மதுரை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கல்குவாரிகளை தற்காலிகமாக மூடியுள்ளதாகச் செய்திகள் வருகின்றன. அவசரப்பட்டு ஒரு நடிகனுக்கு வாக்களித்தது போல, இது ஏதோ சுற்றுச்சூழலைக் காப்பதற்கான நடவடிக்கை என அவசரப்பட்டு முடிவுக்கு வந்துவிடாதீர்கள். இது உண்மையில் சூழலியல் அக்கறையா? அல்லது வேறு ஏதேனும் கணக்கா? கொஞ்சம் அலசலாம்.
இயற்கையும் மனிதத் தேவையும்
மனிதன் இயற்கையிலிருந்து முற்றிலும் பிரிந்து தனித்து வாழ்ந்துவிட முடியாது. உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இடம் - இந்த அடிப்படைத் தேவைகள் ஒவ்வொன்றிற்கும் நாம் இயற்கையையே சார்ந்திருக்கிறோம்.
ஒரு வீடு கட்ட வேண்டுமென்றால் கதவு, ஜன்னல், அலமாரி, கட்டில் என அனைத்திற்கும் மரம் தேவைப்படுகிறது. மரம் வேண்டாமென இரும்புக்கு மாறினால், சுரங்கங்கள் தோண்டப்பட வேண்டும்; மலைகள் வெட்டப்பட வேண்டும். இது பூமித்தாயின் வயிற்றைக் கீறும் செயல்தானே?
சிமெண்டிற்குச் சுண்ணாம்புக்கல், செங்கல்லுக்கு மண், ஜல்லி மற்றும் எம்-சாண்டிற்கு மலைகள், மணலுக்கு ஆறுகள் என இயற்கை வளங்களைத் தொடாமல் ஒரு வீட்டைக் கட்டவே முடியாது.
PVC-க்கு மாறினால் கூட, அதன் மூலப்பொருளான எத்திலீன் தயாரிக்கக் கச்சா எண்ணெய் வேண்டும். அதற்கும் பூமியைத் துளையிடத்தான் வேண்டும்.
மின்சாரம் இல்லாமல் கால் மணிநேரம் கூட நம்மால் இருக்க முடிவதில்லை. அந்த மின்சாரத்தைத் தயாரிக்க நிலக்கரிச் சுரங்கங்கள் தேவைப்படுகின்றன.
கால்களாலேயே காசியைத் தொட்ட காலம் போய், இன்று பக்கத்துத் தெருவிற்குச் செல்லவும் இருசக்கர வாகனங்களைத் தேடுகிறோம். பெருகிவிட்ட வாகனங்கள் விழுங்கும் எரிபொருளை எடுக்க இயற்கையைக் குதற வேண்டியிருக்கிறது; அவை வெளியிடும் நச்சுப் புகையால் வானம் மாசுபடுகிறது.
ஆக, இயற்கையைத் தொடாமல் நவீன மனித வாழ்க்கை சாத்தியமில்லை.
தேவையா? பேராசையா?
இங்கேதான் முக்கியமான கேள்வி எழுகிறது: நமது தேவைக்காக இயற்கையைத் தொடலாம், ஆனால் அதன் அழிவின் எல்லை எங்கே தொடங்குகிறது?
- ஒரு குடும்பம் வாழ ஒரு சிறிய வீடு கட்டுவது 'தேவை'; ஆனால் ஆடம்பர பங்களா கட்டுவது 'பேராசை'.
- ஒரு மனிதன் பயணிக்க ஒரு வாகனத்தைப் பயன்படுத்துவது 'வசதி'; ஆனால், ரகரகமாய் கார்களை அடுக்கி வைத்திருப்பது 'ஆடம்பரம்'.
- ஒரு கிராமத்தின் தேவைக்காக மணல் எடுப்பது 'பயன்பாடு'; பெரும் லாபத்திற்காக ஆறுகளையே காலி செய்வது 'கொள்ளை'.
இன்று உலகை அழிப்பது சாதாரண மக்களின் தேவைகள் அல்ல; லாப வேட்டையாடும் கார்ப்பரேட் பொருளாதார அமைப்புதான். ஒரு விவசாயி தன் வீட்டிற்காக இரண்டு மரம் வெட்டினால் அது பேரழிவாகாது. ஆனால், ஆயிரக்கணக்கான ஏக்கர் காடுகளை அழித்து ரிசார்ட்டுகளையும் அடுக்குமாடிக் குடியிருப்புகளையும் கட்டும் நிறுவனங்கள்தான் இயற்கையைச் சிதைக்கின்றன. ஏற்றுமதிக்காக மலைகளையே விழுங்கும் கிரானைட் கொள்ளைதான் உண்மையான பேரழிவு.
