந்த போது அமுதேன்! அழுதேன்! கண்கள் கனலாய் ஆன போதும் அழுதேன்.
என் ஆசான் ஆருயிர்த் தோழன் ரகுவின் மறைவால் இன்று மீண்டும் அழுகிறேன், நேரில் வந்து அழ முடியாத ஆற்றாமையால் தொலைவிலிருந்து துயரத்தை மட்டுமே சுமந்து கொண்டு!
துயரத்துடன்
தமிழ்மணி
No comments:
Post a Comment