கட்டுமானங்களுக்குத் தேவை சமூகக் கட்டுப்பாடு
வீடு கட்ட அனுமதி வழங்கும் அரசு, அது வரைபடம் மற்றும் வரி விதிகளுக்கு உட்பட்டுள்ளதா என்று மட்டுமே பார்க்கிறது. மாறாக, அந்த வீட்டில் எத்தனை பேர் வசிக்கப் போகிறார்கள், அது தேவையைக் காட்டிலும் ஆடம்பரத்திற்காகக் கட்டப்படுகிறதா என்பதையும் கவனிக்க வேண்டும்.
இன்று இரண்டு பேர் வாழும் குடும்பத்திற்காக ஆயிரக்கணக்கான சதுர அடியில் அரண்மனை போன்ற வீடுகள் கட்டப்படுகின்றன. வீட்டுக்குள்ளேயே நீச்சல் குளம், செயற்கை நீரூற்று என வளங்களை விரயம் செய்வது 'பணக்காரப் பெருமை'யாக மாற்றப்பட்டுள்ளது. இது தனிநபர் ஆடம்பரம் மட்டுமல்ல, இயற்கை வளங்களின் மீதான அப்பட்டமான கொள்ளை.
எனவே நமது கோரிக்கை:
- குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப வீட்டுப் பரப்பளவிற்கு உச்சவரம்பு நிர்ணயிக்கப்பட வேண்டும்.
- தேவையற்ற ஆடம்பரக் கட்டுமானங்களுக்குக் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டும்.
- மிகை வளப் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தச் சட்ட நடவடிக்கை தேவை.
- நான்கு பேர் உள்ள வீட்டிற்குப் பல கார்கள் எதற்கு என்ற கேள்வி வாகனங்களுக்கும் பொருந்த வேண்டும்.
மறைக்கப்படும் உண்மைகளும் தீர்வும்
இன்று "பசுமை" பற்றிப் பேசுபவர்கள் கூடத் தாங்கள் பயன்படுத்தும் செல்போன், கணினி, ஏசி, கார்கள் ஆகியவற்றின் பின்னால் இருக்கும் இயற்கை அழிவைப் பேசுவதில்லை.
தீர்வு என்ன?
- தேவைக்கு மட்டுமே உற்பத்தி மற்றும் லாப நோக்கமற்ற வளப் பயன்பாடு.
- ஆடம்பரத்தைக் குறைத்த எளிமையான வாழ்க்கை.
- "எவ்வளவு அதிகம் சம்பாதிக்கலாம்?" என்பதற்குப் பதிலாக "எவ்வளவு போதுமானது?" என்ற சிந்தனை மாற்றம்.
முடிவுரை
இயற்கையைப் பாதுகாப்பது என்பது மனிதனைக் காடுகளுக்குத் திருப்பி அனுப்புவது அல்ல; மாறாக, மனிதப் பேராசைக்கு எல்லை வைப்பதுதான் உண்மையான சுற்றுச்சூழல் அரசியல்.
ஆட்சிகள் மாறும் போதெல்லாம் கல்குவாரிகள் தற்காலிகமாக மூடப்படுவதாக வரும் அறிவிப்புகள் எல்லாம், கல்லாப்பெட்டிகளைக் கைமாற்றுவதற்கான கால அவகாசம்தானே ஒழிய, நிச்சயமாகச் சுற்றுச்சூழலைக் காப்பதற்காக அல்ல.
ஊரான்
.jpeg)
மிகவும் தெளிவாக எழுதிய கட்டுரை. பிரச்சனையை சரி யாக கணித்து எழுதப்பட்ட இந்த கட்டுரை நாட்டின் எல்லா வளமும் இப்படித்தான் அரசுகளின் (அரசியல் வாதிகள்+ அதிகாரவர்க்கம்) ஒத்துழைப்புடன் கொள்ளையடிக்க படுகிறது என்றும் காட்டியுள்ளது. உங்கள் அறச்சீற்றம் பெருமிதம் தருகிறது.
ReplyDelete